மீனா மெஹரின் அன்றாடம் எப்போதும் பரபரப்பானது. தனது சொந்த கிராமமான சத்பதியில் படகு உரிமையாளர்களிடம் மொத்த சந்தையில் மீன்களை ஏலம் எடுக்க அதிகாலை 4 மணிக்குச் செல்கிறார். காலை 9 மணியளவில் திரும்பும் அவர், ஓரிரு வாரங்களில் விற்பதற்காக வீட்டின் பின்புறம் மீன்களுக்கு உப்பு வைத்து தெர்மகோல் பெட்டிகளில் உலர வைக்கிறார். கருவாடுகளை விற்பதற்காக 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்கார் சில்லறை சந்தைக்கு பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் செல்கிறார். சரக்கு விற்காமல் தேங்கிவிட்டால் அவற்றை சத்பதி சில்லறை சந்தையில் விற்க முயல்கிறார்.
ஏலம் விடும் படகுகளின் எண்ணிக்கை குறைவதால், கருவாட்டின் அளவும் குறைந்து வருகிறது. “மீன்கள் இல்லை, இப்போது எதை விற்பது?” என கேட்கிறார் கோலி சமூகத்தைச் சேர்ந்த (ஓபிசி பிரிவில் உள்ளது) 58 வயது மீனா. மழைக்காலத்திற்கு பிறகு அவர் தொழிலை பன்முகப்படுத்தி சத்பதி மொத்த சந்தையில் படகு உரிமையாளர்கள் அல்லது வியாபாரிகளிடமிருந்து புத்தம்புதிய மீன்களை வாங்கி விற்று சம்பாதிக்க முயல்கிறார். (அவர் எனினும் தனது வருவாய் குறித்த விவரங்களை நம்மிடம் தெரிவிக்கவில்லை.)
குடும்பத்தின் தேவைகளைத் தீர்க்க அவரது 63 வயது கணவரான உல்ஹாஸ் மெஹரும் அதிகம் வேலை செய்ய வேண்டி உள்ளது. இவர் அவ்வப்போது ஓஎன்ஜிசி கணக்கெடுப்பு படகுகளில் தொழிலாளியாக, மாதிரி சேகரிப்பாளராக செல்கிறார். எனினும் மும்பையில் பெரிய படகுகளில் ஆண்டில் இரண்டு மாதங்கள் செய்து கொண்டிருந்த வேலையை 4-6 மாதங்கள் என விரிவுப்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்தில் ‘கோல்டன் பெல்ட்’ என அழைக்கப்படுகிறது கடலோர கிராமமான சத்பதி. வங்கவராசி (பாம்பே வாத்து மீன்) எனும் புகழ்பெற்ற மீனுக்காகவும், இனப்பெருக்கத்திற்கான கடல் படுக்கைக்கும் அறியப்படுகிறது. ஆனால் சத்பதி – தஹானு மண்டலத்தில் 1979ஆம் ஆண்டு மிக அதிக அளவாக 40,065 டன் இருந்த வந்தவராசி மீன் வரத்து 2018ஆம் ஆண்டு மாநில உற்பத்தியில் 16,576 டன்கள் என மருகிவிட்டது.










