இந்தப் பருவத்தில் குளிர் காலம் கடுமையாக இருப்பதால் அப்துல் மஜீத் வானி மகிழ்ச்சியாக இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் காஷ்மீரில் சில பகுதியில் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸுக்கும் கீழாக இருந்ததைப் போலவே இந்த வருடமும் ஏற்பட்டு அவர் உருவாக்கும் காங்ரீகளுக்கு தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர் நம்புகிறார்.
55 வயதாகும் வானி, மத்திய காஷ்மீரின் படுகாம் மாவட்டத்தில், சரார் - இ - சரீப் இல் வேலை செய்து வருகிறார். ஸ்ரீநகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த நகரம் காங்ரீீயை உருவாக்கும் கலைஞர்களுக்கான மையமாக விளங்குகிறது - அது கரியால் நிரப்பப்பட்ட மண்பானை கையால் நெய்யப்பட்ட பிரம்பு கூடையுடன் இருக்கும். காஷ்மீரில் உள்ள பலர் இந்த சிறிய சூடேற்றியை அதன் கைப்பிடியை பிடித்து தங்கள் ஒரு ஃபெஹ்ரானுக்குள் (குளிர்காலத்தில் அணியப்படும் ஒரு பாரம்பரிய முழங்கால் நீள கம்பளி ஆடை) வைத்து, காஷ்மீரின் கடுமையான குளிர்காலத்தில் தங்களை சூடேற்றிக் கொள்ள முயற்சிப்பர். சில ஆய்வுகள் காஷ்மீருக்கு என்றே தனித்துவமான 'காங்ரீ புற்றுநோயைப்' பற்றி பேசுகின்றன, கங்கினை நீண்ட காலத்திற்கு உடல் அருகில் வைத்திருப்பதால் இது ஏற்படுகிறது; அது ஒரு தனிக்கதை)
சரார் - இ - சரீப் இல் உள்ள கனில் மொஹல்லாவில் வசிக்கும் 30 வயதான உமர் ஹசன் தார், "எங்கள் பகுதி பிரம்பால் முடைந்த அழகிய காங்ரீகளுக்கு பெயர் பெற்றது", என்று கூறுகிறார். கைவினைக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் காங்ரீயை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள காடுகளிலிருந்து வில்லோ மரக்குச்சிகள் கூடைகள் செய்வதற்காக சேகரிக்கப்படுகிறது அல்லது விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது, அதனை மென்மையாக வேக வைத்து, கையால் செய்யப்பட்ட கூர்மையான கருவியை (உள்ளூரில் சப்பூன் என்றழைக்கப்படும், இரண்டு தடிமனான மரக் குச்சிகளை குறுக்காக வைத்து மண் தோண்டப் பயன்படுகிறது) வைத்து சன்னமாக சீவி உரிக்கப்படுகிறது; பின்னர் ஊறவைத்தல், உலர வைத்தல் மற்றும் சாயம் ஏற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்படி தயார் செய்யப்பட்ட பிரம்பு பின்னர் மண் பானையை சுற்றி முடையப்படுகின்றது.
இந்த செய்முறைக்கு ஒரு வாரம் ஆகும், அதற்குள் பிரம்பு முழுவதுமாக காய்ந்திருக்கும். பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் குளிர்காலம் துவங்குவதற்கு முன்பே காங்ரீகள் தயாரிக்கப்படுகின்றன, தேவை ஏற்படுவதைப் பொறுத்து குளிர்காலத்திலும் தயாரிக்கப்படுகிறது, அது பிப்ரவரி இறுதி வரை கூட செல்லும்.
முன்னரெல்லாம் காஷ்மீரின் காங்ரீகள் வெறும் மண்பானையாக மட்டுமே இருந்தது, அது உள்ளூர் குயவர்களிடமிருந்து வாங்கப்பட்டது - இந்த வில்லோ மரத்திலான கூடை இல்லை. காலப்போக்கில் சில கைவினை கலைஞர்கள் அந்த கூடைக்கு பல்வேறு வடிவமைப்பினை கொடுக்க ஆரம்பித்து விட்டனர் அதனால் பழைய விலையை விட இது சற்று அதிகம் ஆகிவிட்டது. காங்ரீயின் ஆரம்ப விலை சுமார் 150 ரூபாய் இதனை தயாரிக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும், மிகவும் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட காங்ரீயை முடைய மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும், இதற்கு சுமார் 1800 ரூபாய் வரை ஆகும் என்று என்னிடம் கூறினார் மேலும் இது அவருக்கு 1000 முதல் 1200 ரூபாய் வரை லாபம் ஈட்டித் தரும் என்று கூறினார்.














