தற்போது 40 வயதாகும் லீலாபாய், கடந்த 30 வருடங்களாக ஓயாமல் தினசரி இந்த வேலைகளை செய்து வருகிறார். “எனக்கு 13 வயதாக இருக்கும் போதே திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள் என் பெற்றோர்கள். நான் தொடர்ந்து படிக்க விரும்பினேன். அதனால் என் கனவரோடும் மாமியாருடன் வாழ்ந்த போதும் பள்ளிக்குச் சென்றேன். 1994-ம் ஆண்டு பத்தாம் வகுப்பை முடித்தேன். ஆனால் என் கனவரை விட நான் அதிகமாக படித்து விடக்கூடாது என்று என்னை மேலும் படிக்க அனுமதிக்கவில்லை (என் கனவர் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்). அதன்பிறகு நான் படிக்கவே இல்லை”.
2016-ம் ஆண்டு முதல் இரண்டு அரசு சாரா நிறுவனங்கள் பாலோட் கிராமத்தில் பெரியோர்களுக்கான கல்வியறிவு வகுப்பை நடத்தினர். பல மணி நேரம் வேலை செய்த பிறகும், கிராம பெண்களுக்கு தன்னார்வலராக கற்றுக் கொடுக்க முன்வந்தார் லீலாபாய். பெரும்பாலும் இந்த வகுப்புகள் யாராவது ஒருவர் வீட்டில் நடைபெறும். வீட்டு வேலைகள் இருப்பதால் வகுப்புகளுக்கு வருவதற்கு தயக்கம் காட்டும் பெண்களுக்கு, அவர்கள் வீட்டிற்கே சென்று கற்றுக் கொடுப்பார் லீலாபாய். இதுவரை 30 பெண்களுக்கு வாசிக்கவும் தங்கள் பெயரில் கையெழுத்து போடவும் கற்றுக் கொடுத்துள்ளார்.
இத்தனை ஆண்டுகால கடுமையான உழைப்பால், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முயற்சித்து வருகின்றனர் லீலாபாயும் அவரது கனவரும். இவர்களது மூத்த மகளான பிரியங்கா, 23, பி.காம் முடித்து அரசாங்க வேலைக்கு முயற்சித்து வருகிறார். சமீபத்தில் திருமணமான இவர், அலிபாக் நகரில் வசித்து வருகிறார். 20 வயதான பரிமளா, மகராஷ்டிரா போலிஸ் துறையில் காவலராக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் பணி நியமன ஆணை வரவில்லை. 18 வயதாகும் பரிமளா, பாரோட்டிலிருந்து 50கிமீ தொலைவிலுள்ள மஞ்சார் கிராமத்தில் பி.ஏ படித்து வருகிறார். 16 வயதான ஷர்மிளா 2018-ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் 78 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார். மற்ற மகள்களான நிமலா ஒன்பதாம் வகுப்பும், கௌரி ஆறாம் வகுப்பும், சமிக்ஷா ஒன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்களது ஒரே மகனான ஹர்ஷல் – 4 வயது – லீலாபாய் பணியாற்றும் அங்கன்வாடிக்கு செல்கிறான்.
“ஒரு பெற்றோராக என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் உடல்நலத்தையும் என்னால் கொடுக்க முடியாமல் போய் விடக்கூடாது என கவலைப்படுகிறேன். என்னைப் போல் அவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற உணர்வு எப்போதும் எனக்கு உள்ளது. அவர்கள் நன்றாக படித்து, வேலைக்கு சென்றால் மட்டுமே எங்கள் சூழ்நிலை மாறும். என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் தூக்கமே வருவதில்லை. ஆனால் அடுத்த நாள், என்னை புதுப்பித்து கொண்டு அவர்களுக்காக மறுபடியும் வேலை செய்ய தொடங்குகிறேன்” என்கிறார் லீலாபாய்.
இந்த கட்டுரைக்காக பாலோட் கிராமத்திற்கு செல்லுமாறு எனக்கு பரிந்துரைத்த கிரன் மோகே மற்றும் சுபாஷ் தோரட் இருவருக்கும், கிராமத்தை சுற்றிப் பார்க்க உதவிய அமோல் வாக்மாருக்கும் எனது நன்றிகள்.
தமிழில்: வி. கோபி மாவடிராஜா