லடாக்கில் உள்ள சோ மோரிரி ஏரிக்குச் செல்லும் வழியில், மேய்ச்சல் நிலங்களில் கம்பளியால் ஆன கூடாரங்கள் தட்டுப்படுகின்றன. இவை சாங்தாங்கி (பஷ்மினா) ஆடுகளை மேய்க்கும் சாங்பாஸின் வீடுகள். மிகச் சிறந்தத் தரமான உண்மையான காஷ்மீர் கம்பளிகள் கிடைக்கும் இடங்களில் அவையும் ஒன்றாகும்.
சாங்பாக்கள் மேய்ச்சல் பழங்குடிகள். அவர்கள் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் திபெத்திலிருந்து குடிபெயர்ந்து, இமயமலையின் குறுக்கே திபெத்திய பீடபூமியின் மேற்குப் பகுதியான சாங்தாங் பகுதிக்கு வந்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதிக்குள் வெளிநாட்டினர் நுழைய முடியாது. இந்தியர்கள் நுழையக் கூட லேயில் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
இந்த புகைப்படக் கட்டுரை கிழக்கு லடாக்கில் உள்ள ஹான்லே பள்ளத்தாக்கின் சாங்பாஸை ஆவணப்படுத்துகிறது. அவர்களின் சொந்த மதிப்பீடுகளின்படி, இங்கு சுமார் 40-50 சங்பா குடும்பங்கள் வாழ்கின்றனர்.
ஹான்லே பள்ளத்தாக்கு ஒரு பரந்த, கரடுமுரடான பகுதி. நீண்ட குளிர்காலமும் மிக குறைந்த கோடை காலமும் கொண்ட பகுதி. இப்பகுதி மண்ணின் கடினத்தன்மையால் தாவரங்கள் குறைவாகவே இருக்கின்றன. கோடைக்காலத்தில் தங்கள் சமூகத் தலைவர்களால் ஒதுக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மேய்ச்சல் நிலங்களில் பசுமையான மேய்ச்சல் நிலம் தேடி சாங்க்பாக்கள் நகர்கின்றனர்.
பிப்ரவரி 2015-ன் குளிர்காலத்தில், ஹான்லே பள்ளத்தாக்குக்குச் சென்றேன். நீண்ட தேடலுக்குப் பிறகு, கிராமவாசிகளின் உதவியுடன், சாங்பா கர்மா ரிஞ்சன் எனக்கு அறிமுகமானார். குளிர்காலத்தில், சாங்பாங்கள் ஒப்பீட்டளவில் அசையா வாழ்க்கை வாழ்கிறார்கள். 2016ம் ஆண்டின் கோடையில் நான் மீண்டும் சென்றேன். அந்த வருடத்தின் ஆகஸ்டு மாதத்தில், இரண்டு நாள் காத்திருப்புக்குப் பிறகு, கர்மா ரிஞ்சன் இறுதியாக தோன்றினார். அடுத்த நாள், ஹான்லே கிராமத்திலிருந்து மூன்று மணிநேர பயண தூரத்தில் உள்ள கோடை மேய்ச்சல் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
4,941 மீட்டர் உயரத்தில் கர்மாவின் கோடைகால இல்லம் இருந்தது. கோடைகாலத்திலும் சில நேரங்களில் இங்கு பனிப்பொழிவு இருக்கும். அடுத்த ஏழு நாட்களை அவருடனும் அவர் குடும்பத்துடனும் கழித்தேன். கர்மாவுக்கு சுமாராக 50 வயது இருக்கலாம். அவரது சமூகத்தில் மூத்தவர்.சாங்பா குடும்பங்களின் நான்கு பிரிவுகள் அவரைச் சார்ந்து இயங்குகின்றன. சமூகத்தின் பெரியவர் என்பவர் புத்திசாலியாகவும், ஆன்ம நிலை கொண்டவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும். கர்மாவிடம் இந்த குணங்கள் எல்லாமும் இருக்கின்றன. "நாடோடி வாழ்க்கையை நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் அது சுதந்திரமானது," என்று அவர் திபெத்திய மற்றும் லடாக்கி மொழிகளின் கலவையில் கூறுகிறார்.
சாங்பாக்கள் பவுத்தர்கள் ஆவர். தலாய் லாமாவைப் பின்பற்றுபவர்கள். ஆடுகளைத் தவிர, அவர்கள் செம்மறி ஆடுகளையும் வளர்க்கிறார்கள். மேலும் பலர் இன்னும் பழைய பண்டமாற்று முறையைப் பின்பற்றுகிறார்கள். பல்வேறு சமூகங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் சில பொருட்களை தங்களுக்குள்ளேயே பரிமாறிக் கொள்கின்றன.
ஆனால் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. வழியில், இந்திய இராணுவம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையின் சுமூகமான போக்குவரத்தை உறுதிசெய்ய சாலை கட்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அச்சாலை நிலப்பரப்பை மாற்றும். மேலும், 2016 நன்றாக இருக்கவில்லை என்கிறார் கர்மா. “...ஏனென்றால் லேவில் இருந்து கூட்டுறவு சங்கம் இன்னும் கம்பளி சேகரிக்க வரவில்லை. சீனாவில் இருந்து குறைந்த தரம் மற்றும் மலிவான காஷ்மீர் கம்பளி சந்தைக்கு வருவது இதற்குக் காரணமாக இருக்கலாம்."
தமிழில்: ராஜசங்கீதன்