இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு மதிய வெயிலில் மூன்று பானைகளில் கிணற்றிலிருந்து தண்ணீரை சுமந்து, வெறிச்சோடி இருந்த பாதையில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது 24 வயதாகும் மந்தா ரினிஜத் மயங்கி விழுந்தார். "இறந்த நபரை போல நான் தெருவில் மயங்கி கிடந்ததை கூட யாரும் பார்க்கவில்லை", என்று அவர் கூறினார். "20 நிமிடங்களுக்கு பிறகு நான் எழுந்தபோது நான் அனைத்து நீரையும் வீணாக்கி இருந்ததை பார்த்தேன். எப்படியோ நான் வீட்டிற்கு திரும்பிச் சென்று எனது கணவரை எழுப்பினேன் அவர் எனக்கு உப்பு சர்க்கரை தண்ணீர் கலந்து கொடுத்தார்", என்று கூறினார்.
இந்த ஆண்டு மம்தாவும், கல்தாரேவின் பெண்களைப் போலவே மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிணற்றுக்கு இந்த கோடைகாலத்தில் கரடுமுரடான பாதையில் நடந்து சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, இது கடந்த காலங்களில் அவர்கள் தண்ணீர் எடுக்கச் செல்லும் காலத்தை விட முன்னதாகவே இருந்தது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வடா தாலுகாவில் இருக்கும் கல்தாரே கிராமத்தில் பிப்ரவரி மாதத்திலேயே இரண்டு கிணறுகள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. கடந்த ஆண்டுகளில் கிராமத்திலிருக்கும் கிணறுகளில் உள்ள நீர் - அவர்கள் குடிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கு அதனை பயன்படுத்துகிறார்கள் - மே மாத துவக்கம் வரை அவர்களுக்கு கிடைக்கும் என்று இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு பெண்கள் தொலைதூரத்தில் உள்ள கிணறுகளுக்கு நடந்து சென்று அதில் இருக்கும் தண்ணீரை எடுத்து வர வேண்டும். ஆனால் 2019ஆம் ஆண்டு இந்த தண்ணீர் பற்றாக்குறை பல மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.
ஒவ்வொரு கோடையிலும் நாங்கள் தண்ணீர் பிரச்சனையை சந்தித்துள்ளோம் ஆனால் இந்த ஆண்டு எங்கள் நீர் ஆதாரங்கள் அனைத்துமே வறண்டு போய்க் கொண்டிருக்கின்றன என்று 42 வயதாகும் மணாலி பதுவாலே கூறுகிறார், இவரும் மம்தாவை போலவே கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பெரிய கோவில் வளாகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் நாளொன்றுக்கு 155 ரூபாய் சம்பளமாக அவருக்கு வழங்கப்படுகிறது, இவரது கணவர் அங்கேயே ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். "எங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக எங்களுக்குத் தண்ணீர் டேங்கர் ஒருமுறை கூட வந்ததில்லை மேலும் அதை வாங்குவதற்கு எங்களிடம் போதுமான பணமும் இல்லை", என்று அவர் கூறுகிறார்.
கல்தாரே கிராமத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் ஓடும் வைதர்னா நதி இங்கு வசித்து வரும் 2,474 குடும்பங்களுக்கு (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது, இம்மக்களில் பெரும்பாலானோர் கோலி மல்ஹார் மற்றும் வார்லி ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்தவர்களே. இந்த ஆண்டு மே மாதம் ஆற்றில் பாறை குவியல்கள் மட்டுமே கிடந்தது, தண்ணீர் குறைந்த அளவிலேயே இருக்கிறது. முந்தைய கோடைகாலங்களில் வைதர்னா நதியில் அதிக நீர் ஓடியதாக கல்தாரே மக்கள் கூறுகின்றனர். "ஆற்றில் எஞ்சியிருக்கும் இந்த நீரும் கால்நடைகளை குளிப்பாட்டுவதற்காகவும் மேலும் அதே அழுக்கு நீர் கிராம நீர் குழாய்களுக்கும் செல்கிறது என்று மணாலி கூறுகிறார்.











