“இந்த 58 ஒட்டகங்களையும் நாங்கள் பறிமுதல் செய்யவில்லை,” என உறுதியாக சொல்கிறார் ஆய்வாளர் அஜய் அகாரே. அமராவதி மாவட்டத்தின் தலெகாவோன் தஷசார் காவல் நிலைய ஆய்வாளர் அவர். “மகராஷ்டிராவில் இந்த விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக எந்த பிரத்யேகச் சட்டமும் இல்லாததால், எங்களுக்கு அவ்வாறு செய்வதற்கான அதிகாரம் இல்லை.”
“ஒட்டகங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றன,” என்கிறார் அவர்.
அவற்றை பராமரிப்பவர்களுக்கும் நிலை அதுதான். ஐந்து பேரும் மேய்ச்சல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். நால்வர் ராபரி சமூகத்தினர். ஒருவர் ஃபகிரானி ஜாட் சமூகத்தனர். குஜராத்தின் கச்சை சேர்ந்தவர்கள் அவர்கள். இரு சமூகத்தினருமே பாரம்பரியமாக பல தலைமுறைகளாக ஒட்டக மேய்ப்பர்களாக இருக்கின்றனர். ‘விலங்கு ஆர்வலர்’ என சொல்லிக் கொள்பவர்களால் புகார் அளிக்கப்பட்டு காவலர்களால் கைது செய்யப்பட்ட ஐவருக்கும் உடனடியாக நிபந்தனையற்ற பிணை வழங்கினார் மாஜிஸ்திரேட்.
”குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒட்டகங்களை வாங்கியதற்கோ அல்லது அவற்றை தங்களின் உரிமையில் கொண்டிருப்பதற்கோ தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர்களின் வசிப்பிடத்துக்கான ஆவணங்கள் கூட அவர்களிடத்தில் இல்லை,” என்கிறார் அகாரே. பாரம்பரிய மேய்ப்பர்கள் ஒட்டகங்களுக்கான அடையாள அட்டைகளையும் அவற்றின்மீதான உரிமைக்கான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற வித்தியாசமான சூழலை வழக்கு அடைந்திருக்கிறது. உறவினர்களாலும் மேய்ச்சல் பழங்குடி சமூகங்களின் பிற உறுப்பினர்களாலும் ஆவணங்கள் அவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மேய்ப்பர்களிடமிருந்து பிரிக்கப்பட்டதால், ஒட்டகங்கள் கோசாலைகளில் சோர்வுற்றிருக்கின்றன. அங்கிருப்பவர்களுக்கு அவற்றின் பராமரிப்பு, உணவு முதலியவை பற்றி துளி கூட தெரியாது. இரண்டுமே ஒருவகை விலங்குகள் எனச் சொன்னாலும், ஒட்டகங்களும் பசுக்களும் வெவ்வேறு உணவு முறைகளைக் கொண்டவை. வழக்கு அதிக நாட்களுக்கு நீடித்தால், கோசாலைகளில் இருக்கும் ஒட்டகங்களின் நிலை வேகமாக மோசமடையும்.
*****
ஒட்டகம் ராஜஸ்தானின் மாநில விலங்கு
ஆகும். பிற மாநிலங்களில் அதைப் பழக்கப்படுத்த முடியாது.
ஜஸ்ராஜ்
ஷ்ரிஷ்ரிமால், பாரதிய ப்ரானி மித்ரா சங், ஹைதராபாத்
எல்லாமும் ஆழமான சந்தேகத்தால் தொடங்கியது.
ஜனவரி 7, 2022 அன்று, ஐந்து மேய்ப்பர்கள் கசாப்புக்காக ஹைதராபாத்துக்கு ஒட்டகங்களை கடத்திச் செல்வதாக ஹைதராபாத்தின் 71 வயது ஜஸ்ராஜ் ஷ்ரிஷ்ரிமால் தலேகவோன் தஷாகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். காவலர்கள் உடனடியாக மேய்ப்பர்களையும் ஒட்டகங்களையும் சிறைப்பிடித்தனர். ஆனால் ஷ்ரிஷ்ரிமால் மேய்ப்பர்களை மகாராஷ்டிராவில்தான் பார்த்தார். ஹைதராபாத்தில் அல்ல.
“ஒரு சக ஊழியருடன் அமராவதியிலிருந்து கிளம்பி நிம்கவன் கிராமத்தை அடைந்தோம். அங்கு ஒரு நிலத்தில் நான்கைந்து பேர் ஒட்டகங்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். 58 ஒட்டகங்கள் இருந்தன. கழுத்திலும் கால்களிலும் அவை கட்டப்பட்டிருந்தன. அதனால் அவை சரியாக நடக்க முடியவில்லை. துன்புறுத்தப்பட்டிருந்தன. சில ஒட்டகங்களுக்கு காயங்கள் இருந்தன. மேய்ப்பர்கள் அவற்றுக்கு மருந்துகள் கூட போடவில்லை. ஒட்டகம் ராஜஸ்தானின் மாநில விலங்கு. பிற மாநிலங்களில் அதைப் பழக்கப்படுத்த முடியாது. அவர்களிடம் ஆவணங்கள் இல்லை. ஒட்டகங்களை எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்பதையும் தெளிவாக சொல்லவில்லை,” எனக் குறிப்பிடுகிறது ஷ்ரிஷ்ரிமாலின் புகார்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டகங்கள் ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிகம் இருக்கின்றன. பிற சில இடங்களிலும் குறைவாக பார்க்க முடியும். அவற்றின் இனவிருத்தியும் வளர்ப்பும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மட்டும்தான் நடக்கிறது. 2019ம் ஆண்டின் 20வது கால்நடைகள் கணக்கெடுப்பு ப்படி, நாட்டின் மொத்த ஒட்டக எண்ணிக்கை வெறும் 2,50,000-தான். 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின் எண்ணிக்கையிலிருந்து 37 சதவிகித சரிவு.
பெரியளவிலான இந்த விலங்குகளை பயணிக்க வைப்பதில் திறன் பெற்றவர்கள்தான் ஐந்து மேய்ப்பர்களும். ஐவரும் குஜராத்தின் கச்சை சேர்ந்தவர்கள். ஹைதராபாத்துக்கு அவர்கள் சென்றதே இல்லை.
“சரியான பதில்கள் எனக்குக் கிடைக்காததால் சந்தேகம் வந்தது,” என்று PARI-யுடன் தொலைபேசியில் பேசுகையில் சொன்னார் ஷ்ரிஷ்ரிமால். “சட்டவிரோதமாக ஒட்டகங்கள் கறிக்கு வெட்டப்படுவது அதிகரித்துவிட்டது,” என்னும் அவர், ஐந்து வருடங்களில் 600க்கும் மேற்பட்ட ஒட்டகங்களை இந்தியா முழுக்க தனது அமைப்பான பாரதிய ப்ரனி மித்ர சங்க் மூலம் காப்பாற்றியதாகவும் சொல்கிறார்.
குல்பர்கா, பெங்களூரு, அகோலா மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் ஒட்டகங்களை காப்பாற்றியதாக கூறுகிறார். காப்பாற்றப்பட்ட ஒட்டகங்களை ராஜஸ்தானுக்கு அவரது அமைப்பு கொண்டு சென்று விட்டதாக சொல்கிறார். இந்தியாவின் பிற இடங்களைப் போல ஹைதராபாத்திலும் ஒட்டகக் கறிக்கான விருப்பம் அதிகரித்திரிக்கிறது என்கிறார். ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோரின் கருத்துகள்படி முதிய ஆண் ஒட்டகங்கள்தாம் கறிக்காக விற்கப்படுகின்றன.
பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய அமைச்சரும் விலங்கு நல அமைப்பு நடத்துபவருமான மேனகா காந்தியுடன் இயங்குபவர் ஷ்ரிஷ்ரிமால். டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பேசுகையில் மேனகா காந்தி, “உத்தரப்பிரதேசத்தின் பக்பத்திலிருந்து ஒரு பெரும் கள்ளச்சந்தை இயங்குகிறது. ஒட்டகங்கள் வங்க தேசத்துக்கும் கூட கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு அதிக ஒட்டகங்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, ஜனவரி 8ம் தேதி முதல் தகவல் அறிக்கையை காவல்துறை பதிவு செய்தது. ஒட்டக பாதுகாப்புக்கென பிரத்யேகச் சட்டம் மகாராஷ்டிராவில் இல்லாததால் விலங்குகளுகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்ட த்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
40 வயதுகளில் இருக்கும் பிரபு ரானா, ஜகா ஹிரா, முசாபாய் ஹமீது ஜாட் முதலியோர் மீதும் 50 வயதுகளில் இருக்கும் விசாபாய் சரவு மற்றும் 70 வயதுகளில் இருக்கும் வெர்சிபாய் ரானா ராபரி ஆகியோர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
58 ஒட்டகங்களையும் பராமரிப்பது பெரும் சவாலாக இருப்பதாக சொல்கிறார் ஆய்வாளர் அகாரே. பெரிய கோசாலைகளுக்கு செல்வதற்கு முன் அருகே இருந்த சிறு கோசாலையின் உதவியை இரு இரவுகளுக்கு காவலர்கள் நாடினர்.
முரண்நகை என்னவென்றால் அவற்றை இடம்பெயர்த்தும் வேலை குற்றஞ்சாட்டப்பட்டோரின் உறவினர் மற்றும் நண்பர்கள் மீதுதான் விழுந்தது. தலெகாவோன் தஷாஹரிலிருந்து அமராவதி வரையிலான 55 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒட்டகங்களை அவர்கள் இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டு சென்றனர்.
மேய்ப்பர்களுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. கச்சை சேர்ந்த மூன்று கிராமப்பஞ்சாயத்துகள், பட்டினி போடாமல் மேய்ச்சலுக்கு ஒட்டகங்களை விடுவிக்கும்படி அமராவதி காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்குக் கோரிக்கை அனுப்பியிருக்கின்றன. நாக்பூர் மாவட்டத்தின் மகர்தோகடா கிராமப் பஞ்சாயத்தும் ஆதரவுக்கு வந்திருக்கிறது. அங்கு ராபரிகள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர். பாரம்பரியமாக அவர்கள் மேய்ப்பர்கள் என்றும் ஒட்டகங்களை அவர்கள் கசாப்புக்காக ஹைதராபாத்துக்கு அழைத்து செல்லவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது. ஒட்டகங்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதா அல்லது கச்சுக்கே திருப்பி அனுப்புவதே என்பதை கீழமை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.
இவர்கள் பாரம்பரிய ஒட்டக மேய்ப்பர்கள் என்பதை நம்புவது பொறுத்தே நீதிமன்றத்தின் இறுதி முடிவு அமையும்.
*****
நம் அறியாமை இந்த பாரம்பரிய மேய்ப்பர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,
ஏனென்றால் அவர்கள் நம்மைப் போல் பார்க்கவோ பேசவோ இல்லை.
சஜல் குல்கர்னி, மேய்ச்சல் சமூகங்கள் ஆய்வாளர்
ஐவரில் மூத்தவரான வெர்சிபாய் ரானா ரபாரி நாட்டின் பெரும் பகுதிகளுக்கு தன் ஒட்டகங்களுடனும் ஆடுகளுடனும் வாழ்க்கை முழுக்கப் பயணித்திருக்கிறார். ஒருபோதும் விலங்கு துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு அவர் ஆளானதே இல்லை.
“இதுவே முதல்முறை,” என்கிறார் கச்சிமொழியில். காவல் நிலையத்தில் இருக்கும் ஒரு மரத்தடியில் கால்களை மடித்து உட்கார்ந்திருக்கிறார். கவலையுடனும் சங்கடத்துடனும் இருந்தார்.
“கச்சிலிருந்து இந்த ஒட்டகங்களை கொண்டு வந்தோம்,” என ஐவரில் ஒருவரான பிரபு ரானா ரபாரி ஜனவரி 13ம் தேதி தலேகாவோன் தஷாகர் காவல் நிலையத்தில் கூறினார். “மகாராஷ்டிராவிலும் சட்டீஸ்கரிலும் வசிக்கும் எங்கள் உறவினர்களிடம் கொடுப்பதற்காக அவற்றை அழைத்து வந்தோம்.” அவர்கள் முறையாகக் கைது செய்யப்பட்டு, பிணை கொடுக்கப்பட்ட ஜனவரி 14ம் தேதிக்கு முந்தைய நாள் அது.
கச்சின் புஜ் பகுதியிலிருந்து அமராவதி வரை யாரும் அவர்களை நிறுத்தவில்லை. யாரும் அவர்களை சந்தேகப்படவில்லை. அவர்களின் காவியப் பயணம் எதிர்பாராத திருப்பத்தால் திடுமென நிறுத்தப்பட்டது.
மகாராஷ்டிராவின் வர்தா, நாக்பூர், பந்தாரா பகுதிகளிலும் சட்டீஸ்கரின் ரபாரி வசிப்பிடங்களிலும் ஒட்டகங்கள் சேர்க்கப்படவிருந்தன.
அரை நாடோடி மேய்ச்சல் சமூகமான ரபாரி, கச் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று பிற குழுக்களைப் போல், செம்மறிகளையும் ஆடுகளையும் வாழ்வதாரத்துக்கு வளர்க்கின்றனர். விவசாயத்தில் பயன்படுத்தவும் போக்குவரத்துக்காகவும் ஒட்டகங்களை வளர்க்கின்றனர். கச் ஒட்டக வளர்ப்பாளர் சங்கத்தால் ஆவணப்படுத்தப்பட்ட ‘ உயிர் பண்பாட்டுச் சமூக முறைமை ’யின்படிதான் வளர்க்கின்றனர்.
அச்சமூகத்தின் ஒரு பகுதியான தெபாரியா ரபாரியினர், வருடத்தின் பெரும்பகுதி நீரும் தீவனமும் அபரிமிதமாக இருக்கக் கூடிய இடங்கள் தேடி நெடுந்தூரம் பயணிக்கின்றனர். வருடத்தின் பெரும்பகுதிக்கு தற்போது பல குடும்பங்கள் மத்திய இந்தியா முழுக்க வாழ்கின்றனர். அவர்களில் சிலர் குறிப்பிட்டக் காலங்களில் இடம்பெயர்வார்கள். தீபாவளிக்குப் பிறகான காலத்தில் கச்சிலிருந்து தூரத்தில் இருக்கும் தெலெங்கானா, ஆந்திரா, ஒடிசா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் முதலிய இடங்களுக்கு பயணிப்பதுண்டு.
மத்திய இந்தியாவில் மட்டும் தெபாரியா ரபாரிகளின் வசிப்பிடங்கள் குறைந்தபட்சம் 3,000 என்ற எண்ணிக்கையில் இருப்பதாக சொல்கிறார் சஜல் குல்கர்னி. மேய்ச்சல் சமூகம் மற்றும் பாரம்பரிய கால்நடை வளர்ப்பாளர்களை பற்றி ஆய்வு செய்பவர் அவர். நாக்பூரைச் சேர்ந்தவர். Revitalising Rainfed Agriculture Network (RRAN) என்கிற அமைப்பின் பயிற்சிப் பணியில் இருக்கும் குல்கர்னி சொல்கையில், ஒரு வசிப்பிடத்தில் 5-10 குடும்பங்கள் இருக்கலாம் என்கிறார். கறிக்காக ரபாரிகள் வளர்க்கும் ஒட்டகங்களும் செம்மறி மற்றும் ஆட்டு மந்தைகளும் இருக்கும் என்கிறார்.
ரபாரிகள் உள்ளிட்ட மேய்ச்சல் சமூகங்கள் பற்றியும் அவர்களின் கால்நடை வளர்ப்புக் கலாசாரத்தைப் பற்றியும் பத்தாண்டுகளுக்கு மேலாக குல்கர்னி ஆய்வு செய்கிறார். கைது மற்றும் சிறைப்பிடிப்பை பற்றி சொல்கையில், “இச்சம்பவம் மேய்ச்சல் சமூகங்களைப் பற்றிய புரிதலின்மையையே சுட்டிக் காட்டுகிறது. நம் அறியாமை இந்த பாரம்பரிய மேய்ப்பர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அவர்கள் நம்மைப் போல் பார்க்கவோ பேசவோ இல்லை.”
ஆனால் ரபாரிகளின் சில குழுக்கள் ஒரு இடத்தில் தங்கும் வாழ்க்கைக்கு அதிகமாகப் பழக்கப்படத் தொடங்கியிருக்கின்றனர் என்கிறார் குல்கர்னி. குஜராத்தில் அவர்கள் பாரம்பரிய வேலையிலிருந்து விலகி முறையான கல்வி மற்றும் வேலைகள் நோக்கி செல்கின்றனர். மகாராஷ்டிராவின் சில குடும்பங்கள் இங்கு சொந்தமாக நிலம் வைத்திருக்கின்றன. உள்ளூர் விவசாயிகளுடன் இணைந்து பணிபுரிகின்றனர்.
“அவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இணக்கமான உறவு இருக்கிறது,” என்கிறார் குல்கர்னி. உதாரணமாக விவசாயம் இல்லாத காலங்களில் ரபாரிகள் தங்களின் செம்மறி மற்றும் ஆடுகளை விவசாய நிலங்களில் மேய விடுகின்றனர். மறுபக்கத்தில் இந்த நடைமுறையில் கிடைக்கும் விலங்குகளின் கழிவால் மண்வளம் அதிகரிக்கிறது. “இத்தகைய உறவுகளை அவர்களிடம் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு அவர்களின் அருமை தெரியும்,” என்கிறார் அவர்.
58 ஒட்டகங்களும் சேர்க்கப்பட வேண்டிய ரபாரிகள் மகாராஷ்டிரா அல்லது சட்டீஸ்கரில் இருக்கின்றனர். அம்மாநிலங்களில் அவர்கள் கிட்டத்தட்ட தங்களின் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்திருக்கின்றனர். எனினும் கச்சில் இருக்கும் உறவினர்களுடன் நெருக்கமான பிணைப்பையும் கொண்டிருக்கின்றனர். ஃபகிரானி ஜாட்களோ நீண்ட தூரங்களுக்கு பயணிப்பதில்லை. ஆனால் அற்புதமாக ஒட்டக வளர்ப்பாளர்கள் அவர்கள். ரபாரிகளுடன் கலாச்சார பிணைப்புக் கொண்டவர்கள்.
மேய்ச்சலுக்கான மையத்தை புஜ் பகுதியில் கொண்டிருக்கும் தன்னார்வ தொண்டு அமைப்பான சஹ்ஜீவனைப் பொறுத்தவரை, கச்சின் எல்லா மேய்ச்சல் சமூகங்களிலும் மொத்தமாக 500 ஒட்டக வளர்ப்பாளர்கள் இருக்கின்றனர்.
“நாங்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டோம். அதுவே உண்மை. கச்சின் ஒட்டக வளர்ப்பாளர்கள் சங்கத்தின் 11 உறுப்பினர்களிடமிருந்து வாங்கப்பட்டவைதான் இந்த 58 ஒட்டகங்களும். மத்திய இந்தியாவில் இருக்கும் உறவினர்களுக்காக வாங்கப்பட்டவை,” என PARIயிடம் தொலைபேசியில் கூறினார் சஹ்ஜீவனின் இயக்குநர் ரமேஷ் பட்டி.
ஐவரும் ஒட்டகப் பயிற்சியில் மதிநுட்பம் வாய்ந்தவர்கள். அதனால்தான் அவற்றை இந்த நெடிய கடுமையான பயணத்தில் கொண்டு செல்ல அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்கிறார் பட்டி.
*****
நாங்கள் ஒரு நாடோடிச் சமூகம்; பல நேரம் எங்களிடம் ஆவணங்கள் இருப்பதில்லை…
மஷ்ரும்பாய் ரபாரி, வர்தாவைச் சேர்ந்த சமூகத்
தலைவர்
கச்சில் இருந்துத் தொடங்கிய தேதி அவர்களுக்கு நினைவில் இல்லை.
வெவ்வேறு இடங்களில் இருந்த வளர்ப்பாளர்களிடமிருந்து ஒட்டகங்களை நாங்கள் ஒன்பதாவது மாதத்தில் (செப்டம்பர் 2021) சேகரிக்கத் தொடங்கி, பச்சாவிலிருந்து (கச்சில் இருக்கும் தாலுகா) தீபாவளி முடிந்ததும் (நவம்பரின் தொடக்கம்) நடக்கத் தொடங்கினோம்,” என்கிறார் அவமானப்படுத்தப்பட்ட பிரபு ரானா ரபாரி. “எங்களின் இலக்கான சட்டீஸ்கரின் பிலாஸ்பூரை இவ்வருட பிப்ரவரி மாத இறுதிக்குள் அடைந்திருப்போம்.”
சிறைப்பிடிக்கப்பட்ட நாள் வரை அந்த ஐவரும் கச்சிலிருந்து 1,200 கிலோமீட்டர் பயணித்திருந்தனர். பச்சாவிலிருந்து அவர்கள் அகமதாபாத் வழியாகவும் பின் மகாராஷ்டிராவின் நந்துர்பார், புசாவால், அகோலா, கராஞ்சா மற்றும் தலேகாவோன் தஷாஹர் வழியாக பயணித்தனர். அவர்கள் மகாராஷ்டிராவின் வார்தா, நாக்பூர், பந்தாரா ஆகிய பகுதிகளுக்கு சென்றிருப்பார்கள். பிறகு பிலாஸ்பூரை அடைய துர்க் மற்றும் ராய்ப்பூருக்கு (மூன்றுமே சட்டீஸ்கர் பகுதிகள்) சென்றிருப்பார்கள். புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் சம்ருதி நெடுஞ்சாலை வழியாகவும் வாஷிம் மாவட்டத்தின் கராஞ்சா டவுனுக்கு பிறகு அவர்கள் நடந்திருந்தனர்.
“ஒரு இளம் ஒட்டகம் நாளொன்றுக்கு எளிதாக 20 கிலோமீட்டர்கள் நடக்க முடியுமென்றாலும் நாங்கள் 12-15 கிலோமீட்டர்கள்தான் நடந்தோம்,” எனக் குறிப்பிடுகிறார் முசாபாய் ஹமித் ஜாட். ஐவரில் அவர் இளையவராக இருக்கலாம். “இரவு ஆனதும் நின்று தங்கிவிட்டு, அதிகாலையில்தான் மீண்டும் கிளம்புவோம்.” உணவை அவர்களே சமைத்துக் கொள்வார்கள். மதியத்தில் சற்று நேரம் ஒட்டகங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அவர்களும் சிறு உறக்கம் போட்டுவிட்டு, மீண்டும் தொடங்குவாகள்.
வெறுமனே ஒட்டகம் மேய்த்ததற்காக கைது செய்யப்பட்டதும் அவர்கள் அச்சமடைந்துவிட்டனர்.
“பெண் ஒட்டகங்களை நாங்கள் விற்பதில்லை. போக்குவரத்துக்கு ஆண் ஒட்டகங்களையே பயன்படுத்துவோம்,” என்கிறார் மஷ்ருபாய் ரபாரி. வர்தா மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த சமூகத் தலைவர். “ஒட்டகங்கள்தான் எங்களின் பாதங்கள்.” சிறைபிடிக்கப்பட்டிருக்கும் 58 ஒட்டகங்களும் ஆண் ஒட்டகங்கள்.
’மஷ்ரு மாமா’ என அன்புடன் அழைக்கப்படும் அவர், காவலர்களால் ஐவரும் பிடிக்கப்பட்ட நாளிலிருந்து அவர்களுடன் தங்கியிருக்கிறார். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பது, அமராவதியில் வழக்கறிஞர்கள் பிடிப்பது, காவலர்களுக்கு மொழிபெயர்ப்பில் உதவுவது, வாக்குமூலங்களை பதிவு செய்வது முதலிய வேலைகளை செய்கிறார். மராத்தி மற்றும் கச்சி மொழிகள் தெரிந்தவர். துண்டு துண்டாக பல இடங்களில் இருக்கும் ரபாரி வசிப்பிடங்களுக்கு இடையே இருக்கும் முக்கியமான தொடர்பு அவர்தான்.
“இந்த ஒட்டகங்கள் மகாராஷ்டிரா, தெலெங்கானா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் எங்களின் 15-16 ஆட்களுக்கு சேர்க்கப்படவிருந்தது,” என்கிறார் மஷ்ருபாய். “அவர்கள் ஒவ்வொருவருக்கும் 3-4 ஒட்டகங்கள் சேர்ந்திருக்க வேண்டும்.” பயணத்தின்போது ரபாரிகள் ஒட்டகங்கள் மீது தங்களின் உடைமைகளையும், குழந்தைகளையும், செம்மறிக் குட்டிகளையும், மொத்தத்தில் தங்களின் உலகத்தையே ஏற்றுவார்கள். எப்போதும் அவர்கள், மகாராஷ்டிராவின் தங்கர் சமூகத்தினர் போல, மாட்டு வண்டிகளை பயன்படுத்த மாட்டார்கள்.
“இந்த ஒட்டகங்களை எங்களின் ஊரில் இருக்கும் ஒட்டக வளர்ப்பாளர்களிடமிருந்து வாங்குகிறோம்,” என்கிறார் மஷ்ருபாய். “பழைய ஒட்டகங்களுக்கு பதிலாக 10-15 இளம் ஒட்டகங்கள் இங்கு தேவைப்படுகையில், கச்சியில் இருக்கும் எங்கள் உறவினர்களுக்கு சொல்லி விடுவோம். ஒட்டகம் வளர்ப்பவர்கள் பிறகு பெரும் அளவில் ஒட்டகங்களை, பயிற்சி பெற்ற ஆட்களுடன் அனுப்பி வைப்பார்கள். அவர்களுக்கு ஒட்டகம் வாங்குபவர்கள் கூலி கொடுப்பார்கள். அதிக நாட்கள் எடுக்கும் பயணம் எனில் மாதத்துக்கு அவர்களுக்கு 6,000 - 7,000 ரூபாய் கிடைக்கும். ஓர் இளம் ஒட்டகத்தின் விலை 10,000லிருந்து 20,000 ரூபாய் வரை இருக்கும் என்கிறார் மஷ்ருபாய். ஒரு ஒட்டகம் 3 வயதிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கும். 20-22 வயது வரை வாழும். “ஓர் ஆண் ஒட்டகம் 15 வருடங்கள் வரை வேலை பார்க்கும்,” என்கிறார் அவர்.
“இவர்களிடம் ஆவணங்கள் இல்லை என்பது உண்மைதான்,” என ஒப்புக் கொள்கிறார் மஷ்ருபாய். “எங்களுக்கு அவை முன்னெப்போதும் தேவைப்படவில்லை. ஆனால் இனி எதிர்காலத்தில் நிச்சயம் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சூழல்கள் மாறி வருகிறது.”
இந்தப் புகார் அவர்களையும் ஒட்டகங்களையும் தேவையில்லாத சிக்கலுக்குள் கொண்டு விட்டுவிட்டது என முணுமுணுக்கிறார் அவர். “நாங்கள் ஒரு நாடோடிச் சமூகம்; பல நேரங்களில் எங்களிடம் ஆவணங்கள் இருப்பதில்லை (இங்கும் அதுவே பிரச்சினை).”
*****
அவற்றை துன்புறுத்தினோம் என்பதுதான் எங்கள் மீதான குற்றச்சாட்டு. ஆனால்
அவற்றை மேய விடாமல், இங்கு அடைத்து வைத்திருப்பதை விட பெரிய துன்புறுத்துதல் எதுவும்
இல்லை.
பர்பத் ராபரி, நாக்பூரின் மூத்த ரபாரி
சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் ஒட்டகங்கள் யாவும் இரண்டிலிருந்து ஐந்து வயதுக்குள்ளான இளம் ஒட்டகங்கள். கச்சி இனத்தைச் சேர்ந்தவை. கச்சி நிலப்பரப்பில் காணக் கிடைப்பவை. இவ்வகை ஒட்டகங்கள் கிட்டத்தட்ட 8,000 என்கிற எண்ணிக்கையில் இன்று கச்சியில் இருக்கின்றன.
இந்த இனத்தின் ஆண் ஒட்டகங்கள் 400லிருந்து 600 கிலோ வரை எடை கொண்டிருக்கும். பெண் ஒட்டகங்கள் 300லிருந்து 540 கிலோ வரை எடை கொண்டிருக்கும். World Atlas -ன்படி குறுகிய நெஞ்சு, ஒற்றைத் திமில், நீளமான வளைந்த கழுத்து, திமிலிலும் தோள்களிலும் முடி ஆகியவை ஒட்டகத்தின் முக்கியமான அம்சங்கள். தோலின் நிறம் பழுப்பு நிறம் தொடங்கி, கறுப்பு, வெள்ளை வரை பல நிறங்களில் இருக்கும்.
பழுப்பு நிறத்தில் இருக்கும் கச்சியின் இந்த ஒட்டகங்களுக்கு திறந்த வெளியில் மேய்வது பிடிக்கும். பல வகைச் செடிகளையும் இலைகளையும் உண்ணும். மரத்திலிருக்கும் இலைகளாக இருந்தாலும் காட்டு இலைகளாக இருந்தாலும் சரி அவை உண்ணும். மேய்ச்சல் நிலத்திலும் விவசாய நிலத்திலும் மேய்பவை.
ஒட்டகங்கள் வளர்ப்பது கடினமான விஷயமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆகி வருகிறது கடந்த பத்தாண்டுகளில் காடுகளுக்குள்ளும் சதுப்பு நிலங்களிலும் செல்வதற்கு பல தடைகள் போடப்பட்டிருக்கின்றன. அப்பகுதிகளில் நேரும் வளர்ச்சியின் தன்மையும் ஒட்டகங்கள் மற்றும் அதன் வளர்ப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்களை பாதிக்கிறது. எனவே முன்பு கிடைத்த அளவுக்கு தீவனம் இப்போது அவற்றுக்குக் கிடைக்கவில்லை.
பிணை கிடைத்தபிறகு ஐவரும் அமராவதியில் இருக்கும் உறவினர்களுடன் சேர்ந்து விட்டனர். அங்குதான் வேலி அடைத்த திறந்த மைதானத்தில் ஒட்டகங்கள் இருக்கின்றன. அவற்றின் ஆரோக்கியத்தைக் குறித்து ராபரிகள் கவலைப்படுகின்றனர். ஏனெனில் அவற்றுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த அளவுக்கு தீவனம் கிடைக்கவில்லை.
ராபரிகள் சொல்வது போல், கச்சைத் (அல்லது ராஜஸ்தான்) தாண்டி ஒட்டகங்கள் வாழப் பழக்கப்படுத்த முடியாது என்கிற கூற்றும் உண்மை அல்ல. “எங்களுடன் பல காலமாக அவை நாடு முழுவதும் சுற்றி வாழ்ந்து வருகின்றன,” என்கிறார் அசாபாய் ஜெசா. பந்தாரா மாவட்டத்தின் அஸ்காவோனில் வாழும் அனுபவம் வாய்ந்த ராபரி அவர்.
மற்றுமொரு மூத்த மேய்ப்பரான பர்பத் ராபரி சொல்கையில், “எங்கள் மீதான குற்றச்சாட்டு அவர்களை நாங்கள் துன்புறுத்தினோம் என்பதே. ஆனால் அவற்றை மேய விடாமல், இங்கு சிறைப்பிடித்து வைத்திருப்பதைக் காட்டிலும் பெரிய துன்புறுத்துதல் எதுவும் இருக்க முடியாது,” என்கிறார்.
”மாடுகள் உண்பதை ஒட்டகங்கள் உண்ணுவதில்லை,” என்கிறார் நாக்பூரின் சிர்சி கிராமத்தில் வாழும் ஜகாரா ரபாரி. இந்த ஒட்டகங்களிலிருந்து ஜகாராபாய்க்கு மூன்று வர வேண்டியிருந்தன.
கச்சி ஒட்டகங்கள் வேம்பு, கருவேலம், அரசமரம் உள்ளிட்ட பல வகை மரம் மற்றும் செடி வகைகளை உண்ணும். கச்சில் அவை மரங்களை மேயும். வறண்ட மலைப்பாங்கான பகுதிகளில் தீவனம் உண்ணும். அவற்றின் பால் கொண்டிருக்கும் சத்துக்கு இவைதான் காரணங்கள். இந்த இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒட்டகம் நாளொன்றுக்கு 3-4 லிட்டர் பால் கொடுக்கிறது. கச்சி மேய்ப்பர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் நிலைக்கு ஒட்டகங்களை அழைத்துச் செல்வார்கள். இந்த ஒட்டகங்கள் தாகமாக இருக்கும் நேரத்தில், ஒரு முறையிலேயே 70-80 லிட்டர் நீரை 15-20 நிமிடங்களில் குடிக்கும். நீரின்றி பல காலத்துக்கு அவற்றால் இருக்க முடியும்.
கோசாலையில் இருக்கும் 58 ஒட்டகங்களுக்கும் முடக்கத்தில் உணவு உண்ணும் பழக்கமில்லை. முதிய ஒட்டகங்கள் அங்குக் கிடைக்கும் வேர்க்கடலை மிச்சங்களை உண்ணுவது போன்ற பழக்கம் இளையவற்றுக்கு இல்லை என்கிறார் பர்பத் ரபாரி. அமராவதிக்கு வரும் வழியில் அவை சாலையோரத்திலும் விவசாய நில மரங்களிலும் கிடைக்கும் இலைகளை உண்டு வந்தன என்கிறார் அவர்.
ஓர் இளைய ஒட்டகம் ஒரு நாளில் 30 கிலோ தீவனம் உண்ணும் என்கிறார் பர்பத்.
கோசாலையில் இருக்கும் மாடுகளுக்கு சோயாபீன், கோதுமை, சோளம், தானியங்கள் முதலிய பயிர்களின் மிச்சமும் பசும்புற்களும் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன. அவைதான் இப்போது சிறைபிடிக்கப்பட்டிருக்கும் ஒட்டகங்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஒட்டகங்களும் மேய்ப்பர்களும் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கேள்விப்பட்டதும் மகாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பல பத்தாண்டுகளாக வாழும் பர்பத், ஜகாரா மற்றும் பிற ரபாரிகள் அமராவதுக்கு வந்துவிட்டனர். ஒட்டகங்களை கவலையுடன் அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.
“எல்லா ஒட்டகங்களும் கட்டிப்போடப்படுவதில்லை. சிலவை மட்டும் கட்டிப்போடப்படும். இல்லையெனில் அந்த சிலவை மற்ற ஒட்டகங்களை கடித்து விடும். வழிபோக்கர்களுக்கு தொந்தரவு கொடுக்கும்,” என்கிறார் கோசாலையில் தற்போது தங்கியிருக்கும் ஜகாரா ரபாரி. நீதிமன்றத்தின் முடிவுக்காக அவர் காத்திருக்கிறார். “இளம் ஒட்டகங்கள் ஆக்ரோஷமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது,” என்கிறார் அவர்.
ஒட்டகங்கள் திறந்தவெளி மேய்ச்சலுக்காக திறந்துவிடப்பட வேண்டுமென ரபாரிகள் வலியுறுத்துகின்றனர். காவலர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட ஒட்டகங்கள் இறந்துபோன சம்பவங்களும் முன்பு நடந்திருக்கிறது.
ரபாரிகளிடம் ஒட்டகங்கள் விரைவிலேயே ஒப்படைக்கப்படக் கோரும் மனு, உள்ளூர் வழக்கறிஞர் மனோஜ் கல்லாவால் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கச்சில் இருக்கும் உறவினர்களும் ஒட்டகம் வாங்கவிருந்தவர்களும் அவர்களின் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி வழக்கு நடத்தவும் வழக்கறிஞருக்குக் கட்டணம் செலுத்தவும் வசிப்பிடத்துக்கும் பணம் திரட்டி உதவுகின்றனர். சரியான தீவனம் ஒட்டகங்களுக்குச் சேர்க்கவும் முயன்று வருகிறார்கள்.
இவற்றுக்கிடையில்தான் கோசாலையில் ஒட்டகங்கள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றன.
“தொடக்கத்தில் அவற்றுக்குத் தீவனம் கொடுப்பதில் எங்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால் இப்போது என்ன தீவனம் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரிகிறது. ரபாரிகளும் எங்களுக்கு உதவிக் கொண்டு இருக்கிறார்கள்,” என்கிறார் கோசாலையின் செயலாளரான தீபக் மந்த்ரி. “அருகே 300 ஏக்கர் நிலம் எங்களுக்கு இருக்கிறது. அங்கிருந்து நாங்கள் பசுமையான தீவனத்தை ஒட்டகங்களுக்குக் கொண்டு வருகிறோம். “தீவனத்துக்கு பற்றாக்குறை இல்லை,” என்கிறார் அவர். கால்நடை மருத்துவர் குழு ஒன்று வந்து காயம்பட்ட ஒட்டகங்களுக்கு சிகிச்சை அளித்திருக்கின்றனர். “அவற்றை இங்கு வைத்து பராமரிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்கிறார் அவர்.
“ஒட்டகங்கள் சரியாக சாப்பிடவில்லை,” என்கிறார் பர்பத் ரபாரி. நீதிமன்றம் ஒட்டகங்களை விடுவித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் என அவர் நம்புகிறார். “இது அவற்றுக்கு சிறை போல,” என்கிறார் அவர்.
பிணையில் வெளிவந்த வெர்சிபாயும் பிற நால்வரும் வீட்டுக்கு செல்ல விரும்புகின்றனர். ஆனால் ஒட்டகங்களுடன் திரும்ப விரும்புகின்றனர். “ஜனவரி 21, வெள்ளிக்கிழமை அன்று தமாங்கவோனின் கீழமை நீதிமன்ற மாஜிஸ்திரேட், 58 ஒட்டகங்களுக்கான உரிமை ஆவணங்களை காட்டும்படி ஐந்து மேய்ப்பர்களிடமும் கேட்டிருக்கிறார்,” என்கிறார் ரபாரிகளின் வழக்கறிஞர் மனோஜ் கல்லா PARI-யிடம். “அவர்கள் ஒட்டகங்கள் வாங்கியதாக சொல்லும் நபர்கள் கொடுத்த ரசீதுகளாகவும் அந்த ஆவணங்கள் இருக்கலாம்.”
இவற்றுக்கிடையில், ஒட்டகங்கள் ஒப்படைக்கப்பட விரும்பும் ரபாரிகளும் அமராவதியின் கோசாலையில் அவர்களின் உறவினர்கள் மற்றும் ஒட்டகம் வாங்குபவர்களுடன் தங்கியிருக்கின்றனர். எல்லாருடைய சிந்தனையும் தமாங்காவோன் நீதிமன்றத்தில்தான் இருக்கிறது.
சிறைப்படிக்கப்பட்ட ஒட்டகங்கள் எதுவும் புரியாமல் இருக்கின்றன.
தமிழில் : ராஜசங்கீதன்