யஸ்வந்த் கோவிந்த், தனது 10 வயது மகள் சாதிகா பள்ளிக்குச் செல்வதில் மகிழ்ச்சியடைகிறார். "அவள் படிக்கிறாள், அவளுடைய மதிய உணவும் கவனித்துக் கொள்ளப்படுகிறது", என்று அவர் நாற்காலிக்காக கட்டைகளை செதுக்கிய படியே கூறுகிறார். சாதிகா அவளது நாளை ஒரே ஒரு குவளை தேநீருடன் துவங்குகிறாள். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவிற்கு பிறகு அவள் இரவு உணவு மட்டுமே உண்கிறாள், அந்த இரவு உணவும் இக்குடும்பம் பெறும் ரேஷன் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இடையில் அவள் வேறு எதுவும் உண்பதில்லை என்று கூறுகிறார்.
"எங்களுக்கு 25 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ சர்க்கரை மட்டுமே ரேஷன் கடையில் இருந்து கிடைக்கிறது", என்று கோசாலி கிராமத்தில் வசிக்கும் 47 வயதாகும் கோவிந்த், தனது வேலையில் இருந்து கண்ணெடுக்காமல் கூறுகிறார்; அவர் எப்போதாவது தான் தச்சு வேலை செய்கிறார் இல்லையேல் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறார். மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் மொகதா தாலுகாவில் உள்ள அவரது கிராமத்தில் உள்ள கோவிந்த் மற்றும் பெரும்பாலான மக்கள் தக்கர் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். "எங்களுடையது ஏழு பேர் கொண்ட குடும்பம்", என்று அவர் கூறுகிறார். "தானியங்கள் அனைத்தும் 15 நாட்களில் தீர்ந்துவிடும்". விடுமுறை நாட்கள் அல்லது கோடை விடுமுறையில் பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைகள் வீட்டில் மதிய உணவு சாப்பிடும் போது ரேஷன் பொருட்கள் இன்னும் வேகமாக தீர்ந்துவிடும், என்று கூறுகிறார்.
கோவிந்தைப் போலவே பால்கர் மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள பல பெற்றோர்களுக்கு வாரத்தில் 6 நாட்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பது தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு ஊக்கப்படுத்த கூடிய காரணியாகும். மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 1.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் (2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி). இங்குள்ள பல வீடுகள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை பொருட்களையே அவை சார்ந்துள்ளது. "குறைந்தது என் மகள் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது வயிறு நிரம்பும் படி சாப்பிடுகிறாள்", என்று கோவிந்த் கூறுகிறார்.







