முகமது கவுசியுதீன் அசீம் கடையின் குறுக்கே கட்டப்பட்ட கயிறில் வண்ணத் தாள்களும் திருமண அழைப்பிதழ்களும் சுவரோட்டிகளும் மாட்டப்பட்டிருக்கின்றன. காய்ந்த புல் வகையால் தயாரிக்கப்பட்ட எழுதுகோலை வெள்ளைத்தாளின் மீது உருது மொழியில் அல்லா என எழுத அவர் பயன்படுத்துகிறார். எதை செய்வதற்கு முன்னும் இதை செய்கிறார் அவர். “நான் சித்திர எழுத்துக் கலைஞனாக 28 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும்போது இக்கலையை கற்றுக் கொண்டேன். 1996ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பிறகு இக்கடையை திறந்தேன்,” என்கிறார் அவர்.
44 வயது அசீம் ஹைதராபாத்துக்கு மத்தியில் வாழ்கிறார். அவரின் மூன்று மாடி கடை சார்மினார் அருகே இருக்கும் சட்டா பஜாரின் ஜமால் சந்தையில் இருக்கிறது. நகரத்தின் பழமையான சந்தைகளில் ஒன்று அது. நூற்றாண்டுகளாக தொடரும் கட்டாட்டி (உருது மற்றும் அரபு சித்திர எழுத்துக்கலை) கொண்ட அச்சுக்கடைகள் இருக்கும் சந்தை.
தக்காணத்தின் குதுப் ஷகி அரசர்களின் காலத்தை (1518-1687) சேர்ந்தது கட்டாட்டி எழுத்துக்கலை. அதை எழுதுபவர்கள்தான் (கட்டாட்கள் என அழைக்கப்படுபவர்கள்) அரபு மற்றும் உருது மொழிகளில் குரான் எழுதியதாக வரலாறு உண்டு. கையால் எழுதப்பட்ட இத்தகைய குரான்களில் சிலவை ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள அருங்காட்சியகங்களில் இடம்பெற்றிருக்கின்றன. குதுப் ஷகி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் கூட கட்டாட்டி எழுத்துகளை பார்க்க முடியும். உருது எழுத்துக்கலை அல்லது அழகிய எழுத்தை சிறப்பு நிகழ்வுகளுக்கு எழுத விரும்புபவர்கள் திறமையான எழுத்துக் கலைஞர்களை தேடி சட்டா பஜாருக்கு வருகிறார்கள். உருது பள்ளிகளும் மதராசாக்களும் கூட அவற்றின் சின்னங்களை வடிவமைக்க இங்கு வருவதுண்டு.
ஊழியர்கள் தாள்களை அடுக்கும் சத்தம், வாடிக்கையாளர்களின் குரல், அச்சு இயந்திரங்களின் சத்தம் ஆகியவற்றுக்கு மத்தியில் அசீம் அமைதியாக வேலை பார்க்கிறார். “இக்கலையை செய்பவனாக என்னை நான் கூறிக் கொண்டாலும் மக்கள் என்னை திறமை படைத்த எழுத்துக் கலைஞன் என சொல்கின்றனர்,” என்கிறார் அவர். கட்டாட்டியில் இலக்கணம் முக்கியம். ஒவ்வொரு எழுத்துருவும் எழுத்தும் ஒரு இலக்கணத்தை கொண்டிருக்கும். உயரம், அகலம், ஆழம், புள்ளிகளின் இடைவெளி கூட முக்கியம். எழுத்தின் அழகு, இலக்கணத்தை குலைக்காமல் நீங்கள் எழுதுகோலை எப்படி லாவகமாக சுற்றுகிறீர்கள் என்பதை சார்ந்து அமைகிறது. நுணுக்கமான பொருத்தமான கை அசைவுகள்தான் முக்கியம்.
சட்டா பஜாரின் பிற எழுத்து கலைஞர்களை போலல்லாமல் அசீம் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஆறு நாட்கள் உழைக்கிறார். “அரபு மொழியில் கிட்டத்தட்ட 213 கட்டாட்டி எழுத்துருக்குள் உள்ளன. அவை அனைத்தையும் கற்க 30 வருடங்களேனும் ஆகும். திறமையாக எழுதும் பயிற்சி பெற ஒரு ஆயுட்காலம் கூட ஆகும்,” என்கிறார் அவர். “இக்கலையில் ஒரு ஆயுட்காலத்தையே நீங்கள் செலவழித்தாலும் அது போதாமல்தான் இருக்கும்.”
திருமண அழைப்பிதழில் 45 நிமிடங்களில் வேகமாக எழுதி முடிக்கிற ஒரு பக்க வடிவமைப்புக்கு எழுத்துக் கலைஞர்கள் 200லிருந்து 300 ரூபாய் வரை கட்டணம் பெறுகின்றனர். அந்த வடிவத்தை வாடிக்கையாளர்கள் அச்சகங்களில் பின்னர் பிரதியெடுத்துக் கொள்கின்றனர். 10 எழுத்துக் கலைஞர்கள் மட்டும் மிஞ்சியிருக்கும் நகரத்தில், அதிக வேலைகள் கிடைக்கும் ஒரு நாளில், ஒவ்வொருவரும் 10 வடிவமைப்பு வேலைகள் வரை பெறுகின்றனர்.
சார்மினாருக்கு அருகே இருக்கும் கான்சி பஜாரில் வசிக்கும் 53 வயது அஃப்சல் முகமது கான் 1990களில் இந்த வேலை செய்வதை நிறுத்தினார். “என்னுடைய தந்தையான கவுஸ் முகமது கான் அவரது காலத்தில் திறமையான எழுத்துக் கலைஞராக திகழ்ந்தார்,” என்கிறார் அவர். “அவர் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இதார-இ-அதாபியத்-இ-உர்துவில் (ஹைதராபாத் நகரில் இருக்கும் சித்திர எழுத்துக் கலை பயிற்சி நிலையம்) பயிற்சி கொடுத்திருக்கிறார். நாங்கள் சியசத் என்கிற உருது நாளிதழில் ஒன்றாக வேலை பார்த்தோம். கணிணிகள் வந்த பிறகு நான் வேலை இழந்தேன். விளம்பரங்களில் பணிபுரிய தொடங்கினேன். இக்கலை இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும். நாங்கள்தான் இக்கலையின் கடைசி வரிசை கலைஞர்கள்,” என்கிறார் விடைபெறும் பார்வையோடு.
1990களுக்கு மத்தியில் உருது எழுத்துருக்கள் கணிணிமயமாக்கப்பட்டன. வாடிக்கையாளர்களும் டிஜிட்டல் அச்சு பக்கம் கவனத்தை திருப்பினர். விளைவாக, எழுத்துக் கலைஞர்களுக்கான தேவை குறைந்தது. சியசத் போன்ற நாளிதழ்களும் டிஜிட்டல்மயமாகி தலைப்புச் செய்திகள் எழுத மட்டுமென ஒன்றிரண்டு எழுத்துக் கலைஞர்களை வேலையில் வைத்திருக்கிறது. பிறர் வேலையிழந்தனர். சிலர் சட்டா பஜாரில் கடைகள் திறந்து திருமண அழைப்பிதழ்கள், சின்னங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றுக்கு சித்திர எழுத்துகள் எழுத தொடங்கினர்.
இக்கலையை பாதுகாக்க அரசின் ஆதரவு பெரியளவில் இல்லாததால், கட்டாட்டி துயர நிலையில் இருப்பதாகவும் அழியும் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் எழுத்துக் கலைஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இளைஞர்களுக்கு இதில் நாட்டமில்லை. இக்கலையை பயிலும் சிலரும் அது கேட்கும் சிரத்தை இல்லாததால் கைவிட்டுவிடுகின்றனர். இன்னும் பிறர் அதை நேர விரயமாகவும் எதிர்காலம் இல்லாத விஷயமாகவும் பார்க்கின்றனர்.
30 வயதுகளில் இருக்கும் முகமது ஃபகீமும் ஜைனுல் அபெதினும் விதிவிலக்குகள். 2018ம் ஆண்டு மறைந்த அவர்களின் தந்தை முகமது நயீம் சபெரி எழுத்துக் கலை நிபுணர். உருது மற்றும் அரபு எழுத்துக்கலையில் வண்ணங்களை பயன்படுத்திய மூத்தவர்களில் ஒருவர். மகன்கள் நடத்தும் இக்கடையை அவர்தான் தொடங்கியிருக்கிறார். உருது மற்றும் அரபு மட்டுமின்றி ஆங்கில சித்திர எழுத்துக் கலையிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். குவைத், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு உண்டு.
வேலைநாள் சட்டா பஜாரில் முடியும் நேரத்தை நெருங்கிவிட்டதால், எழுத்துக் கலைஞர்கள் அவர்களின் எழுதுகோல்களை பத்திரமாக வைத்துவிட்டு, மை பெட்டிகளை தள்ளி வைத்து, நமாஸ் செய்துவிட்டு வீட்டுக்கு செல்கிறார்கள். இக்கலை அழிந்துவிடுமா என அசீமை கேட்டதும் அவர் பதற்றமடைகிறார். “அப்படி சொல்லாதீர்கள்! எங்களின் கடைசி மூச்சு வரை, நாங்கள் கஷ்டப்பட்டாலும் இக்கலையை தொடரச் செய்வோம்.” சுவரில் ஒட்டப்பட்டிருந்த அவரை பற்றி வெளியான ஒரு ஆங்கிலப் பத்திரிகை செய்தி மங்கி, கிழிந்திருந்தது அவரின் கலையை போல்.
இக்கட்டுரையின் ஒரு பிரதி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பத்திரிகையான ‘UOH Dispatch’-ல் ஏப்ரல் 2019-ல் பிரசுரமானது.
தமிழில்: ராஜசங்கீதன்