மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி மாவட்ட தேயிலை தோட்டத்தில் கரிமுல் ஹக் வேலை செய்கிறார். இவர் தலாபாரி மற்றும் அருகாமை கிராம மக்களை மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் போன்ற இடங்களுக்கு தனது இருசக்கர வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்கிறார். அளவான வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலாபாரியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கிராந்தியில் உள்ளது. இப்பகுதிக்கு என முறையான நான்கு சக்கர அவசர ஊர்தி சேவை கிடையாது.
கரிமுலின் தனித்துவமான ‘இருசக்கர அவசர ஊர்தி‘ மற்றும் கைப்பேசி எண் (மருத்துவ தேவையில் உள்ள மக்கள் அழைப்பதற்கு) ஆகியவை கிராமங்களில் மிகவும் புகழ்பெற்றது. வட்டார அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், உள்ளூர் மருத்துவர்களும் அவரது சேவையை நன்கு அறிந்துள்ளனர்.




