கொரோனா வைரஸ் குறித்த தனது முதல் உரையில், பிரதமர் நரேந்திர மோடி நம் அனைவரையும் பானைகளையும், பாத்திரங்களையும் பயன்படுத்த வைத்து 'தீய சக்தி'களை துரத்தி அடித்தார்.
அவரின் இரண்டாவது உரையில், நம் அனைவரையும் பெரும் பீதியில் ஆழ்த்தினார்.
பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு வரும் வாரங்களில் எப்படி உணவுக்கும் மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கும்வழிசெய்வது என்பது பற்றி ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடாதது, பெரும் அச்சத்தை தூண்டிவிட்டுள்ளது. கடைகளுக்கும் சந்தைகளுக்கும் நடுத்தர மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்; ஆனால், இது ஏழைகளுக்கு அவ்வளவு சாத்தியமல்ல. பணிக்காக நகரங்களில் இடம்பெயர்த்த மக்களுக்கு தங்களின் கிராமங்களை திரும்புவது எளிதல்ல. இது சிறு தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கு இது சாத்தியமில்லை. குறுவை சாகுபடியை பூர்த்திசெய்ய முடியாத விவசாயங்களுக்கு இது சாத்தியமில்லை; அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு அது இருக்கும் பட்சத்தில், இடையில் சிக்கிக்கொண்டு தவிப்பவற்களுக்கும் இதுவே நிலை. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் கோடானகோடி இந்தியர்களுக்கும் இது இயலாத காரியம்!
மார்ச் 26ம் தேதியன்று, நிதி அமைச்சர் சில திட்டங்களை அறிவித்தார் - அதில் ஒரு சிறிய ஆறுதலான அறிவிப்பு: வரும் மூன்று மாதக் காலத்திற்கு ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்றார். அதாவது, பொது விநியோக முறையின்கீழ் அளிக்கப்படும் 5 கிலோவுடன் சேர்த்து அளிக்கப்படும். அதிலும், தற்போது மலிவான விலைக்கு விற்கப்படும் இந்த 5 கிலோவும் இலவசமாக கிடைக்குமா அல்லது வழக்கம் போல விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்பது பற்றி சரியாக குறிப்பிடவில்லை. அதற்கு பணம் செலுத்தவேண்டுமெனில், இந்த திட்டத்தாலும் எந்த பயனும் இல்லை. இந்த திட்டங்களில் பல கூறுகள், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகைகளில் அடங்கியதே. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்கீழ், வழங்கவேண்டி இருக்கும் ரூ.20 ஊதிய உயர்வு இன்னும் நிலுவையில் இருக்கின்றது; அவர்களின் பணி நாள்களை மேலும் அதிகரிக்கப்படும் என எங்காவது குறிப்பிட்டிருக்கின்றனரா? ஒருவேளை அவர்கள் அப்படி பணியில் இறங்கினால், எந்த மாதிரியான பணிகளை செய்வார்கள்? எந்த மாதிரியான சமூக இடைவெளி முறைகளை அவர்கள் பின்பற்றுவார்கள்? பல வாரங்களுக்கு செய்யவேண்டிய வேலைகளை அளிக்கும் வரை மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் உடல்நலம் அதற்கு ஒத்துழைக்குமா? நாம் இந்த சட்டத்தில்கீழ், தினமும் அனைத்து கூலித்தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் வேலை இருக்கிறது, இல்லை என்பதைத் தாண்டி , இந்த நெருக்கடி முடியும் வரை, கட்டாயம் தினக்கூலி வழங்கவேண்டும்.
பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ், ரூ.2000 சலுகை ஏற்கனவே உள்ளது; ஆனால், அதுவும் நிலவையில் உள்ளது - இது என்ன நன்மை விளைவித்தது? மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இறுதியில் செலுத்தப்படுவதற்கு பதிலாக, முதல் மாதத்திலேயே முன்பணமாக அளிக்கப்படுகிறது. இந்த தொற்று நோய்க்கு எதிராக செயல்படுத்தப்படும் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 1.7 லட்ச கோடி ரூபாய் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து நிதி அமைச்சர் தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை. இந்த தொகையில் எது பழையது அல்லது ஏற்கனவே இருக்கும் திட்டத்தின்கீழ் எது மீண்டும் இணைக்கப்பட்ட தொகை? - இவையனைத்தும் அவசர நடவடிக்கையாக ஏற்றுகொள்ளும் அளவுக்கு தகுதியை பெறவில்லை. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் இரண்டு தவணையாக, ஒருமுறை மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பால் என்ன பயன்? பிரதமர் மக்கள் நிதி திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.500 வழங்கப்படுவதால் என்ன பயன்? இவை பெயருக்கு என்று செய்யப்படும் செயல்களைவிட மிகவும் மோசமானது; வெறுப்பூட்டக்கூடியவை.
சுய உதவி குழுக்களுக்கு தற்போது கடன் கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு அளிக்கப்படும் கடன் தொகையின் வரம்பை உயர்வது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்? இந்த அவரச நடவடிக்கை அறிவிப்புகள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவேண்டும் என தவித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்? இந்த அறிவிப்புகள் அவர்களுக்கு உதவும் என்று கூறுவது ஆதாரமற்றது. அவரச நடவடிக்கைகள் உருவாக்குவதில் தோல்வி ஏற்பட்டு ஆபத்தாக இருக்கும் நிலை எனில், இந்த அறிவிப்புகளுக்கு பின்னால் இருக்கும் அணுகுமுறை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு பெருகி வரும் பிரச்சனைகள் குறித்து எந்த ஒரு தெளிவும் இருப்பதாக தெரியவில்லை.






