தபன் மொண்டலை பலர் 'அண்ணா' என்றே அழைக்கின்றனர், ஏனெனில், அவர் திரைப்பட நட்சத்திரம் ரஜினிகாந்தை போல இருப்பதாக சிலர் கூறுகின்றனர் (ரஜினிகாந்த்தும் பிரபலமாக, 'மூத்த சகோதரர்' என்று பொருள்படும் முறையில் அண்ணா என்றே அழைக்கப்படுகிறார்). ஆனால் மொண்டல் மற்றொரு வகையான சிலை செய்வதற்காக வதோதராவில் நன்கு அறியப்படுகிறார் - அநேகமாய் இந்நகரில் 5 முதல் 9 அடி உயர தெய்வச் சிலைகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிசால் அல்லாமல் களிமண்ணால் செய்யும் ஒரே சிற்பி இவராகத்தான் இருப்பார்.
கணபதி மற்றும் பிற தெய்வங்களை வடிவமைக்கும் போது வங்கத்தின் சிலை தயாரிக்கும் நுட்பங்களையும் அத்துடன் அவர் இணைக்கிறார். "குமர்துளியின் - வங்கத்திலிருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள - முத்திரைகளான களிமண் சிலைகளை நான் வங்கத்திலிருந்து இங்கு கொண்டு வந்துள்ளேன்", என்று அவர் கூறுகிறார்.
ஸ்ரீ ராம் கிருஷ்ணா பிரதிமலை என்று அழைக்கப்படும் தபனின் பட்டறை - இந்நகரில் இருக்கும் சுமார் 30 பட்டறைகளுல் ஒன்று, இது மத்திய வதோதராவின் பஞ்சவதி பகுதியில் உள்ளது. இங்கு ஒரு சாய்வான ஆஸ்பெட்டாஸ் கூரையின் கீழ் அச்சுகளும், வர்ணங்களும், களிமண் மற்றும் கருவிகள் ஆகியன நடைபாதையுடன் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. உச்ச பருவத்தில், சாலையின் மறுபுறத்தில் மூங்கில் களைகளால் ஆதரிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்ட பிளாஸ்டிக் கூரைகளும் வருகிறது, இங்கே தான் உயரமான கணபதி சிலைகள் செதுக்கப்படும்.
இந்த பட்டறை வருடம் முழுவதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது - பருவம் மற்றும் தேவையைப் பொருத்து, கணபதி, துர்கா, விஷ்வகர்மா, சரஸ்வதி மற்றும் பிற தெய்வங்களின் சிற்பங்கள் வடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தபன் மற்றும் அவரது சக ஊழியர்கள் 5 - 9 அடி உயரமுள்ள 10 கணபதி சிலைகளை உருவாக்குகின்றனர், இது முன் பதிவு செய்யப்பட்ட சிலைகளின் எண்ணிக்கையைப் பொருத்து - ஒவ்வொன்றும் 20,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போகும், என்று அவர் கூறுகிறார். அவர்கள் மூன்று அடி உயரமுள்ள 20 - 30 சிலைகளும் மற்றும் 40 - 50 சிறிய அளவிலான கணபதி சிலைகளையும் செய்கின்றனர் - அவற்றின் விலை ரூபாய் 2,000 தில் இருந்து ரூபாய் 10,000 வரை இருக்கிறது.











