“இங்கிருந்துச் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆரம்பத்தில், அவர்களைப் புறக்கணித்தோம். பின்னர் வனத்துறை அதிகாரிகள் வரும்போதெல்லாம் ஒழிந்து கொண்டோம். இப்படித்தான் பல நாட்களை நாங்கள் கடந்தோம். இந்த முடிவை 2008-ம் ஆண்டே எடுத்துள்ளனர் என நான் நினைக்கிறேன். காட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் உடனடியாக நாங்கள் வெளியேற வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் எங்களிடம் கூறினர்” என நினைவு கூர்கிறார் தல்கான் கிராமத்தில் வாழ்ந்து வாரும் பாபுலால் குயாந்தர்.
இங்கிருந்துச் செல்ல மாட்டோம் என நான்கு வருடங்களாக மறுத்தப் பிறகு, வற்புறுத்தலின் பேரில் தங்கள் பாரம்பர்ய கிராமத்தை விடுத்து 16கிமீ தொலைவிலுள்ள சரத்புரா கிராமத்தில் தஞ்சம் அடைந்தனர் தல்கான் ஆதிவாசிகள். தாரா-டெக் என அழைக்கப்படும் இந்தக் கிராமம், பன்னா மாவட்டத்தின் அமன்காஞ் தாலுகாவிற்குச் செல்லும் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.
2008-2009ம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகள் அனைத்தும் இறந்ததால், புலிகள் வாழ்விடத்திற்கு அதிக இடங்களை உருவாக்க 12 கிராமங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. தல்கானும் அதில் ஒன்று. காப்பகத்தின் மையப் பகுதியில் 16 கிராமங்கள் வருவதாக 2011 அறிக்கை ஒன்று கூறுகிறது. ( 11 பன்னா மாவட்டத்திலும் ஐந்து சத்தர்பூர் மாவட்டத்திலும் வருகிறது; இடமாற்றம் செய்யப்படாத நான்கு கிராமங்களின் நிலை என்னவென்று உறுதி செய்ய முடியவில்லை )
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி அப்போதைய தல்கானில் 171 குடும்பங்கள் இருந்துள்ளன. அவர்களில்
பெரும்பாலானோர் ராஜ் கோண்ட் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதில், 37 குடும்பங்கள் மட்டுமே சரத்புராவில் உள்ளன. மற்றவர்கள் சாத்னா, கட்னி, அஜய்கார் போன்ற நகரங்களுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர்.
எனினும், இந்த இடமாற்றம் பல சட்ட விதிமுறைகளை மீறியுள்ளது. புலிகள் திட்டத்தின் பிரிவு 4.9-ன் படி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் இடமாற்ற தொகுப்புகளுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்குகிறது: ஒன்று, குடும்பத்தினர் 10 லட்சத்தை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டு இடமாற்ற செலவுகளைச் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவது, வனத்துறையும் மாவட்ட ஆட்சியரும் மறுவாழ்வு நடைமுறைக்கு பொறுப்பேற்க வேண்டும்.










