பட்வட்கான் கிராமத்தில் வயல்வெளிகள் சூழ்ந்த புழுதி படிந்த சாலையில் நடந்து சென்று, நாம் ஒரு சிறிய வீட்டை அடைகிறோம். இளஞ்சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்ட சுவர்களும், மட்டமான சிமெண்ட் மேற்கூரையை கொண்ட சிறிய வீடு அது. அந்த வீட்டிற்கு வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது மராத்தி மொழியில் உள்ளது. வாடாமல்லி நிறத்தில் சுவரில் ‘திங்கி‘ என்று எழுதப்பட்டுள்ளது. அதற்கு ‘தீப்பொறி‘ என்று அர்த்தம். 8 முதல் 10 கவிதைகளை கொண்ட தொகுப்பின் தலைப்பு அது. “எனது தந்தையின் கவிதைகள் எழுதப்படவில்லை. ஆனால், அவை எனது நினைவில் உள்ளது“ என்று பிரதீப் சால்வே கூறுகிறார்.
தந்தை அவருக்கு விட்டுச்சென்ற பரம்பரை சொத்தாக அவர் (ஷகீர் ஆத்மாராம் சால்வே, கவிஞர்) எழுதிய 300க்கும் மேற்பட்ட கவிதைகளை பிரதீப் கூறுகிறார். “அவை அனைத்தும் வரதட்சணை, மது மற்றும் அதனால் ஏற்படும் அழிவுகளை குறிப்பதாகும்“ என்று அவர் கூறுகிறார். அதில் பாபாசகேப் டாக்டர் அம்பேத்கர் கூறிய தலித்கள், பெண்கள், விவசாயம், கல்வி மற்றும் சமூக புரட்சி ஆகியவற்றின் தாக்கம் இருக்கும். ‘திங்கி‘க்கு (அங்கு அவரது சகோதரர் வசிக்கிறார்) அருகில் உள்ள ‘ராஜாரத்னா‘ என்ற தனது வீட்டில் அமர்ந்துகொண்டு வரதட்சணைக்கு எதிராக அவரது தந்தை இயற்றிய கவிதையை கூறுகிறார்.
“हुंड्याची पद्धत सोडा, समतेशी नाते जोडा”
‘‘வரதட்சணையை விட்டொழியுங்கள், சமத்துவத்துடன் இணையுங்கள்“
மஹாராட்ஷ்ராவின் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கான் தாலுகாவில் 21 ஆண்டுகளுக்கு முன் க்ரைண்ட் மில்ஸ் சாங்க் திட்டத்துக்காக சில பெண்களைச் சந்தித்து அவர்களின் பாடல்களைப் பதிவு செய்த அதே இடத்தில் பாரியின் தொடருக்காக இப்போது இந்தச் சந்திப்பு நடக்கிறது.





