70 ஆண்டுகள் விவசாய தொழிலாளியாக இருந்த கங்கப்பாவிற்கு இப்போது சுமார் 83 வயதிருக்கும். அவர் தன்னை மகாத்மா காந்தியைப் போன்று வேடமிட்டுக் கொள்கிறார். மேற்கு ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் நகரெங்கிலும் 2016 ஆகஸ்ட் மாதம் முதல் அவர் இவ்வாறு உடையணிந்து வருகிறார். விவசாயத் தொழிலாளியாக கிடைத்ததை விட இப்போது சிறப்பான உதவிகளும், வருவாயும் அவருக்கு கிடைக்கின்றன.
“உங்கள் வயது வந்தவுடன் உங்களைப் போன்று உடையணிவேன், சுவாமி,” என்று அனந்தபூருக்கு காந்திஜி வந்தபோது அவரைச் சந்தித்து தெரிவித்ததாக கங்கப்பா கூறுகிறார். “அச்சமயத்தில் என் பெற்றோர் பெருரு தொட்டியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.” கங்கப்பா பிறந்த சென்னம்பள்ளி பெருருவிலிருந்து மிக தொலைவில் இல்லை. காந்திஜி தான் விரும்பியதை அடைந்தது, அவரது வீரமிக்க கட்டளைத் திறன் போன்றவை இளம் கங்கப்பாவை ஈர்த்தது.
மகாத்மா காந்தியைச் சந்தித்ததாக கங்கப்பா கூறுவது அல்லது அந்த தேதியை கண்டறிவது என்பது கடினமானது. காந்தி குறித்த நினைவுகளே அவரை வாழ வைக்கின்றன. கங்கப்பாவிற்கு பயணம் செய்வது பிடிக்கும் – பயணங்களும், பொறுமையும் தான் காந்தியைப் போன்று ஆவதற்கு உதவும் என அவர் நம்புகிறார்.
கங்கப்பாவை (தனது பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) மக்கள் தவறுதலாக கங்குலப்பா என்று அழைப்பதால் அதுவே தனது இப்போதைய பெயர் என்கிறார் அவர். காந்தியைப் போன்ற தோற்றத்திற்காக அவர் பூணூல் அணிகிறார். நெற்றி, கால்களில் குங்குமம் அணிகிறார். காந்தியின் உடையில் சில சமயம் மக்களை சாமியாரைப் போன்று கைகளால் ஆசிர்வதிக்கிறார்.







