“எங்கள் முன்னோர்கள், நீண்ட காலமாக இந்த பான்ஸ் கீத் கருவியை வைத்து பாடல் பாடி வந்தனர்“ என்று பஞ்ச்ராம் யாதவ் கூறுகிறார். நான் மத்திய சட்டீஸ்கரில் உள்ள பிலாய் என்ற நகரில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு நடந்த கண்காட்சியில் அவரை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மே மாதத்தில் கண்காட்சி திடலில் சுற்றிக்கொண்டிருந்தபோது, அங்கு எதிரொலித்த அந்த கீத்தின் இசை என்னை ஈர்த்தது. 3 ஆண்கள் பான்ஸ் பஜாவை வாசித்துக்கொண்டிருந்தார்கள். நீண்ட, நன்றாக அலங்கரிக்கப்பட்ட, உருளைவடிவ மரத்தாலான காற்று இசைக்கருவி. ராவத் இன ஆண்களால் வாசிக்கப்படும் கருவி. யாதவ ஜாதியினரின் துணைக்குழு. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக துர்க் (பிலாய் நகரம் அங்குதான் உள்ளது) பாலுத், தம்தரி, கரியபாண்ட், கான்கேர் மற்றும் மஹாசமுண்ட் மாவட்டத்தில் வசிப்பவர்கள்.
50 மற்றும் 60 வயதுகளின் இறுதியில் உள்ள மூன்று இசைக்கலைஞர்கள் அந்தக்கருவியை வாசித்தனர். உடன் சேர்ந்து பாடும் சிலர் கிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற மேய்ப்பவர்களைப் பற்றி கதை கூறி, ஒத்திசைந்து பாடல் பாடினர்.
4 முதல் 5 அடி உள்ள பான்ஸ் பஜா ஆடு, மாடுகள் மேய்ப்பவர்களின் பாரம்பரிய கருவி. கலைஞர்கள் (சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இக்கருவிகளை வாசிப்பார்கள்) பஜாவை தாங்களாகவோ அல்லது உள்ளூர் தச்சர்களின் உதவியுடனோ உருவாக்கிக்கொள்வார்கள். சரியாக மூங்கிலை தேர்ந்தெடுத்து, 4 துளைகள் இட்டு, கம்பளி நூலினால் செய்த மலர்கள் மற்றும் வண்ணத்துணிகள் கொண்டு அலங்கரிப்பார்கள்.




