சாருபாலா கலிந்தியின் கையில் இருந்த வண்ணமயமான கைக்குட்டை, ஒரு கணம் மின்னலைப் போல மின்னியது. சிவப்பு மற்றும் ஊதா நிற பாவடையும் ஜுமர் பாடலுக்கு ஏற்ப தீவிரமாக சுழன்று ஆடுகிறது. நிகழ்ச்சிக்காக கூடியிருந்த இசைக்கலைஞர்கள் ஒற்றுமையாக இசைக்கத் துவங்குகின்றனர்.
மேற்கு வங்கத்தின் அர்ஷா தாலுகாவில் உள்ள சேனபானா கிராமத்தில் - வயதானவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 80 - 90 பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், 65 வயதான, சாருபாலா விறுவிறுப்பாக நடனமாடிக் கொண்டிருக்கிறார்.
ஜூமர் என்ற வார்த்தை நடனக்கலைஞர்கள் அணிந்திருக்கும் சலங்கையில் இருந்து வரும் ஒலியில் இருந்து வந்த சொல் என்று கூறப்படுகிறது. இந்த நடன வடிவம் முக்கியமாக மேற்கு வங்கத்தின் தென்மேற்கு பகுதிகளிலும், ஜார்கண்ட் அருகில் உள்ள பகுதிகளிலும் பிரபலமாக உள்ளது (இதன் மாறுபட்ட வடிவம் அசாமில் நிகழ்த்தப்படுகிறது). பாரம்பரியமாக, ஜுமர் பாடல்களை இயற்றிய கவிஞர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர், மேலும் அவர்களுடைய பாடல்கள் சமூக பிரச்சனைகள் மற்றும் வறட்சி, வெள்ளம், அரசியல் மற்றும் பிற பாதிப்புகளை பற்றி பேசுகின்றன. கிருஷ்ணா மற்றும் ராதாவுக்கு இடையிலான அன்பும், ஏக்கமும், ஜுமர் பாடல்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் கருப்பொருள் ஆகும்.
சாருபாலாவின் சொந்த வாழ்க்கையே இந்தக் கருப்பொருட்களில் சிலவற்றை பிரதிபலிக்கிறது. அவர் ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள புருலியா II தாலுகாவில் உள்ள பெல்மா கிராமத்தில் வசித்து வந்தார். இவர்களது குடும்பம் கலிந்தி சமூகத்தை சேர்ந்தது, சில மாநிலங்களில் இது ஒரு பட்டியல் இனமாக வகைப் படுத்தப்பட்டுள்ளது - இவரது தந்தை மோகன் கலிந்தி, இவருக்கு 16 - 17 வயது இருக்கும் போது, அருகிலுள்ள டும்டுமி கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி மற்றும் கட்டுமான தொழிலாளியான, சங்கர் கலிந்திக்கு இவரை மணம்முடித்துக் கொடுத்தார்.
சங்கருக்கு அப்போது 20 வயது இருக்கும், மேலும் அவர் கிடைக்கும் வேலைகளைச் செய்து வந்தார். அவர் உடல்ரீதியாக வன்கொடுமை செய்பவராக இருந்தார். அவரது கொடுமை கொடூரமாக இருந்ததால் சாருபாலா அவரை விட்டு விலகி மீண்டும் அவரது தந்தையிடமே சென்றுவிட்டார். ஆனால், மோகன் அவரை கவனித்துக் கொள்வதற்கு தன்னால் முடியாது என்றும் தான் மிகவும் எளிமையான நிலையில் இருப்பதாகவும் கூறி அவரை திரும்பிச் செல்லும்படி கூறினார். எனவே சாருபாலா வீடற்றவராக மாறினார் மேலும் சிறிது காலம் அவர் வீதிகளில் வாழ்ந்து வந்தார்.

















