பெண்கள் தங்கள் தலையில் மல்லிகைப்பூவையும், கனகாம்பரத்தையும் சூடியிருந்தனர், மேலும் தங்களுடய சிவப்பு, நீலம், பச்சை மற்றும் அடர்சிவப்பு நிறச்சேலைகளில் சிவப்பு நிற பதக்கத்தை அணிந்திருந்தனர். இவ்வாரத்தின் அமைதியானதொரு செவ்வாய் கிழமையின் மதியானத்தில் தகானுவின் இரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் இவர்களது நிறங்கள் ஒளிவீசச் செய்துகொண்டிருந்தது. மும்பைக்குத் தெற்கே 100 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து படிக்கும் மாணவர்களுக்கும், வடக்கே சில கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து உம்பர்காவுன் போன்ற நகரத்திற்கு பணிக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கும், இன்ன பிற பயணிகளுக்கும் மத்தியில் இப்பெண்களும் இரயிலுக்காக காத்திருந்தனர்.
இப்பெண்கள் அனைவரும் வார்லி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள், இவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தின் தகானு வட்டத்தின் பிற இனப் பெண்கள் மற்றும் ஆண்களுடன் இணைந்து விடுவர்.
இவர்கள் அனைவரும் டில்லிக்குச் சென்று நவம்பர் 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்திய பாராளுமன்றத்தை நோக்கிய அணிவகுப்பில் கலந்து கொள்ளப் போகின்றனர். இக்குழுவானது, அகில இந்திய கிசான் சபா (ஏ.ஐ.கே.எஸ்) உட்பட நாட்டிலுள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கு ஒரு குடை அமைப்பாக செயல்படுகிறது. தகானு இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் இவர்களும் ஏ.ஐ.கே.எஸ் ன் உறுப்பினர்களாவர். அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று விவசாய நெருக்கடியை மையப்படுத்திய மூன்று வார பாராளுமன்ற சிறப்பு அமர்வு, அதில் பெண் விவசாயிகளின் கோரிக்கைகளின் மீதான மூன்று நாள் கலந்துரையாடல்களும் அடங்கும்.









