மும்பைக்கு பேரணியாகச் செல்வதெனத் தீர்மானித்து நாசிக்குக்கு வந்திருந்தார், கோபிநாத் நாயக்வாடி. ”ஓராண்டு காத்திருந்தோம்; ஆனால் அரசாங்கம் எங்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்த முறை அரசாங்கம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பின்வாங்கமாட்டோம்..” என்கிறார், மகாராஷ்டிரத்தின் அகமதுநகர் மாவட்டம், அகோலா வட்டத்தைச் சேர்ந்த இந்த 88 வயது விவசாயி.
நாயக்வாடி நான்கு ஏக்கரில் பயிர்செய்வது வழக்கம். அதில் ஒரு ஏக்கர் அவருடைய சொந்த நிலம், மீதமுள்ள பகுதி வனத்துறையினுடையது. கடந்த ஆண்டில் ஒரே ஏக்கரில் மட்டும்தான் அவர் பயிர்செய்தார். ” ஊரில் குடிக்கவே தண்ணீர் இல்லை. இதில் எங்கே விவசாயம் செய்வது?” என எதிர்க்கேள்வி போட்டார். நாசிக் மாவட்டத்தின் வில்கோலி கிராம எல்லையில் அவரைச் சந்தித்த வேளை அது.. பிப்ரவரி 21 அன்று, நாசிக்கின் மகாமார்க் பேருந்துநிலையத்திலிருந்து மூன்று மணி நேரம் நடந்து 10 கி.மீ. தொலைவு பேரணிசென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள், பிற்பகல் 2.30 மணியளவில் உணவுக்காக இடைவேளை விட்டிருந்தார்கள். அகோலா வட்டத்தைச் சேர்ந்த 250 விவசாயிகளுடன் கோபிநாத்தும் வந்திருந்தார்.



