“இன்று காலை மூன்றாவது முறையாக எனது கழுதை தண்ணீர் சுமந்து கொண்டு இம்மலையில் நடந்து கொண்டிருக்கிறது”, என வருந்துகிறார் டலி பாதா. “அதிக முறை மலையேறி இறங்குவதால் சோர்வடையும் கழுதைக்கு அத்தியாவசியமான உணவைக் கூட எங்களால் வழங்க முடியவில்லை.”
ஜூன் மாதத்தின் இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் 53 வயதான டலி பாதாவின் வீட்டை சென்றடைந்த பொழுது எஞ்சியிருந்த பருப்பு மற்றும் புற்களை கழுதைக்கு உணவாக வழங்கிக் கொண்டிருந்தார். அவரது கணவர் படாஜி பாக்ரி ராஜஸ்தான மொழியில், “மழை பொழியும் என நம்புகிறேன்”, என்றார். “மழைக்காலத்தில் தண்ணீர் மிகவும் அசுத்தமாகிவிடும். அப்பொழுதும் மழையையும் பொருட்படுத்தாமல் கழுதையின் உதவியுடன் என் மனைவி நீர் எடுக்க செல்ல வேண்டும்”.
ராஜஸ்தானின் உதய்ப்பூர் மாவட்டத்தின் ரிஷப்தியோ வட்டத்தில் அமைந்திருக்கும் சுமார் 1000 மக்கள் வசிக்கும் பாச்சா பத்லா கிராம மக்களும் மிருகங்களும் மழை நீர் ஓடையை மட்டுமே குடிநீருக்காக நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த ஓடை வற்றும் போது பூமியில் ஆழமான குழிகள் மட்டுமே இவர்களது குடிநீருக்கான ஆதாரம். மழைக் காலத்தில் இக்குழிகள் மழை நீரில் அடித்து வரப்படும் கழிவுக் பொருட்களால் நிரம்பி விடுவதால் இவர்களது நீருக்கான தேடல் அதிகரிக்கிறது. இக்கிராமத்தின் பெரும்பாலான குடும்பங்கள் வீட்டில் வளர்க்கும் கழுதைகளை நீர் சுமந்து வர பயன்படுத்துகின்றனர்.
கழுதைகளால் சுமந்து வரப்படும் நீர் வீட்டின் பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டாலும் பெண்கள் இதர வீட்டு உபயோக பொருட்களை சுத்தப்படுத்தவும் ஆடைகளையும் துவைக்கவும் நீர் கிடைக்கும் ஓடைகள் அல்லது குழிகளுக்கு சுமந்து வர நேர்கிறது. இக்கிராமவாசிகள் கழுதைகளை ஆண்டு முழுமையும் பலன் தரும் முதலீடுகளாகவே கருதுகின்றனர்.
டலி மற்றும் படாஜி இருவரும் உள்ளூர் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தலா ரூ.200/ தினக்கூலிக்கு பணியாற்றுகின்றனர். அனைத்து நாட்களும் வேலை இருக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு ஏக்கருக்கும் குறைவான அரசு நிலத்தில் படாஜி உளுந்து, துவரை மற்றும் காய்கறிகள் பயிர் செய்து வருகிறார்.
2017ம் ஆண்டு நீர் சுமக்கும் இந்த ஆண் கழுதையை மற்றொரு குடும்பத்திடமிருந்து ரூ.2,500க்கு விலைக்கு வாங்கியுள்ளனர். அஹாரி ஆதிவாசி குடும்பத்தினரான இவர்கள் ஒரு பெண் கழுதை, குட்டி ஆண் கழுதை, ஒரு ஆடு மற்றும் மாடு ஆகியனவற்றிற்க்கு உரிமையாளர்கள்.
டலி பாதா காலை 5 மணி முதலே நீர் சேகரிக்கும் பணியை துவங்கி விடுகிறார். மலியிறங்கி வர 30 நிமிடங்களும் நீர் சேகரித்து மீண்டும் மலையேறி வீடு திரும்ப ஒரு மணி நேரமும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு முறை வீடு திரும்பி மீண்டும் மலையிறங்கும் நேரத்தில் அத்தியாவசிய வேலைகளை செய்வதும் என காலை 10 மணி வரை தொடர்ந்து விட்டு பின்னர் வேலைக்கு செல்ல தயாராக வேண்டும். கழுதையின் இருபுறமும் தொங்கவிடப்பட்டிருக்கும் இரு பிளாஸ்டிக் குடுவைகளில் தலா 12 முதல் 15 லிட்டர் குடிநீர் சேகரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் வேறு ஒரு குடுவை நீரை தனது தலையிலும் சுமந்து வருகிறார். டலியும் அவரது கழுதையும் நீர் சுமந்து மலையேறும் வேளையில் ஏற்படும் சோர்வைப் போக்க ஆங்காங்கே ஓய்வெடுத்துக் கொள்கின்றனர்.
டலி, அவரது கழுதையுடன் நானும் செங்குத்தான பாதையில் மலையிறங்கி நீர் எடுக்க சென்றேன். இருபது நிமிட பயணத்திற்க்குப் பின் கூழாங்கற்கள் மற்றும் பாறைகள் நிறைந்த பகுதியை அடைந்தோம். பருவமழை காலத்தில் இந்த நீரோடை வேறு வடிவம் பெறுவதாகவும் டலி தெரிவித்தார். உள்ளூரில் ஜபுனாலா என்றழைக்கப்படும் நீரோடையினூடே நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.
கழுதைக்கு அது சென்றடைய வேண்டிய இடம் நன்றாக தெரிந்திருக்கிறது. அதுவரை நாங்களும் அதனை பின்தொடர்ந்தோம். டலி பாடா ஒரு நீண்ட கயிற்றின் முனையில் எஃகு குடத்தை இணைத்து கட்டினார். ஆழமான குழியின் குறுக்கே பொருத்தப்பட்டிருந்த மர தடியின் மீது கவனமாகவும் உறுதியாகவும் நின்று கொண்டார். அந்த குழியில் 20 அடி ஆழத்தில் தான் தண்ணீர் இருக்கிறது. கயிற்றை மேலிழுத்து முகமலர்ச்சியுடன் அதில் நிரம்பியிருந்த நீரை காண்பித்தார். பெரு வெற்றி பெற்ற நிறைவு அவர் முகத்தில் தெரிந்த்து.
ராஜஸ்தான் மாநிலத்தில் கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிடுகிறது. டலி பாதாவை பொறுத்தமட்டிலும் மனிதர்களை சோதிக்க கடவுள் உருவாக்கியதே கோடை காலம்!. “சில நேரங்களில் கடவுள் இல்லை என்றே நினைக்கத் தோன்றும். அப்படி கடவுள் இருப்பது உண்மை என்றால் என்னைப் போன்ற பெண்கள் நீர் தேடி உயிர் விடும் நிலை வருமா?’ என்கிறார்.
கழுதை சுமந்து வந்த நீரை மிகக் கவனமாக படாஜி இறக்குகிறார். “இந்த நீர் வீணா
காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்”, என்கிறார். டலி பாதா ஓய்வெடுக்க முனையாமல் கொண்டு வந்த நீரை நிரப்ப மேலும் காலி பாத்திரங்கள் இருக்கிறதா என தேடத் துவங்கினார். அவர்களது 34 வயது மகன் குல்தீப் அஹாரி முந்தைய நாள் இரவு அரவு ஆலையில் பணி செய்த அயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த அமைதி தோய்ந்த வீட்டின் அமைதியை படாஜி எஃகு பாத்திரத்திலிருந்து நீர் அருந்தும் ஓசை கலைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
தமிழில்: ஆ நீலாம்பரன்