பழுதுபார்ப்பு தேவைப்படும் மண் கால்வாய் ஓரமாக நடந்து செல்லும்போது காண்ட்பரி கிராம மக்களை ஜோபன் லால் வரவழைக்கிறார். தன்னுடன் சேருமாறு குடும்பங்களுக்கு உரைக்கச் சொல்கிறார். ஒரு கதகதப்பான காலையில், "உங்கள் மண்வெட்டிகளையும் மண்வாரிகளையும் எடுத்துச் சென்று தபால் நிலையத்தின் பின்னால் என்னைச் சந்தியுங்கள்" என்று அவர் கூறுகிறார். ஆனால் 20 தொழிலாளர்களைக் கூட ஒன்று சேர்ப்பது அவருக்கு கடினம். "சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, குறிப்பாக குறுவை மற்றும் சம்பா விதைப்பு பருவங்களின்போது, கோஹ்லி அழைக்கும்போது, 60-80 ஆண்கள் வேலைக்கு வருவார்கள்" என்று அவர் நினைவு கூர்ந்தார். மண் கால்வாய்கள் பொதுவாக இரண்டு மீட்டர் அகலமும், இரண்டு மீட்டர் ஆழமும் கொண்டவை. மேலும் 100 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் வரை கூட நீட்டிக்க முடியும்.
55 வயதான ஜோபன் லால், காங்க்ரா மாவட்டத்தின் பாலம்பூர் தாலுகாவில் சுமார் 400 பேர் வசிக்கும் காண்ட்பரியின் கோஹ்லி ஆவார். (மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த கிராமம் கம்லேஹர் என பட்டியலிடப்பட்டுள்ளது). அவரது தாத்தா ஒரு கோஹ்லி இல்லை என்றாலும், அவர் இந்த வேலையை தனது தந்தையிடமிருந்து பெற்றார். "யாரோ ஒருவர் இந்த வேலையை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கலாம், இனியும் இது ஒரு மரியாதைக்குரியப் பணி அல்ல" என்று அவர் கூறுகிறார். "என் தந்தையை கிராமவாசிகள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்."
பாரம்பரியமான மண் கால்வாய் கோஹ்லி அதிகாரமாக இருந்தார். இந்த உள்ளூர் நீர் அமைப்பை நிர்வகிப்பதில் ஆழமான அறிவைக் கொண்டிருப்பவர். அவர் மண் கால்வாய் தேவிக்கு (கோஹ்லி பாரம்பரியமாக எப்போதும் ஓர் ஆண் என்றாலும், இவர் ஒரு பெண் தெய்வம்) தியாகங்களையும் பிரார்த்தனைகளையும் செய்தார். கடந்த காலங்களில், இமாச்சல பிரதேசத்திலுள்ள பலர் தங்கள் நீர் கால்வாய்கள் ஒரு தெய்வத்தால் பாதுகாக்கப்படுவதாக நம்பினர். வறட்சி காலங்களில் கூட, அவர்கள் கால்வாய்களை நன்கு கவனித்துக்கொண்டால், தெய்வம் ஏராளமான விநியோகத்துடன் பலன் அளிக்கும். வெள்ளத்தைத் தடுக்க, கோஹ்லி ஒரு சூஃபி துறவிக்கும் பிரார்த்தனையைச் செய்வார். (கிராமவாசிகள் அவரின் பெயரை நினைவுக்கூர முடியவில்லை). இது ஒரு வேளை காங்க்ரா பள்ளத்தாக்கின் சமய இணைப்பைப் பற்றி பேசியது.இந்த மலை மாநிலத்தில், பனிப்பாறைகளிலிருந்து கீழே பாயும் நீர் கிராமங்கள் மற்றும் வயல்களை நோக்கி மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசன கால்வாய்களின் சிக்கலான வலையில் திருப்பி விடப்படுகிறது . இதை பஹாரி மொழியில் குஹ்ல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. வான்பார்வையில், கிராமங்களின் விவசாயத்திற்காக வலைவு வலைவாக செதுக்கப்பட்ட மொட்டை மாடிகளையும், பாம்பு போன்ற மண் கால்வாய்கள் சமமான வலையமைப்பையும் காட்டுகிறது.
வயல்கள் தவிர, மண் கால்வாய்களைச் சார்ந்து பல செயல்பாடுகள் இருக்கின்றன. பல இமாச்சல கிராமங்களில், ஒரு குடிசையில் அமைந்துள்ள ஒரு நீர் ஆலை மண் கால்வாயுடன் கட்டப்பட்டுள்ளது. பாயும் நீரிலிருந்து ஆற்றலை எடுக்கும் சக்கரம் மேலே அரைக்கும் கல்லை சுழற்ற பயன்படுகிறது. "காராட்டில் உள்ள மாவு தளம் இனிப்பு சுவையுடையது. மேலும், மின்சார ஆலையில் எரிக்கப்படும் மாவு போல அல்ல", என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். காண்ட்பாரியைச் சேர்ந்த 45 வயதான காராதி அல்லது மில் ஆபரேட்டர் ஓம் பிரகாஷ் அதை ஒப்புக்கொள்கிறார்.
கடந்த காலத்தில், காங்க்ராவில் உள்ள எண்ணெய் ஆலைகள் கூட நீரின் விசையால் இயக்கப்பட்டன. இப்போது ஒரு சில மாவு ஆலைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஓம் பிரகாஷ் தனது கிராமத்தில் மீதமுள்ள மூன்று மில் ஆபரேட்டர்களில் ஒருவர். உயர்ந்த கிராமங்களில், ”சப்பெரு பஞ்சாய”த்தில், இன்னும் நிறைய உள்ளனர், ஆனால் வெகு சிலரே இந்த வேலையில் ஆர்வம் காட்டுகிறார்கள்.”, என்று அவர் கூறுகிறார். "இக்காலத்தில், பெரும்பாலனவர்கள் விவசாய சாரா வேலைகள் அல்லது அதிக உடல் உழைப்பு இல்லாத வேலைகளையே செய்ய விரும்புகிறார்கள்."
ஓம் பிரகாஷ் 23 ஆண்டுகளாக மில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார், தனது தந்தையின் வழியாக வந்து, தனக்கு முத்தவர்களிடமிருந்து வியாபாரத்தைக் கற்றுக் கொண்டார். அவர் தனது பெரும்பாலான நேரத்தை காராத்தில் செலவிடுகிறார். அங்கு அறுவடைக்குப் பிறகு பெரும்பாலான மாதங்களில், கிட்டத்தட்ட 60 குடும்பங்களுக்கு அவரைப் பார்க்க வருபவர்களை கவனிக்கிறார் - சோளம், கோதுமை மற்றும் அரிசியை அரைப்பதற்காக வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தானியத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை காராட்டிக்கு கொடுக்கிறார்கள், ஒரு சிலர் ஒரு சிறிய தொகையை பணமாகச் செலுத்துகின்றனர்.
காராத்தை இயக்குவது இடைவிடாத வேலை, மாவரைக்கும் இயந்திரம் நகரும் போது அது எப்போதும் காலியாக இருக்கக்கூடாது என்பதை ஓம் பிரகாஷ் உறுதிப்படுத்த வேண்டும். “அது காலியாக இயங்கினால், கற்கள் சேதமடையக்கூடும். ஒவ்வொரு ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை நாம் சக்கரத்தை மாற்ற வேண்டும் [கல் சக்கரம் காராத்தியின் குடும்பத்தினரால் செய்யப்படுகிறது]. நாங்கள் எப்போதுமே மண் கால்வாய் வேலையைச் செய்ய வேண்டும், அதனால் தண்ணீர் நல்ல அளவில் காராத்தை நோக்கி கீழே பாய்கிறது. "
காலப்போக்கில், கடைகளில் மாவு கிடைப்பதால், மிகவும் குறைவான மக்களே தங்கள் தானியங்களை அரைத்துக்கொள்வார்கள் என்று ஓம் பிரகாஷ் கவலையுடன் கூறுகிறார். "மேலும் மக்கள் கால்வாய்க்குள் நிறைய நெகிழிகளை வீசுவதை நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் இப்போது எங்கள் மண் கால்வாய்களை கவனிக்கவில்லை என்றால், வருங்கால தலைமுறைகள் அவற்றைப் பார்க்க மாட்டார்கள்…”
பாரசீக மொழியில் ”ரிவாஜ் ஐ அப்பாஷி ”(நீர்ப்பாசன வழக்கங்கள்) என்ற தலைப்பில் 700 பக்கங்களில் வரைபடங்கள் மற்றும் வரைபடங்களுடன் கூடிய கட்டுரைகளில், மண் கால்வாய்களுடன் தொடர்புடைய பழக்கவழக்கங்களைப் பற்றி ஆங்கிலேயர்கள் ஆவணப்படுத்தி எழுதியுள்ளனர். இது முதன்முதலில் 1874 இல் எழுதப்பட்டது, 1915 இல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த ஆவணம் மண் கால்வாய் நிர்வாகத்தை ஒரு செழிப்பான பழைய வாய்வழி அறிவு முறைக்கு பதிலாக ஓர் அறிவியல் முறையாக குறைத்தது. ஆனால் நீர் கால்வாய் அமைப்புக்கான செய்யும் பெரும் பணிகள் பற்றிய தகவல்களையும் இது பாதுகாத்தது.
பல தலைமுறைகளாக, கிட்டதட்ட 1970க்கள் வரை, நீர் கால்வாய்களை முற்றிலும் சமூகத்தால் நிர்வகிக்கப்பட்டன. நீர்ப்பாசன முறையின் பாரம்பரிய பராமரிப்பாளர்கள் தங்கள் குடும்பத்திற்குள்ளே இந்த வேலையை ஒருவர் பின் ஒருவராக அளித்து சென்றனர். 1990க்களில், அதிகமான ஆண்கள் விவசாயம் சாரா வேலையைத் தேடி கிராமங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர், மேலும் அதிகமான பெண்கள் நீர் கால்வாய்களில் வேலை செய்யத் தொடங்கினர் - இது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் (2005 ஆம் ஆண்டின் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திலிருந்து) விளைவாகும். இது போன்ற வேலைகளுக்கு கிராமங்களில் ஊதியம் வழங்குப்படுக்கின்றது. காலப்போக்கில், அரசு அதன் பொது அறிவுடன், சில நீர் கால்வாய்களில் சிமென்ட் பூசத் தொடங்கியது.“மண் நீர் கால்வாய்கள் நன்றாக இருந்தன, அவை திசை திருப்ப எளிதாக இருந்தன. சிமென்ட் நீர் கால்வாய்கள் நிரந்தர உணர்வைத் தருகின்றன, ஆனால் சில ஆண்டுகளில் சிமென்ட் பாழடைந்துவிடும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ”என்கிறார் சப்பெருவைச் சேர்ந்த 45 வயதாகும் இந்திரா தேவி. பாலம்பூர் தாலுகாவில் இருக்கும் இந்த கிராமத்தில் சுமார் 350 பேர் வசிக்கின்றனர். அவர் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் தளங்களில் பணிபுரிகிறார், மேலும் தனது கிராமத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே, நீர் கால்வாய்களை சிமென்ட் செய்வது நல்ல விஷயமல்ல என்பதை அறிவார். ஆனால், அவர் மேலும் கூறுகிறார், "இந்த வேலைக்கு நாங்கள் எங்கள் அன்றாட ஊதியத்தைப் பெறுகிறோம், எனவே நாங்கள் அதில் பங்கேற்கிறோம் ..."
இப்போது பல கிராமங்களில், கோஹ்லிக்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் கால்வாய் குழு ஒன்று உள்ளது, அது தன்னாட்சியாக உள்ளது. ஆனால் மற்ற கிராமங்களில், நீர்ப்பாசன மற்றும் பொது சுகாதாரத் துறை இப்போது நீர் கால்வாய்களைக் கட்டுப்படுத்துகிறது.
2013 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச மாநில நீர் கொள்கை யின்படி, “வெள்ள நீர்ப்பாசனம் அல்லது திறந்தவெளி கால்வாய் நீர்ப்பாசனத்திலிருந்து படிப்படியாக மைக்ரோ பாசனம் மற்றும் குழாய் விநியோகத்திற்கு மாறத் திட்டமிட்டுள்ளது.” இது ஒவ்வொரு வீட்டிற்கும் மீட்டர் முறையில் குடிநீர் விநியோகம் மற்றும் முடிந்தவரை பொது இடங்களில் நீர் ஏடிஎம்களை அமைப்பது பற்றி பேசுகிறது.
அரசு கட்டளையிட்ட இந்த திட்டங்கள் சமூகத்தால் நிர்வகிக்கப்படும் நீர் கால்வாய் அமைப்பை மேலும் அழிக்குமா, மேலும் இமாச்சலில் திறந்தவெளியில் பாயும் நீரின் சத்தங்கள் இறுதியில் பிளாஸ்டிக் குழாய் அமைப்புடன் மாற்றப்படுமா? ஜோபன் லால் நம்பிக்கையுடன் இருக்கிறார்: "இமாச்சலத்திற்கு நீர் கால்வாய்களில் போதுமான மேற்பரப்பு நீர் இருப்புடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கோஹ்லியின் பங்கு எப்போதும் முக்கியமாக இருக்கும்."
தமிழில்:
ஷோபனா ரூபகுமார்