மே மாத இறுதியில் ஹவேரி தாலுக்காவிலிருந்து ராமநகராவில் உள்ள பட்டுக்கூடு சந்தைக்கு தனது பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயி நிகிரப்பா கடியப்பா பயணம் செய்தார். டெம்போ வேனில் 370 கிலோமீட்டர் தொலைவிலான 11 மணி நேர இடைவிடாத பயணம், ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு உணவு கிடைக்காத தவிப்பு ஒருபக்கம், இதில் சரியான விலை கிடைக்குமா என்ற அச்சம் இன்னொரு பக்கம். பட்டுக்கூடுகளுக்கு குறைந்த விலை கிடைத்தால் அவர் என்ன செய்வார்?
ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹண்டிகனுர் கிராமத்திற்கு அவர் திரும்பியபோது நம்பிக்கை இழந்திருந்தார். அவர் பயந்தது போலவே நடந்துவிட்டது. அவர், தான் கொண்டு சென்ற 250 கிலோ அளவிலான வெண்பட்டுக்கூடுகளை வெறும் ரூ. 65,000க்கு விற்றுள்ளார். அதாவது கிலோ ரூ.270க்கு விற்றுள்ளார்.
மார்ச் தொடக்கத்தில் வெண்பட்டுக்கூட்டுக்கு கிலோ ரூ. 550 வரை கிடைத்தது. கலப்பின பட்டுக்கூடு கிலோ ரூ. 480க்கு சராசரியாக விற்பனையானது. மற்ற காலங்களில் வெண்பட்டுக்கூடுகளுக்கு சராசரியாக கிலோ ரூ. 450-500 வரையிலும், கலப்பின பட்டுக்கூடுகளுக்கு ரூ.380-420 வரை கிடைக்கும். (பைவோல்டைன் என்பது வெண்மை நிற தரமான பட்டுக்கூடு. கலப்பின பட்டுக்கூடு என்றால் பைவோல்டைன் கழிவுகளுடன், குறைந்த தரத்திலான கலப்பினத்தை சேர்த்து வளர்க்கும் மஞ்சள் நிற பட்டுக்கூடுகளாகும்.)
“எனது பூர்வீக நிலத்தில் [2014ஆம் ஆண்டு] பட்டுப்புழுக்களுக்குத் தேவைப்படும் முசுக்கட்டை செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். இப்போது அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். என் கடன்களை எப்படித் தீர்க்க போகிறேன் என்றே தெரியவில்லை,” என்கிறார் 42 வயதாகும் கடியப்பா.
2014 வரை ஹவேரி மாவட்டத்தில் உள்ள வயல்களில் வேலை செய்து அவர் தினக்கூலியாக ரூ.150-170 வரை வருவாய் ஈட்டி வந்தார். தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், குடும்ப உறுப்பினர்கள் 10 பேருடன் சேர்ந்து வீட்டுத் தேவைக்காகவும், சந்தையில் விற்பதற்கும் சோளம், நிலக்கடலை பயிரிடத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டு மேலும் ஐந்து ஏக்கர் நிலத்தை கடியப்பா குத்தகைக்கு எடுத்து சோளம், நிலக்கடலையுடன் முசுக்கட்டை செடி வளர்ப்பையும் சேர்த்து செய்தார். இதனால் வருவாய் அதிகரிக்கும் என அவர் நம்பினார்.
ஆண்டிற்கு சுமார் 10 முறை அல்லது 35-45 நாட்களுக்கு ஒருமுறை என கடியப்பாவும், பிற விவசாயிகளும் பட்டுக்கூடுகளை விற்று வந்தனர். சிறு பட்டுப்புழுக்கள் பட்டுக்கூடுகளாக மாறுவதற்கு சுமார் 23 நாட்கள் ஆகும். இதற்கு மே முதல் வாரமே புழு வளர்ப்பை கடியப்பா தொடங்க வேண்டும். வெப்பநிலை, ஈரப்பதங்களினால் தொற்று, தாக்கம் ஏற்படாமல் பட்டுப்புழுக்களை வளர்க்க அவர் தினமும் 10 மணி நேரம் உழைக்கிறார். மே மாத இறுதியில் ராமநகரா சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவந்து இழப்புகளை தோளில் சுமந்தார்.







