சோகன் சிங் டிடாவின் மரணத்துக்கு எதிரான மனோபாவம் பல வாழ்க்கைகளை நிலத்திலும் நீரிலும் காப்பாற்றியிருக்கிறது. புலே சக் கிராமத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் புகை மற்றும் தூசுப்படலத்திலிருந்து ஒரு கடவுளைப் போலதான் அவர் வெளிப்படுவார். தன் மோட்டார் பைக்கில் காய்கறிகளை விற்க வருவார். ஆனால் முக்குளிக்கும் திறமைக்குதான் அவர் பிரபலம். பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு அருகே இருக்கும் அவரது ஊருக்கு அருகே உள்ள நீர்ப்பாசன கால்வாய்களில் குதித்து பாதுகாப்பாக மக்களை கரைக்குக் கொண்டு வந்து சேர்ப்பார்.
“நீரில் மூழ்குபவர்களை காப்பாற்றுவது என் வேலை இல்லை. ஆனாலும் நான் செய்கிறேன்,” என்கிறார் 42 வயது சோகன். கடந்த 20 வருடங்களாக இதை அவர் செய்து வருகிறார். “‘நீர்தான் வாழ்க்கை’ என நினைப்பீர்கள். ஆனால் அது மரணத்தையும் தரும் என்பதை நான் ஓராயிரம் முறை பார்த்திருப்பேன்,” என்கிறார் சோகன் இத்தனை வருடங்களில் அவர் கரைக்கு சேர்ப்பித்த சடலங்களை குறித்து.
குர்தாஸ்பூரிலும் அதன் அண்டை மாவட்டமான பதான்கோட்டிலும் கால்வாயில் யாரேனும் விழுந்து விட்டால் முதலில் அழைக்கப்படுபவர் சோகன்தான். அது விபத்தா அல்லது தற்கொலையா என யோசிக்காமல், “தண்ணீரில் விழுந்துவிட்டார் என்றதும் நான் நீரில் இறங்கி விடுவேன். அவர் உயிரோடு இருக்க விரும்புவேன்,” என்கிறார் சோகன். இறந்து போயிருந்தால், “உறவினர்கள் அவரின் முகத்தை இறுதியாக பார்க்க விரும்புவேன்,” என்கிறார் அவர் நிதானமாக. ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பு அவரின் கூற்றை நிறைக்கிறது.
குறைந்தது 2-3 சடலங்களையேனும் சோகன் ஒரு மாதத்தில் கால்வாயிலிருந்து வெளியே எடுக்கிறார். அவருடைய அனுபவத்தை தத்துவப்பூர்வமாக சொல்கிறார், “வாழ்க்கை ஒரு சூறாவளி போல. ஒரே நேரத்தில் தொடங்கி முடியும் வட்டம் அது,” என.
புலே சக் அருகே இருக்கும் கிளை கால்வாய்கள் ராவி நதியின் நீரை பஞ்சாபில் குர்தாஸ்பூர், பதான்கோட் உள்ளடக்கிய பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பாரி தோப் கால்வாயின் மேற்பகுதி (UBDC) கொண்டிருக்கும் 247 கிளைகளைச் சேர்ந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலையான இந்த கால்வாய் அமைப்பு ராவி மற்றும் பீஸ் ஆறுகளுக்கு இடையே இருக்கும் பாரி தோப் (இரண்டு ஆறுகளுக்கு இடையே இருக்கும் பகுதி தோப் எனக் குறிக்கப்படுகிறது) பகுதிக்கு நீர் வழங்குகிறது.
தற்போது இருக்கும் கால்வாயின் தொடக்கம் 17ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷாஜகான் கட்டிய முந்தைய அமைப்பில் இருக்கிறது. பிறகு அது மகாராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சிக்கு விரிவுபடுத்தப்பட்டு 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியால் நீர்ப்பாசன கால்வாயாக மேம்படுத்தப்பட்டது. இன்று UBDC தோப் மாவட்டங்களினூடாக ஓடி, 5.73 ஹெக்டேர் நிலத்துக்கு பாசனம் வழங்குகிறது.
புலே சக் மக்கள் கால்வாயை ‘பெரிய கால்வாய்’ என அழைக்கின்றனர். நீர் நிலைக்கு அருகே வளர்ந்ததில் சோகன் அதிக நேரம் கால்வாய்க்கருகே செலவழித்திருக்கிறார். “என் நண்பர்களுடன் நான் நீந்துவேன். நாங்கள் குழந்தைகளாக இருந்தோம். கால்வாய்களும் ஓடைகளும் மரணங்களையும் தருவிக்கும் என்ற சிந்தனை அற்றிருந்தோம்,” என்கிறார் அவர்.
2002ம் ஆண்டில்தான் முதன்முறையாக சடலம் தேட அவர் கால்வாய்க்குள் இறங்கினார். கால்வாயில் மூழ்கிய ஒருவரை கண்டுபிடிக்கும்படி ஊர்த் தலைவர் அவரிடம் கூறினார். “சடலத்தை கண்டுபிடித்து கரைக்குக் கொண்டு வந்தேன்,” என்கிறார் அவர். “ஒரு சிறுவனின் உடல். சடலத்தை என் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தபோதே நீருடனான என் உறவு முற்றிலும் மாறிவிட்டது. நீர் கனமாக தெரிந்தது. என் இதயமும் கனத்தது. அந்த நாளில்தான் ஆறு, கால்வாய், கடல், பெருங்கடல் உள்ளிட்ட எல்லா நீர்நிலைகளும் பலியை வேண்டுவதாக உணர்ந்தேன். அவை உயிரைக் கேட்கும்,” என்கிறார் சோகன். “நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்தானே?”
அவரின் ஊரிலிருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பதாலா, முகேரியன், பதான்கோட் மற்றும் திபிடி ஆகிய ஊர்களில் இருக்கும் மக்கள் உதவிக்கு அவரைதான் தேடுகின்றனர். தூர இடங்களிலிருந்து அழைக்கப்பட்டால், இரு சக்கர வாகனத்தில் அவர் அழைத்து செல்லப்படுகிறார். பிற நேரங்களில் காய்கறி வண்டி இணைக்கப்பட்ட அவருடைய மோட்டார் பைக்கிலேயே இடத்துக்கு சென்று விடுகிறார்.
ஒரு நபர் காப்பாற்றப்பட்டாலோ ஒரு சடலம் மீட்கப்பட்டாலோ உறவினர்கள் சில நேரங்களில் 5000 - 7000 ரூபாய் கொடுத்திருப்பதாக சொல்கிறார் சோகன். ஆனால் பணம் வாங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை. காய்கறி விற்று அன்றாடம் கிடைக்கும் 200- 400 ரூபாய் மட்டும்தான் அவருடைய வருமானம். சொந்தமாக நிலம் இல்லை. எட்டு வருடங்களுக்கு முன் நேர்ந்த விவாகரத்துக்குப் பிறகு 13 வயது மகளை அவர் மட்டும்தான் பார்த்துக் கொள்கிறார். 62 வயது தாயையும் அவர் பார்த்துக் கொள்கிறார்.
பல நேரங்களில் ஆபத்து எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்படுவதுண்டு என்கிறார் சோகன். மூன்று வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூருகிறார். ஒரு பெண் திபிடியிலுள்ள கால்வாயில் (புலே சக்கிலிருந்து இரண்டு கிலோமீட்டர்) குதித்தார். சோகனும் உடனே குதித்தார். “40 வயதுகளில் அப்பெண் இருந்தார். அவரைக் காப்பாற்ற என்னை அவர் விடவில்லை. அவர் என்னைப் பிடித்துக் கொண்டு உள்ளே இழுத்தார்,” என்கிறார் அவர். 15-20 நிமிடங்கள் ஓர் உயிரை காப்பாற்ர நடந்த போராட்டத்தில் அப்பெண்ணின் முடியைப் பற்றி அவர் இழுத்து காப்பாற்றினார். “அந்த சமயத்தில் அப்பெண் மயங்கிவிட்டார்.”
நீருக்குள் நீண்ட நேரத்துக்கு மூச்சு பிடிப்பதில்தான் சோகனின் திறன் அடங்கியிருக்கிறது. “20 வயதுகளில் நான்கு நிமிடங்கள் வரை நீருக்குள் மூச்சை அடக்கி இருந்திருக்கிறேன். இப்போது மூன்று நிமிடங்களாக அது குறைந்துவிட்டது.” ஆக்சிஜன் சிலிண்டரெல்லாம் அவர் பயன்படுத்துவதில்லை. “எங்கிருந்து நான் அதை வாங்குவது? அதுவும் ஒரு நெருக்கடி நேரத்தில்?” எனக் கேட்கிறார்.
மாவட்ட குற்ற ஆவண மையத்தின் பொறுப்பில் இருக்கும் உதவி துணை ஆய்வாளரான ரஜிந்தெர் குமார் சொல்கையில் 2020ம் ஆண்டில் காவல்துறையினர் பாரி தோப் கால்வாயிலிருந்து நான்கு சடலங்களை மீட்க முக்குளிப்போரிடம் உதவி கேட்டதாகக் கூறுகிறார். 2021ம் ஆண்டில் ஐந்து சடலங்களை அவர்களுக்காக மீட்டுக் கொடுத்திருக்கின்றனர். அச்சமயங்களில் குற்றச்சட்ட பிரிவு 174-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அந்த மரணங்கள் தற்கொலையா, கொலையா, விபத்தா போன்ற விஷயங்களை காவல்துறை துப்பறிய முடியும்.
“தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் ஆறுகளிலும் கால்வாய்களிலும் குதிக்கின்றனர்,” எனக் கூறுகிறார் துணை ஆய்வாளர். “பல நேரங்களில் அவர்கள் நீச்சல் தெரியாமல் குளிக்க சென்று உயிரை விடுகின்றனர். சில நேரங்களில் தடுமாறி விழுந்து மூழ்கி விடுகின்றனர். மூழ்கடித்து கொலை செய்ததாக சமீபத்தில் எந்த பதிவும் நேரவில்லை,” என்கிறார் ரஜிந்தெர் குமார்.
2020-ல் காவலர்கள் பாரி தோப் கால்வாயிலிருந்து நான்கு சடலங்களை மீட்க முக்குளிப்போரின் உதவியை நாடினர்
இக்கால்வாய்களில் நேரும் மரணங்களில் பெரும்பாலானவை கோடைகாலத்தில் நேர்வதாக சோகன் சொல்கிறார். “கிராம்வாசிகள் வெயிலை தணிக்க நீருக்குள் இறங்குகின்றனர். எதிர்பாராதவிதமாக மூழ்கி விடுகின்றனர்,” என்கிறார் அவர். “சடலங்கள் மிதக்கும். கால்வாய்க்குள் அவற்றை கண்டுபிடிப்பது சிரமம். எனவே நீர் செல்லும் திசையிலுள்ள பல்வேறு இடங்களில் நான் தேடுவேன். இது ஆபத்து நிறைந்த வேலை. என் உயிரையும் கூட பறிக்கும்.”
ஆபத்துகள் இருந்தாலும் சோகன் தொடர்ந்து இந்த வேலையைச் செய்கிறார். “சடலத்தை தேடி குதிக்கும்போதெல்லாம் சடலத்தை கண்டுபிடிக்காமல் நான் கரையேறியதில்லை. நீரிலிருந்து மக்களை காப்பாற்றுவோருக்கு அரசாங்கம் பணி வழங்க வேண்டும். என்னைப் போன்றோருக்கு அது உதவும்,” என்கிறார் அவர்.
“டஜனுக்கு மேற்பட்ட முக்குளிப்போர் கிராமத்தில் இருக்கின்றனர்,” என்னும் சோகன் பஞ்சாபில் பிற்படுத்தப்பட்ட சமூகமாக பட்டியலிடப்பட்டிருக்கும் லபானா சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். “இதையே அரசாங்கம் ஒரு வேலையாக பார்ப்பதில்லை. ஊதியத்தை எங்கிருந்து கேட்பது,” எனக் கோபமாக அவர் கேட்கிறார்.
சடலத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தால் நான்கைந்து முக்குளிப்போர் சோகனுடன் செல்வார்கள். 23 வயது ககன்தீப் சிங் அவர்களில் ஒருவர். அவரும் லபானா சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்தான். 2019ம் ஆண்டில் சோகனுடன் ஒரு சடலத்தை கண்டுபிடிக்க அவர் இணைந்தார். “சடலம் தேடி நீருக்குள் முதலில் இறங்கியபோது நான் பயந்தேன். பயத்தை போக்க பிரார்த்தித்துக் கொண்டே சென்றேன்,” என அவர் நினைவுகூருகிறார்.
10 வயது சிறுவனின் உடலை மீட்டது அவரின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. “அவன் அருகே இருக்கும் கோட் பொகார் கிராமத்தைச் சேர்ந்தவன். படிக்காமல் பப்ஜி விளையாடியதால் அவனது தாய் அடித்ததில் நீரில் குதித்துவிட்டான்,” என்கிறார் ககன்தீப்.
முக்குளிப்போர் இருவருடன் அவர் சென்றார். புலே சக் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாரிவால் கிராமத்திலிருந்து வந்தவர் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரைக் கொண்டு வந்திருந்தார். “அதை என்னிடம் கொடுத்தார். நான் அதை நீருக்குள் கொண்டு சென்றேன். இரண்டு மணி நேரங்கள் நீரில் இருந்தேன். நாள் முழுக்க சடலத்தை தேடியதில் பாலத்துக்குக் கீழே இறுதியாக கண்டுபிடித்தோம். சடலம் ஊதியிருந்தது. அவன் அழகான சிறுவன். பெற்றோரும் இரண்டு சகோதரிகளும் அவனுக்கு இருக்கின்றனர்,” என்கிறார் அவர். இணைய விளையாட்டை விளையாடும் பழக்கம் கொண்டிருந்த ககன்தீப் அச்சம்பவத்துக்கு பிறகு விளையாடுவதை நிறுத்திவிட்டார். “என் செல்பேசியில் பப்ஜி இருக்கிறது. ஆனால் நான் விளையாடுவதில்லை.”
இதுவரை கால்வாய்களிலிருந்து மூன்று சடலங்களை ககன்தீப் மீட்டிருக்கிறார். “இதற்கென எந்தப் பணமும் நான் வசூலிப்பதில்லை. அவர்கள் கொடுத்தாலும் நான் ஏற்பதில்லை,” என்கிறார் அவர். ராணுவத்தில் சேரும் விருப்பம் கொண்ட அவர், ஈரறை கொண்ட ஒரு வீட்டில் பெற்றோருடன் வசிக்கிறார். உள்ளூர் எரிவாயு சிலிண்டர் ஏஜென்சியில் பணிபுரிந்து 6,000 ரூபாய் வருமானம் மாதந்தோறும் ஈட்டுகிறார். வீடுகளுக்கு சிலிண்டர் கொண்டு சென்று கொடுப்பதே அவரது வேலை. குடும்பத்துக்கென ஒரு ஏக்கர் நிலம் உண்டு. அதில் கோதுமையும் புல்லும் வளர்க்கின்றனர். சில ஆடுகளையும் வளர்க்கின்றனர்.60களில் இருக்கும் அவரது தந்தையிடம் ஓர் ஆட்டோ இருக்கிறது. சில நேரங்களில் ககன்தீப்பும் அதை ஓட்டுகிறார்.
கால்வாய்களில் குதிப்பவர்கள், அங்கு கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளினூடாக செல்கின்றனர். பல மணி நேரங்களை சடலங்கள் தேடுவதில் செலவிடுகின்றனர்.
2020ம் ஆண்டில் ஒருமுறை காவல்துறை ககன்தீப்பை தொடர்பு கொண்டு தாரிவால் கிராமத்தில் கால்வாயைத் தாண்ட முயன்று மூழ்கிய 19 வயது இளைஞரின் உடலை மீட்குமாறு கேட்டுக் கொண்டது. “காலை 10 மணிக்கு தேடத் துவங்கினேன். மாலை 4 வரை கண்டுபிடிக்க முடியவில்லை.” ஒரு முனையிலிருந்து ஒரு கயிறைக் கட்டி மூன்று பேர் கால்வாயில் இறங்கி மனிதச்சங்கிலி போல் நின்று ககன்தீப் சென்றார். அவர்களும் அதே நேரத்தில் நீருக்குள் குதித்தவர்கள்தான். “நிறைய குப்பைகள் கிடந்ததால் இளைஞனின் உடலை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஒரு பெரிய கல் சடலம் நகர்வதை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது,” என்கிறார் அவர்.
இயற்பியலை பணியினூடாக அவர் கற்றுக் கொண்டார். “சடலங்கள் மிதக்க குறைந்தபட்சம் 72 மணி நேரங்கள் ஆகும். அவை நீரில் மிதந்து செல்ல வல்லவை. ஒரு முனையில் ஒருவர் நீருக்குள் குதித்தால் அப்பகுதியில் அவர் கண்டுபிடிக்கப்படுவதில்லை,” என்கிறார் திபிடி கால்வாயில் 2021ம் ஆண்டில் ஒரு 16 வயது சிறுவனின் சடலத்தை மீட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்து. “சிறுவன் குதித்த இடத்தில் நான் தேடினேன். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு நீருக்குள் மூழ்குகையில் மூச்சு திணறாமலிருக்க ஒரு குழாயை மூக்கில் இணைத்துக் கொண்டேன்,” என்கிறார் அவர்.
மாலையில்தான் அவர்கள் சடலத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. “கால்வாயின் மறுமுனையில், 25 அடி ஆழத்தில் சடலம் இருந்தது. சோகனும் நானும் தேடினோம்,” என நினைவுகூருகிறார். “சடலத்தை இழுக்க அடுத்த நாள் வரலாமென சோகன் கூறினார். ஆனால் அடுத்த நாள் சென்றபோது சடலம் காணாமல் போயிருந்தது. மறுகரைக்கு சென்று கால்வாய்க்கு அடியை சடலம் அடைந்திருந்தது.” அதை மீட்க மூன்று மணி நேரம் பிடித்தது. “நீருக்குள் கிட்டத்தட்ட 200 முறை குதித்து எழுந்திருப்போம். சில நேரங்களில் என்ன செய்கிறேனென என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. ஆனால் வேலையைக் கைவிடுவதைப் பற்றி யோசித்ததே இல்லை. மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென என் தலையில் எழுதியிருந்தால் அதை நான் தடுக்க முடியாது,” என்கிறார் ககன்தீப்.
சோகனோ வாழ்க்கையின் சிக்கல்களை நீரில் பார்க்கிறார். ஒவ்வொரு மாலையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் திபிடி பாலத்துக்கு அவர் செல்வதற்கான காரணம் அதுதான்.”நீந்துவதில் எனக்கு விருப்பம் குறைந்துவிட்டது. ஒவ்வொரு துயரமான சம்பவத்தையும் என் நினைவிலிருந்து அழித்து விடுவேன்,” என்கிறார் அவர். “ஒவ்வொரு முறை சடலத்தை கரைக்கு கொண்டு வரும்போதும் அந்த நபரின் உறவினர்கள் துயருருவதைக் காணுவோம். அவர்கள் அழுவார்கள். சாவதற்கான முறை இதுவல்ல என்கிற தாங்கலுடன் சடலத்தைத் தூக்கி செல்வார்கள்.”
சோகனின் உள்ளத்தில் கால்வாயும் அதன் நீரும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. 2004ம் ஆண்டில் மொராக்கோ, அட்லாண்டிக் கடல் மற்றும் மத்தியதரைக் கடல் ஆகிய இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு கூட கால்வாயை அவர் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை. நான்கு வருடங்களில் அவர் திரும்பினார். “அங்கிருக்கும்போது திபிடியை நான் காணாது தவித்தேன். இப்போது கூட வேலை இல்லா நேரங்களை இந்த கால்வாயை வெறுமனே பார்த்திருந்து கழிக்கிறேன்,” என்கிறார அவர் வேலைக்கு திரும்புவதற்கு முன். காய்கறி வண்டி இணைக்கப்பட்ட மோட்டார் பைக்கிலேறி அடுத்த தெருமுனையிலிருக்கும் வாடிக்கையாளர்களை சந்திக்கக் கிளம்புகிறார்.
இக்கட்டுரை எழுத உதவிய சுமேதா மிட்டலுக்கு செய்தியாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு இருந்தாலோ அல்லது இருக்கும் யாரையேனும் நீங்கள் அறிந்திருந்தாலோ 1800-599-0019 (24/7 இலவச சேவை) என்ற தேசிய உதவி எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது உங்களுக்கு அருகே இருக்கும் எண்ணை இவற்றிலிருந்து தொடர்பு கொள்ளவும். உளவியல் சுகாதார வல்லுனர்கள் மற்றும் சேவைகளை தொடர்பு கொள்ள SPIF-ன் உளவியல் ஆரோக்கிய விவரப்புத்தகத்துக்கு செல்லவும்.
தமிழில் : ராஜசங்கீதன்