சத்யபானும், ஷோபா ஜாதவும் டிராக்ரில் ஏறுவதற்கு தயாராகிவிட்டார்கள். “எங்களால் முடிந்தளவு கம்பு, மாவு மற்றும் சமைப்பதற்கு தேவையான உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டோம். அதனால், பயணத்தின்போதும், பெல்காம் மாவட்டத்திலும் நாங்கள் பணம் செலவழிக்க வேண்டாம்“ என்று சத்யபான் கூறுகிறார்.
மஹாராஷ்ட்ராவின் பீட் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான போத்காவில் 1,200 பேர் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பயணத்திற்கு தேவையானவற்றையே செய்கிறார்கள். அவர்களின் உடைகளை மடித்து பைகளில் நிரப்புவது, தேவையான பாத்திரங்களை மூட்டை கட்டுவது. பயணத்திற்கு தேவையான சப்பாத்திகளை டப்பாக்களில் அடைத்து வைப்பது, மற்ற பொருட்களை எடுத்து வைப்பது உள்ளிட்ட அனைத்தையும் அவர்கள் விரைவாக, அந்த அக்டோபர் மாதத்தின் வெயில் நிறைந்த ஒரு செவ்வாய்க்கிழமையில் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப்பைகளையும், சாக்கு மூட்டைகளையும் டிராக்டரில் ஏற்றுகிறார்கள். அவர்களின் எளிமையான வீடுகளில் உள்ள மரக்கதவுகளை வலுவான தாளிட்டு பூட்டுவதை மீண்டும், மீண்டும் உறுதி செய்துகொள்கிறார்கள். அடுத்த 5 மாதங்களுக்கு அந்த தாழ்ப்பாள்கள் வலுவானதாக இருக்க வேண்டும்.
இந்த பயணம் ஆண்டுதோறும் நடைபெறுவதாகும். ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர்-நவம்பர் மாதவாக்கில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் (மாவட்ட ஆட்சியரின் கணக்கீட்டின்படி) மராத்வாதாவின் பீட் மாவட்டத்தில் இருந்து மட்டும் மேற்கு மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவில் கரும்பு வெட்டும் வேலைக்காக, 4 முதல் 5 மாதங்கள் வரை இடம்பெயர்கிறார்கள். அவர்கள் கிராமத்தில் கிடைக்கும் குறைவான வேலைகள், அதிகரித்து வரும் விவசாய நெருக்கடிகள், மூலப்பொருட்களின் விலையை உயர்த்துவது, விளைச்சலுக்கு நிச்சயமற்ற விலை, மந்தமான கடன் வழிமுறைகள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் இதர காரணிகளும் அவர்கள் இடம்பெயர வற்புறுத்துகிறது.








