மல்யுத்த போட்டிகளுக்கு தொடர்ந்து 12 மணி நேரம் வர்ணனை செய்து “நேரலை வர்ணனைக்கு” புதிய அர்தத்தை கொடுத்துள்ளார். அதுவும் பொது ஒலிபரப்பி அமைப்பு மூலம், நீங்கள் நினைப்பது போல் ரேடியோவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அல்ல. தற்போது நடைமுறையில் உள்ள குஸ்தி வர்ணனை வடிவத்தை சங்கர்ராவ் பூஜாரி தான் கண்டுபிடித்தார். சில சமயங்களில் இவரின் வசதிக்காக நிகழ்ச்சியின் தேதியை கூட மாற்றியமைப்பார்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள். கூடியிருக்கும் கூட்டத்திடம் வெறுமனே பேசாமல், அவர்களை ஆட்டத்திற்குள் உள்ளிழுக்க உதவி செய்கிறார்.
“மோசமான நிலையிலிருந்த மல்யுத்தத்தை புதுப்பிக்க சங்கர் பூஜாரியின் வர்ணனை உதவி செய்துள்ளதாக” கூறுகிறார் பெனாபூரில் உள்ள சங்கிலியில் வசிக்கும் முன்னாள் மல்யுத்த வீரரும் ஆசிரியருமான ராஜேந்திர ஷிண்டே. அவரது விவரணையும் விளக்கம் அளிக்கும் விதமும் மக்கள் கூட்டத்தை கவர்ந்துள்ளது. “இது பல விஷயங்களுக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது. இப்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கூட மல்யுத்த போட்டிகளை மக்கள் நடத்த ஆரம்பித்துள்ளார்கள். நிக்ழ்ச்சிகள் அதிகமாக, அதிகமாக, மல்யுத்த வீரர்களும் அதிகமாகிறார்கள்”.
துரதிஷ்டவசமாக, இவரது வர்ணனையை கேட்க வேண்டுமானால் போட்டி நடைபெறும் மைதானத்தில் பார்வையாளராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்காக மைதானத்தை சுற்றிலும் பல ஒலிபெருக்கிகள் வைத்திருப்பார்கள். ஏன் அவர் ரேடியோவில் பேசுவதில்லை? “அது கொஞ்சம் சிரமமானது” என்கிறார் பூஜாரி. “எங்கள் அமைப்பும் வடிவமும் அதற்கு ஒத்து வராது, குறிப்பாக கிராம அளவில். நாங்கள் வர்ணனை செய்யும்போது, அவ்வப்போது முக்கிய விருந்தினர்கள் – பிரபலமான முன்னாள் மல்யுத்த வீரர்கள் அல்லது அந்த தொகுதியின் எம்எல்ஏ - வருகை குறித்து அறிவிப்போம். இதனால் அடிக்கடி குறுக்கீடு ஏற்படும். மேலும் இது பல மணி நேரங்களுக்கு நீளக்கூடியது”.
வரானாநகரில் நடந்த போட்டியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக பெரும் கூட்டத்தை தக்கவைத்ததற்கு தான் உதவியதை நினைத்து பெருமிதம் கொள்கிறார். பாகிஸ்தானிலிருந்து போட்டியாளர்கள் தாமதமாக வந்தது பெரும் சவாலாக இருந்தது. மல்யுத்த வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த தகவல் களஞ்சியமாகவும், ஆட்டத்தை பகுப்பாய்வு செய்யும் வித்தகராகவும் இருக்கிறார் பூஜாரி. அவரும் ஒரு மல்யுத்த வீரர் என்பதால் ஆட்டத்தின் உத்திகளை கணிப்பதில் நியுணராக இருக்கிறார். “8 வயதாக இருக்கும்போது குஸ்தி விளையாட ஆரம்பித்தேன். ஆனால் 1972-ம் ஆண்டு வந்த பெரும் பஞ்சத்தால் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பிறகு விளையாடுவதை கைவிட்டேன். விவசாயம் பிரச்சனைக்குள்ளாகும் போது, அது குஸ்திக்கும் பிரச்சனையாக இருக்கும்” என்கிறார் பூஜாரி.


