நன்றாக இருட்டத் துவங்கிவிட்டது. “இங்கே பாம்பு எதுவும் இல்லையே?”, என்று கலவரத்துடன் கேட்டேன்.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் மேலக்காடு கிராமத்தின் ஒரு விவசாயப் பண்ணை அருகே நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். கிணறு வெட்டுபவர்களை சந்திப்பதற்காக நான் அங்கு சென்றிருந்தேன் - அந்தப் பகுதி முழுவதும் புழுதி படர்ந்து வறண்டு போயிருந்தது. பாசனத்திற்காகத் தண்ணீரைக் கண்டுபிடிப்பதே ஒரு தனி வேலையாக இருந்தது. இளையராஜா அங்குதான் வசிக்கிறார். ஒரு தனியார் பண்ணையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். மீதியிருக்கும் நேரத்தில் தன் பெற்றோரின் விவசாயப் பண்ணையில் உழுவார். அப்படியென்றால் ஒரு நாளைக்கு இரண்டு சுற்று வேலை. அவருக்கு 23 வயதுதான் ஆகிறது.

என் குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு இளையராஜா புன்னகைத்து, “ஆம்”, என்றார். சில நாட்கள் முன்புதான் ஒரு நாகராஜ பாம்பு இங்கு ஊர்ந்ததாம். நான்  இனியும் அங்கு நடக்க வேண்டுமா என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டேன். இளையராஜா ஒரு டார்ச் விளக்கை எடுத்து வந்தார்.

“பயப்படாதீர்கள், நான் உங்களுடன் கூட வருகிறேன்”, என்று உதவ முன்வந்தார். இருள் மெதுவாக எங்களை சூழ்ந்துகொள்ள, அதிலிருந்து எங்களைப் பாதுகாப்பதுபோல் அந்த டார்ச் வெளிச்சம் எங்களைச் சுற்றி ஒரு வெள்ளை வட்டத்தைப் பாய்ச்சியது. அந்த வட்டத்தோடு சேர்ந்து நாங்களும் நகர்ந்தோம். காற்று சில்லென்று வீச ஆரம்பித்தது.

பகல் முழுவதும் அடித்த வெயிலுக்கு ஆறுதலாக சூரியன் மறையும் வேளையில் மழை தாராளமாகப் பெய்திருந்தது. அந்த இரவு நடையில் மண்வாசனை மூக்கைக் கவ்வியது. தவளைகளின் சத்தம் அருகில் கேட்டது. வெட்டுக்கிளிகளின் இரவுச் சத்தம் பின்னணியில் ஒலிக்க, இளையராஜா சிரமத்துடன் மூச்சு விடுவது மையமாகக் கேட்டது. “எனக்கு ஆஸ்துமா இருக்கிறது”, என்றார் புன்னகை மாறாமல். அவர் குழந்தையாக இருக்கும்போது அவர் குடும்பம் சேலத்திலிருந்து சிவகங்கைக்குக் குடிபெயர்ந்தது. சிவகங்கையின் ஒவ்வொரு மேடு பள்ளமும், சாலையும் இளையராஜாவுக்கு அத்துப்படி. அதோ என்று ஒரு வண்டியைக் காட்டினால் அது என்ன வண்டி, யார் ஓட்டுகிறார் என்பது வரை அடையாளம் கண்டு சொல்லிவிடுவார். “23 வருடங்களுக்கு முன்பு இங்கு நிலம் மலிவாகக் கிடைத்தது. சேலத்தில் இருந்த சொத்துகளை விற்றுவிட்டு என் தந்தையும் அவர் சகோதரர்களும் இங்கு பத்து ஏக்கர் நிலத்தை வாங்கினர்”, என்றபடி டார்ச் விளக்கைப் பக்கவாட்டில் செலுத்த, இருபுறமும் மரவள்ளிக்கிழங்கு, கரும்பு வயல்கள் செழித்து வளர்ந்திருந்தன. “அப்பொழுது 10 ஏக்கர் விலை மொத்தமாகவே 50,000 ரூபாய்தான் ஆனது. இப்பொழுது ஒரு ஏக்கரே மூன்றிலிருந்து நான்கு லட்சத்திற்கு விலை போகும்”, என்றார்.
PHOTO • Aparna Karthikeyan

“ஒரு காலத்தில் இந்த இடம் அடர்ந்த புதர்க்காடாக இருந்தது. வெறும் கைகளால் என் குடும்பம் அதை அப்புறப்படுத்தியது. அதோ அந்த டியூப் லைட்டின் கீழே ஒரு கிணறு தெரிகிறதா? அது என் சித்தப்பாவிற்கு சொந்தம். அதோ அதன் பின்னால் ஒரு வீடு தெரிகிறதா? அந்த தென்னைக்குப் பின்னால் மறைந்திருக்கிறதே? அதுதான் என் வீடு!”

“என் வீடு”, என்று அவர் சொன்னபோது அதில் ஒரு பெருமிதம் தொனித்தது. அவர் வீடு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மின்வசதி வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன, என்றார். மின்வசதி வந்தவுடன் அதோடு கூடவே நவீன வசதிகளும் வந்துவிட்டன. “நீங்களே ஆசைப்பட்டாலும் மாட்டு வண்டியையோ கலப்பையையோ நீங்கள் இங்கு பார்க்க முடியாது. வீட்டில் பழைய தொலைபேசி இருந்த காலம் போய் இப்பொழுது அனைவரின் கையிலும் செல்போன் இருக்கிறது”, என்று சிரித்தபடி தன் சட்டைப்பையைத் தட்டிக்காட்டினார்.

நகரத்தில் இருப்பவர்களுக்கு கிராமங்கள் குறித்த ஒரு அழகியல் பிம்பம் இருக்கும். இளையராஜா குறிப்பிட்ட மாற்றங்கள் அந்த பிம்பத்தை உடைத்து சற்றே ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். ஆனால் இளையராஜா இந்த நவீனங்களைக் கொண்டாடுகிறார். வாழ்க்கையை அவை எளிதாக்கியிருக்கின்றன. “நம்புங்கள், முன்பெல்லாம் கரும்பை வெறும் கைகளால் வெட்டுவோம். இப்பொழுது ஒரு இயந்திரம் அறுக்க, மற்றொரு இயந்திரம் அதை சேமித்துவைத்துக்கொள்கிறது. கண்ணிமைக்கும் நொடியில் வேலை முடிந்துவிடுகிறது!”, என்றார். நேரமும் மனித உழைப்பும் மிச்சமாவதை அவர் மிகவும் வரவேற்கிறார். தன்னுடைய சிறுவயது முழுவதும் அதீதமாக உழைத்துவிட்டார்; தன் பால்ய கால நேரத்தையும் விவசாயத்திற்கே செலவிட்டுவிட்டார். நவீனத்தைக் குதூகலத்துடன் வரவேற்பதன் பின்னணியில் பால்யத்தைத் தொலைத்த சோகம் இருக்கக்கூடும்.

PHOTO • Aparna Karthikeyan

அதே நேரத்தில் அவர் வாழ்க்கைக்குள் நவீனம் புகுந்துவிட்டது என்று சொல்வதன் பொருள், அவர் தினமும் காலையில் எழுந்து ஈசி சேரில் ஒரு செய்தித்தாளை வாசித்தபடி தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார் என்பதல்ல. முட்டியளவு சகதியில் இறங்கி, குனிந்து, செடிகளைக் களைவது, பிரிப்பது, சுத்தப்படுத்துவது என்று இன்னும் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார். “வெண்டைக்காய், கத்தரிக்காய், இவை இரண்டையும் தினம் தினம் பறித்துவிடவேண்டும். கத்தரியாவது இரண்டொரு நாள் செடியில் இருக்கும். வெண்டைக்காயை அப்படியே செடியில் விட்டால் சட்டென்று இறுகிவிடும்”, என்று சிரித்தார். எனக்கு சந்தையில் எவ்வாறு வெண்டைக்காயை வாங்குகிறார்கள் என்பது நினைவுக்கு வரவே, நானும் சிரித்தேன் (புகழ்பெற்ற வெண்டைக்காய் தேர்வு; கடைக்காரருக்கு அறவே பிடிக்காத, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த வேலை - நுனியை முறிப்பது, சட்டென்று உடையாவிட்டால் அது நல்ல காய் இல்லை என்று அங்கேயே வைத்துவிடுவது!).

தினமும் சில கிலோ காய்கறிகள் தேறுகின்றன. அவை பறிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. “தினமும் அப்பா இரு சக்கர வண்டியில் அம்மாவை சந்தையில் இறக்கிவிட்டு வயலுக்கு செல்வார். அம்மா காய்கறிகளை விற்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்புவார்”, என்று அவர்களின் தினவாழ்வைப் பகிர்ந்துகொண்டார். அம்மா வீடு திரும்பும் நேரத்தில் இளையராஜா பிற வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். பிறருக்காக ஏதேனும் சகாயவேலைகள் செய்வார், அல்லது வயலில் ஏதேனும் வேலை இருக்கும். மாலை ஆறு மணி போல் வீடு திரும்பியதும் பசுக்களைப் பராமரித்து பால் கறப்பார்.

முக்கால்வாசி பேர் இங்கு பசு, ஆடு, கோழி ஆகியவற்றையே வளர்க்கின்றனர். இந்தப் பகுதியில் உள்ள பசுக்கள் பெரும்பாலும் ஜெர்சி/கலப்பின வகைகளே. காரணம், நல்ல புற்களையும் புண்ணாக்கையும் போட்டால் அவை அதிகமாகப் பால் தருகின்றன. ஆனால் எல்லா நேரங்களிலும் அவற்றிற்கு நல்ல உணவு கிடைப்பதில்லை.

PHOTO • Aparna Karthikeyan

மழை அடிக்கடி பொய்த்துப்போகிறது. “நல்ல மண் வளம் இங்கு; எல்லாமே நன்றாக விளையும். தண்ணீர் பற்றாக்குறைதான் சிக்கல். அதோ என் சித்தப்பாவின் கிணறு மொத்தம் அறுபது அடி. ஆனால் தண்ணீர் நான்கடிதான் இருக்கிறது. அதனால் அதை வெறும் தண்ணீர்தொட்டியாகத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். தண்ணீருக்கு ஆழ்துளைக் கிணறுதான். எவ்வளவு ஆழம் போகிறது என்று நினைக்கிறீர்கள்? 800 அடி, 1000 அடி...”, என்று சொல்லிக்கொண்டே போனார். அந்த ஆழத்தைக் கற்பனை செய்து பார்த்தேன், தலை சுற்றியது. மனது சற்றே கனத்தது.

அதை விட கொடுமையான காட்சி, அங்கு இருந்த தரிசு நிலங்கள். சில வருடங்களுக்கு முன்புகூட நல்ல மழையால் நெல் விளைச்சல் அதிகமாக நடைபெற்றது. அறுவடையும் தரமாக வந்தது; அங்கு வாழ்ந்த குடும்பங்களுக்கு அரிசியை வெளியிலிருந்து வாங்கும் தேவையே ஏற்படவில்லை. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக மழையும் இல்லை, நிலத்தடி நீர்மட்டமும் அதிவிரைவாகக் குறைந்துவருகிறது. விளைவு, நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. இருந்தாலும் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் இளையராஜாவின் வயலில் கரும்பு விளைச்சல் நடக்கிறது. ஒரு பக்கம் நிலங்கள் தரிசாகியிருக்க, இளையராஜாவின் பசுமை நிற வயல்கள் முரணாகத் தெரிந்தன. “என்ன செய்வது, இந்த நிலங்களெல்லாம் மீண்டும் உயிர்பெறுவது என் கைகளில் இல்லையே”, என்பதுபோல் இளையராஜா புன்னகைத்தார். அந்தப் புன்னகையிலும் ஒரு சோக முரண் தெரிந்தது.

பேசிக்கொண்டே நடக்கையில் இருள் முழுவதுமாகக் கவிழ்ந்தது. தூய வானத்தில் நட்சத்திரங்கள் மினுமினுக்க, மோட்டார் வண்டிகள் அனைத்தும் வீடு போய் சேர்ந்துவிட்டன. சென்ற பாதையிலிருந்து திரும்பி மீண்டும் மரவள்ளிக்கிழங்கு, கரும்பு வயல்களில் நடந்தோம். சித்தப்பாவின் கிணற்றை நெருங்குகையில் குளிர்ந்த காற்று இதமாக அடித்தது. ஒரு நல்ல வாசனை அந்தக் காற்றோடு வர, “ம்ம்ம்”, என்று நுகர்ந்தபடி இளையராஜாவை நோக்கிக் களிப்புடன் திரும்பினேன். “மஞ்சள் வாசனைதானே இது? சரியாகக் கண்டுபிடித்துவிட்டேனா?”, என்று கேட்டேன். அதைக் கேட்டதும் குபீரென்று சிரித்தார். சிரிப்பை அடக்கமுடியாமல் சற்றே நிலைகுலைந்ததில் டார்ச் வெளிச்சம் இப்படியும் அப்படியுமாக அந்த ஒழுங்கற்ற சாலையில் அலைபாய்ந்தது. “மஞ்சள் மாதிரியா இருக்கிறது? காலையில் இங்கு பூச்சிகொல்லி மருந்தைத் தெளித்தோம்; அந்த வாசனை இது!”

PHOTO • Aparna Karthikeyan
Aparna Karthikeyan

अपर्णा कार्थिकेयन स्वतंत्र मल्टीमीडिया पत्रकार आहेत. ग्रामीण तामिळनाडूतील नष्ट होत चाललेल्या उपजीविकांचे त्या दस्तऐवजीकरण करतात आणि पीपल्स अर्काइव्ह ऑफ रूरल इंडियासाठी स्वयंसेवक म्हणूनही कार्य करतात.

यांचे इतर लिखाण अपर्णा कार्थिकेयन