அதிகாலையில் சுனிதா சாகு சிரமப்பட்டு திரும்பி, தனது கணவரிடம் “நமது குழந்தைகள் எங்கே?“ என்று கேட்கிறார். அதற்கு அவரது கணவர் போத்ராம், அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதாக கூறுகிறார். அவர் பெருமூச்சு விடுகிறார். இது அவருக்கு உறக்கமில்லாத இரவு. போத்ராமுக்கு அது கவலையளித்தது. அவர் எப்போதும், சுனிதாவை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உறங்குபவர் என்று கேலி செய்வார்.

ஆனால், ஏப்ரல் 28ம் தேதி இரவு, போத்ராம் மற்றும் சுனிதாவின் மூன்று மகன்கள் (அவர்களின் வயது 12 முதல் 20 வரை இருக்கும்) ஒவ்வொருவராக தங்களது தாய்க்கு கை, கால், தலை மற்றும் வயிற்றில் சூடான கடுகு எண்ணெய் வைத்து தேய்த்து மசாஜ் செய்துகொண்டிருந்தனர். அவர் வலியால் முனகிக்கொண்டிருந்தார். “எனக்கு ஏதோ நேர்ந்துவிட்டது“ என்று அவர் முணுமுணுத்துக்கொண்டிருந்தார். இவை போத்ராம் காலையில் நம்மிடம் நினைவுபடுத்திக்கூறியவை.

லக்னோ மாவட்டத்தில் உள்ள கர்காபூர் ஜாகிரில் ஒரு குடிசையில் சாகுவின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சட்டிஸ்கரில் உள்ள பிமேட்ராவில் உள்ள மாரோ கிராமத்தில் உள்ள சின்ஹாட் வட்டத்திலிருந்து, அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்திற்கு வந்தனர். போத் ராம் (42), கட்டிடங்களில் கொத்தனாராக வேலை செய்கிறார். சுனிதா (39), இல்லத்தை பராமரிப்பவராக உள்ளார்.

ஏப்ரல் மாதத்தில்தான் கோவிட் – 19 தொற்றின் இரண்டாவது அலை உத்ரபிரதேசத்தை கடுமையாக தாக்கியது. ஏப்ரல் 24ம் தேதி மாநிலத்தில் 38 ஆயிரத்து 55 புதிய கோவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதுவே எப்போதும் இருந்திராத அளவு உச்சத்தை தொட்ட எண்ணிக்கை. உத்ரபிரதேசம் எண்ணிக்கையை குறைத்து காட்டிதையும் மனதில் கொள்ள வேண்டும்.

“உண்மையான எண்ணிக்கை, அரசு அறிவித்ததைவிட 4 முதல் 5 மடங்கு அதிகமாக இருக்கலாம். அச்சத்தால் மக்கள் பரிசோதனைகள் செய்ய முன்வராததால், எண்ணிக்கை குறைந்தது. எனவே உண்மை நிலையை கண்டறிவது மிகக்கடினம்“ என்று லக்னோவில் உள்ள ராம் மனோகர் லூகியா மருத்துவ அறிவியல் மையத்தைச் சேர்ந்த உதவி பேராசிரியர் ரேஷ்மி குமாரி கூறுகிறார்.

கொரோனா வைரசின் அறிகுறிகளான காய்ச்சல், உடல் வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தும், குடும்பத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்பதால், சாகு குடும்பத்தினர் சுனிதாவிற்கு நிச்சயம் கோவிட் – 19 தொற்று ஏற்படவில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.

Bodhram Sahu's wife Sunita was diagnosed with typhoid but could have been Covid-positive too
PHOTO • Courtesy: Bodhram Sahu

போத்ராம் சாகுவின் மனைவி சுனிதா, அவருக்கு டைபாய்ட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அது கொரோனாவாக கூட இருக்கலாம்

ஏப்ரல் 26ம் தேதி காலை அவருக்கு உடல் சோர்வு மற்றும் வலி ஏற்பட்டதாக கூறியபோது, போத்ராம் அவரை தனது சைக்கிளின் பின்னால் அமர வைத்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மருத்துவரிடம் அழைத்துச்சென்று காட்டினார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டுமா என்று மருத்துவரிடம் போத்ராம் கேட்டார்.

“சுனிதாவை எங்கு அழைத்துச் செல்வீர்கள்? மருத்துவமனையில் எங்கும் இடமில்லை. இந்த மருந்துகளை மட்டும் கொடுங்கள். அவர் மூன்று நாட்களில் குணமடைந்துவிடுவார்“ என்று மருத்துவர் கூறியதாக போத்ராம் நினைவு கூறுகிறார். மருத்துவர் அருகில் உள்ள நோயியல் பரிசோதனை மையத்தை அழைத்து அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினார். சுனிதாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

பரிசோதனைக்கு மூவாயிரம் ரூபாய், மருந்து மற்றும் மருத்துவர் கட்டணம் ரூ.1,700ம் செலவானது. மாத்திரைகளை காக்கி நிற காகித பைகளிலும், அடர் அரக்கு நிற மருந்து பாட்டிலையும் கொடுத்த மருத்துவர் சத்துக்காக என்று விளக்கி கூறினார்.

அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தபோதும், அன்று மாலை 5 மணிக்கு போத்ராம், மீண்டும் அந்த சிகிச்சையகத்திற்கு சுனிதாவை அழைத்து வந்தார். அப்போது அவரது ரத்த பரிசோதனை முடிவுகள் வந்திருந்தன. அவருக்கு கல்லீரல் சேதமடைவுதற்கான அறிகுறிகள் காட்டுவதுபோல் முடிவுகள் இருந்ததால், டாக்டர் சுனிதாவுக்கு டைபாய்ட்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். போத்ராமின் வேண்டுகோளை மறுத்து, டாக்டர் சுனிதாவுக்கு சத்து கிடைப்பதற்காக குளுக்கோஸ் ஏற்றினார். அவரது மருந்துகள் உடனடியாக அவரை குணப்படுத்தும் என்று கூறினார்.

டைபாய்டாக இருந்தாலும் கூட சில நேரங்களில் அது உலகளவில் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும் என்று ஆராய்ச்சி கட்டுரை ஒன்று கூறுகின்றன. கோவிட் – 19 தொற்றாளர்களுக்கு தவறாக நடத்தப்படும் விடால் பரிசோதனை (டைபாய்டுக்கு செய்யப்படும் பரிசோதனை) வளரும் நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு பொது சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது டெங்கு மற்றும் டைபாய்ட் என தவறாக கணிக்கப்பட்டவர்களை எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். கோவிட் – 19 தொற்று காலத்தில் இந்த தொற்று ஏற்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசித்தை உணர்த்தி லக்னோ மருத்துவ அறிவியல் மைய மயக்க மருந்து நிபுணர் பிரவீன் குமார் தாஸ் கூறுகையில், கோவிட் மற்றும் டைபாய்டு நோய் எதிர்ப்புத்திறன்களுக்கும் இடையில், சில ஒற்றுமைகள் உள்ளன. எங்கள் அனுபவத்தில் டைபாய்டு வந்தவர்களில் 10 சதவீதம் பேருக்கு உண்மையில் கோவிட் தொற்று உள்ளது“ என்கிறார்.

சுனிதா, டைபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டு, ஏப்ரல் 29ம் தேதி, அதிகாலை அவர் குழந்தைகள் குறித்து கேட்ட அரைமணி நேரத்தில் இறந்துவிட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் மற்ற அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களில் இவ்வாறு நடந்துவிட்டது. தனது மனைவி உறங்கிவிட்டதாக போத்ராம் நினைத்தார். அவரது மகன்களை எழுப்பிய அழுகுரல் கேட்பதற்கு முன்னர், அவர் போத்ராமின் கரங்களை தனது நெற்றியில் எடுத்து வைத்துக்கொண்டார். “அப்படியே அவர் எப்போதைக்கும் தூங்கிப்போனார்“ என்று ஆழ்ந்த வருத்தத்துடன், கடந்த வாரம் அவர் கிராமத்தில் இருந்து, என்னிடம் போனில் பேசியபோது, நடந்த அனைத்தையும் விவரித்தும், அவரது இழப்பு குறித்தும் என்னிடம் தெரிவித்தார்.

சுனிதாவின் உடலை தகனம் செய்வதற்கு அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் தேவைப்பட்டது. அது ரபீலா மிஸ்ராவால் வழங்கப்பட்டது. அவர் கார்காப்பூர் ஜாகிரின் தலைவர். ஊதா மையினால், சுனிதா 29.04.2021ல் தனது குடிசையில் இறந்தார் என்று எழுதியிருந்தார். இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

சுனிதாவின் மரணம் கோவிட் இறப்பாக கணக்கிடப்படவில்லை. உத்ரபிரதேசம் மற்றும் மற்ற இடங்களில் குறைத்து கணக்கிடப்பட்ட தொற்றுகளால், கோவிட் – 19 இறப்பு, கணக்கில் காட்டப்பட்டதைவிட மிக அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது.

Ramvati with her son Rakesh Kumar at her husband Ram Saran’s kiosk: they disbelieve the ‘Covid-19 positive’ notation
PHOTO • Rana Tiwari

ராம்வதி, அவரது மகன் ராகேஷ்குமாருடன் அவரது கணவர் ராம் சரணின் பெட்டிக்கடையில். அவர்கள் கோவிட் – 19 தொற்று என்பதை நம்பவில்லை

“நேரடியாக மற்றும் மறைமுகமாகவும் நாம் கோவிட் – 19ஆல் ஏற்பட்ட  இறப்பு எண்ணிக்கையை குறைத்து கணக்கிடுகிறோம்“ என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. “அதிகப்படியான மரணங்கள்“ என்ற பதம், “இயல்பான“ நிலையில் நாம் எதிர்பார்த்ததைவிட அதிகளவிலான மரணங்கள் என்பதை குறிக்கிறது. தொற்றால் ஏற்பட்ட மரணங்களை மட்டும் அது பதிவு செய்யவில்லை, சரியாக கண்டறியப்படாத கோவிட் – 19 தொற்று, அதனால் ஏற்பட்டு பதிவு செய்யப்பட்ட மரணங்கள் மற்றும் ஒட்டுமொத்த நெருக்கடி சூழலுக்கு காரணமாக கூறக்கூடிய அளவிலான மரணங்கள் ஆகியவையும் ஆகும். இது உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் – 19 மரணங்களுடன் ஒப்பிடும்போது, விரிவான மற்றும் துல்லியமான அளவை வழங்குகிறது.

இதுபோன்ற பெரும்பாலான சூழ்நிலைகளில், சரியாக நோய் கண்டறியப்படாத மற்றும் கோவிட்டுடன் தொடர்புடைய இதய திசுக்களில் வீக்கம் ஏற்பட்ட மரணங்களாகும். இது ஆக்ஸிஜன் வழங்குவதற்கு தடையை ஏற்படுத்தி மாரடைப்பை உண்டாக்குகிறது.

லக்னோவிலிருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்தாப்பூர் மாவட்டம் மஹ்முதாபாத் வட்டத்தில் உள்ள மீரா நகர் கிராமத்தில் உள்ள சரண் குடும்பத்திலும் இதுதான் நடந்தது. ஏப்ரல் 22ம் தேதி, மதிய வேளையில் 57 வயதான ராம் சரணுக்கு கடுமையான வலி ஏற்பட்டது. அவரது 56 வயதான மனைவி ராம்வதி தனது கையை எடுத்து, தனது இதயத்திற்கு அருகில் வைத்து, வலி எங்கு ஏற்பட்டது என்று குறிப்பிட்டு காட்டுகிறார்.

ராம்வதி லக்னோவில் வசிக்கிறார். அவர் 16 வயதாக இருந்தபோது தனது கணவருடன் இந்த நகரத்திற்கு வந்தார். நகரின் வடக்குப்பகுதியில் உள்ள அலிகஞ் என்ற இடத்தில் இருவரும் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்தனர். ராம் சரண், தனது பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், சிப்ஸ் மற்றும் சிகரெட்களை விற்று வந்தார். சில மாதங்களுக்கு முன் இந்தப்பொருட்களுடன் முகக்கவசங்களையும் விற்கத்துவங்கினார்.

ஊரடங்கை தொடர்ந்து பெட்டிக்கடையும் மூடப்பட்டதால், ராம் சரண் அடிக்கடி தனது கிராமத்திற்கு சென்று அங்குள்ள தனது மூதாதையர்கள் வீட்டை பார்த்து வந்தார். ராம்வதி வீட்டுவேலைகள் செய்து கிடைத்த வருமானத்தை வைத்துதான் குடும்பம் செலவுகளை சமாளித்தனர்.

ராம்சரண், தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியபோது, ஜெராக்ஸ் கடையில் வேலை செய்யும் அவரது மகன் ராஜேஷ் குமார் உடனடியாக மஹ்முதாபாத்தில் உள்ள சமுதாய சுகாதார மையத்திற்கு அழைத்துச்சென்றார். அது அவர்களது வீட்டிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் ராம் சரணுக்கு இரண்டு ஊசிகள் போட்டார்.

Ramvati in the colony where she does domestic work. With the kiosk (right) shut during the lockdown, the household had run on her earnings
PHOTO • Rana Tiwari
Ramvati in the colony where she does domestic work. With the kiosk (right) shut during the lockdown, the household had run on her earnings
PHOTO • Rana Tiwari

ராம்வதி, தான் வீட்டு வேலை செய்யும் காலனியில், (வலது) அவர்களின் பெட்டிக்கடை ஊரடங்கின்போது மூடிக்கிடந்தது. வீட்டு வேலையில் கிடைத்த வருமானத்தில்தான் குடும்ப செலவுகளை சமாளிக்க முடிந்தது

“அப்போது முதல் எனது தந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அங்கும் ஒரு சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர் மட்டுமே இருந்ததாக கூறிய மருத்துவர், உடனடியாக எனது தந்தையை கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு கூறினார்“ என்று குமார் நினைவு கூறுகிறார். உடனடியாக 108 என்ற எண்ணை அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. (ஆம்புலன்ஸ் சேவைக்காக மாநிலத்தில் உள்ள எண்). ஆனால் ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்ட உடனே ராம்சரண் இறந்துவிட்டார். இது ஏப்ரல் 22ம் தேதி மதியம் இரண்டரை மணியளவில் நடக்கிறது.

“நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டே இருந்தார். மிக ஆரோக்கியத்துடன் இருந்த மனிதர் தனது மூச்சை நிறுத்திவிட்டார்“ என்று குமார் கூறுகிறார்.

இறப்புச்சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை. ராம் சரணின் உடலும்  அன்று மாலையே கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. சமூக சுகாதார மையத்தில் இருந்த மருத்துவர், அவர் கோவிட் – 19 தொற்றுக்கு ஆளானவர் என்று எழுதிக்கொடுத்திருந்தபோதும், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அந்தக்குடும்பத்தினர் இப்போதும் அவர் மாரடைப்பால் இறந்தார் என்றே நம்புகிறார்கள்.

சமுதாய சுகாதார மையத்தில் ராம் சரணுக்கு போதிய வசதிகள் கிடைக்காதது மாநிலத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அவலமான சுகாதார வசதிகள் குறித்து கூறுகிறது. இதுகுறித்து, மே 17ம் தேதி இரண்டு நீதிபதிகள் கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு, இதுபோன்ற சுகாதார வசதிகள் பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்திருந்தது.

சமுதாக சுகாதார மையம் அல்லது மாவட்ட மருத்துவமனைகளில் மட்டும் தொற்று காலத்தில் இந்த அவல நிலை ஏற்படவில்லை. தலைநகர் லக்னோவிலே இதுபோன்ற பற்றாக்குறை  நிலைதான் இருந்தது என்பதை சில மாதங்களுக்கு முன்னர் மயூர்யாவின் குடும்பத்தினரின் அனுபவத்தில் இருந்து அறியலாம்.

ஏப்ரல் 12ம் தேதி, லக்னோவில் உள்ள சின்ஹாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில்குமார் மயூர்யா (41) தனது சகோதரரின் மகன் பவனிடம், “என்னால் மூச்சுவிட முடியவில்லை. ஏன் என்னை இந்த மருத்துவமனையில் வைத்திருக்கிறீர்கள். என்னை வீட்டிற்கு அழைத்துச்சென்றால் நான் நன்றாகிவிடுவேன்“ என்று கூறினார்.

அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், மயூர்யாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு இருமலும் வந்தது. ஆனால் அது அவருக்கு வழக்கமாக ஏற்படக்கூடிய ஒன்றுதான் என்பதால், குடும்பத்தினராக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், “நடக்கக்கூடிய சக்தி என்னிடம் இல்லை“ என்று அவர் கூறியபோதுதான் அவரது குடும்பத்தினர் எச்சரிக்கையடைந்தனர் என்று 30 வயதான பவன் நினைவு கூறுகிறார்.

மயூர்யா குடும்பத்தினர், மத்திய லக்னோவில் கோம்திநகர் பகுதியில் உள்ள சிறிய ஜீகவுளி எனும் சேரி பகுதியில் வசிக்கின்றனர். அந்த சிறிய சேரி பகுதிதான் புலம்பெயர்ந்து வரும் பெரும்பாலானோருக்கு வசிப்பிடம். சுனில்குமார், சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்சிங்பூர் வட்டம் பிரிசிங்பூர் கிராமத்தில் இருந்து இருபது ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தார். அவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணிபுரிந்தார். கட்டுமான பணிகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது அவரது வேலை.

Rakesh Kumar with a photo of his father Ram Saran on his phone: the family's inability to get care at the CHC speaks of the precarious health facilities in the state’s towns and villages
PHOTO • Rana Tiwari

ராகேஷ் குமார் போனில் தனது தந்தையின் போட்டோவுடன் இருக்கிறார். சமுதாய சுகாதார மையத்தில் அவருக்கு சிகிச்சை கிடைக்காதது மாநிலத்தில் உள்ள கிராமம் மற்றும் நகரத்தில் உள்ள சுகாதார கட்டமைப்பின் அவல நிலையை காட்டுவதாக உள்ளது

மக்கள் அடர்த்தி நிறைந்த அந்த சிறிய சேரி பகுதி அதன் மக்கள் அதிகமென்பதால், பெரிய ஜீகவுளி என்றழைக்கப்டுவது ஒன்றரை கிலோமீட்டர் பரந்துவிரிந்த பகுதி. அதில் ஒரு ஆரம்ப சுகாதார மையமும், 6 அங்கன்வாடி மையமும் உள்ளது.

தொற்று துவங்கியது முதல் இங்கு ஒரு விழிப்புணர்வு முகாம் கூட நடக்கவில்லை. முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் கூட வழங்கப்படவில்லை என்று ஆங்கிலத்தில் ஆஷா என்றழைப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயற்பாட்டாளர் கூறுகிறார். அவர் அரசின் நடவடிக்கைக்கு அஞ்சி தனது பெயரை கொடுக்க விரும்பவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு மேல் உள்ள இந்தப்பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நிச்சயம் கோவிட் – 19 ஏற்பட்டிருக்கும். ஆனால், பரிசோதனையோ அல்லது பதிவு செய்யப்பட்ட பாதிப்போ இங்கு குறிப்பிடப்படவில்லை என்று அவர் உறுதியாக கூறுகிறார்.

அவர் கண்காணிப்பில் உள்ள 1,517 வீடுகளில் ஒரு குடும்பத்தில் கூட கோவிட் மரணம் பதிவு செய்யப்படவில்லை. “மக்கள், சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் இறந்தார்கள். ஆனால், ஒருவர் கூட பரிசோதனை செய்துகொள்ள விரும்பவில்லை“ என்று சில மாதங்களுக்கு முன் அவர் என்னிடம் தெரிவித்தார். “மார்ச் 2000ல் தினமும் 50 வீடுகளில் அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் குறித்து நாங்கள் விவரம் சேகரிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், தற்போது ஆபத்து உள்ளதால் நான் வெளியில் செல்வதில்லை. நான் எனது பகுதியில் குழுக்களை உருவாக்கி, போனில் எனக்கு தகவல்களை தரும்படி கேட்டுக்கொண்டேன்“ என்று கூறுகிறார்.

உள்ளூர் சுகாதார ஊழியர் எளிதாக கிடைக்கவில்லை மற்றும் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் எங்கோ கோவிட் பணிக்காக அனுப்பப்பட்டிருந்ததால், மயூர்யா பாதிக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒருவர் கூட இல்லை.

அறிவியல் படித்த பவன், சிறிய ஜீகவுளியில் ஒரு மருத்துவரின் சிகிச்சையகத்தில் பணிபுரிபவர் என்பதால், தனது சித்தப்பாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவருக்கு ஒரு பரிசோதனைக்கு ரூ.500 வாங்கப்பட்டது. ஆனால், அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துவிட்டது. அவர் பின்னர் மயூர்யாவை, 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டி.எஸ். மிஸ்ரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு அந்தப்பரிசோதனை நம்பத்தகுந்ததாக இருக்காது. எனவே அவருக்கு படுக்கை ஒதுக்க முடியாது என்று கூறினார்கள்.

ஆனால், அங்கு பணியில் இருந்த அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவர் அவருக்கு கோவிட் – 19 அறிகுறிகளுக்கு வழங்கப்படும் இவார்மெக்டீன், வைட்டமின் சி மற்றும் சிங்க் மாத்திரைகளை பரிந்துரைத்தார்.

Pawan Maurya: the antigen test turned up negative so his uncle Sunil Kumar Maurya could not be allotted a bed
PHOTO • Rana Tiwari

பவன் மயூர்யா: அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதனால், அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை

சுனில் மயூர்யாவின் ஆக்ஸிஜன் அளவு அப்போது முதல் 80க்கு குறைந்துவிட்டது. அந்த குடும்பத்தினர் இரண்டு மருத்துவமனைகளில் முயற்சி செய்தனர். அவர்கள் அவருக்கு செயற்கை சுவாச கருவி வசதி தேவைப்படுவதாக கூறிவிட்டனர். அவர்களிடம் அந்த வசதி இல்லை. 4 மணி நேர அலைச்சலுக்குப்பின்னர் அவரை உள்நோயாளியாக அனுமதிக்கும் ஒரு மருத்துவமனை கிடைத்துவிட்டது. அவருக்கு அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டது. மற்றொரு பரிசோதனை, ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

ஏப்ரல் 12ம் தேதி, சில மணி நேர மூச்சுத்திணறலுக்குப்பின் அவர் இறந்துவிட்டார். லக்னோ மாநகராட்சி (உடல் தகனம் செய்யப்படுவதற்கு தேவை என்பதால்) மாரடைப்பால் இறந்தால் என சான்றிதழ் வழங்கியது. இரண்டு நாட்கள் கழித்து வந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக கூறியது.

“ஒரே வாரத்தில் அனைத்தும் முடிந்துவிட்டது. பரிசோதனைகள் எங்களுக்கு கைகொடுக்கவில்லை“ என்று பவன் கூறுகிறார்.

“தொற்றின் இரண்டாவது அலை, சுகாதார வசதிகள் குறைபாடு மற்றும் பொருளாதார வசதியின்மை போன்றவற்றால், முறையான நோய் கண்டறியக்கூட முடியாமல் நகரத்தில் உள்ள ஏழை மக்கள் விடப்பட்டார்கள்“ என்று ரிச்சா சந்த்ரா கூறுகிறார். இவர் லக்னோவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் விக்ஞான் அறக்கட்டளையின் திட்ட மேலாளர். அறக்கட்டளை நகர்புற சேரிகள், வீடற்றவர்கள் மற்றும் தினக்கூலிகளுக்காக பணி செய்கிறது. நகர்புறத்தில் வசிக்கும் ஏழை மக்கள் குறைந்தபட்ட வேலை மற்றும் பாதுகாப்பு, குறைவான விழிப்புணர்வு, நெரிசலான குடியிருப்புகள் மற்றும் தற்போது, கொரோனா தொற்று அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

அவர்கள் பரிசோதனை செய்துகொள்வதற்கு அஞ்சுவதுகூட, ஆன்டிஜன் மற்றும் ஆர்டிபிசிஆர் ஆகிய இரண்டு பரிசோதனைகளுமே தவறாக தொற்று இல்லை என்ற முடிவை கொடுத்துவிட வாய்ப்புள்ளதால் தான்.

“ஆர்டிபிசிஆர் பரிசோதனை தவறான முடிவுகளை கொடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன“ என்று ஜோட்ஸ்னா அகர்வால் கூறுகிறார். இவர் லக்னோ மருத்துவ அறிவியல் மையத்தின் நுண்ணுயிரியல் மையத்தின் தலைவர். “பரிசோதனை ஆர்என்ஏவின் பெருக்கத்தின் அடிப்படையில் நடத்துப்படுகிறது. டிஎன்ஏ போல் இல்லாமல் அது வாழ்வதற்கு குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் தேவைப்படுகின்றன. மேலும் சளி மாதிரிகள் முறையாக எடுக்கப்படாமல் இருந்தாலும், பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்படாமல் இருந்தாலும் முடிவுகள் தவறாகலாம். ஆன்டிஜன் பரிசோதனைகள் உடனடியாக முடிவுகளை கொடுப்பதால், அவை ஆர்என்ஏவின் பெருக்கத்தை கூறுவதில்லை. அது ஒரு வைக்கோல் போரில் ஊசியை தேடுவதைப்போன்றது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

Neither private clinics nor government hospitals would admit Sadrunisha's son Suaib as his Covid test was negative.
PHOTO • Courtesy: Sadrunisha
Neither private clinics nor government hospitals would admit Sadrunisha's son Suaib as his Covid test was negative
PHOTO • Courtesy: Vigyan Foundation

தனியார் சிகிச்சையகங்களோ அல்லது அரசு மருத்துவமனைகளோ சாதுர்நிஷாவின் மகன் சுயாபை அவருக்கு கோவிட் தொற்று இல்லை என்பதற்காக அனுமதித்திருக்கலாம்

மத்திய லக்னோவின் மனக்நகர் பகுதியில் கார்ஹி கணுவராவைச் சேர்ந்த 38 வயதான சுயாப் அக்தருக்கு கொரோனா தொற்று இல்லை என ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வந்தது.

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தான் அக்தர் அம்மை நோயிலிருந்து குணமடைந்திருந்தார். ரம்ஜான் மாதத்திற்காக நோன்பு (ஏப்ரல் 13ம் தேதி துவங்கியது) இருந்தார். அவரது தாய் 65 வயதான சாதுர்நிஷா வேண்டாம் என்று அறிவுறுத்தியும் நோன்பு இருந்தார்.

ஏப்ரல் 27ம் தேதி, அக்தருக்கு இருமலும் மூச்சுதிணறலும் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையும், சிடி ஸ்கேனும் அருகில் உள்ள நோயியல் சோதனை மையத்தில் ரூ.7,800க்கும் செய்தனர். பரிசசோதனையில் அவருக்கு தொற்று இல்லையென்றும், சிடி ஸ்கேனில்ல்ல அவருக்கு நிமோனியா என்றும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், தனியார் சிகிச்சையகங்கள் அல்லது அரசு மருத்துவமனைகள் அவருக்கு கோவிட் தொற்று இல்லையென்பதால், அவரை அனுமதிக்கவில்லை. அவர்கள் கோவிட் தொற்று உள்ளவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தனர். அனைத்து படுக்கைகளும் நிரம்பின. அவசரமில்லாத சிகிச்சையாளர்கள் காக்கவைக்கப்பட்டனர்.

ஏப்ரல் 30ம் தேதி அக்தர் ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டும் மூச்சுவிட முடியாமல் இறந்துவிட்டார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்காத நிலையிலும், அவருக்கு வீட்டிலேயே குடும்பத்தினர் ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருந்தனர். “அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாயால் அவர் மூச்சு வாங்கினார்“ என்று சாதுர்நிஷா கூறுகிறார்.

அவர் தனது மகனை திறமையான எலக்ட்ரீஷியன் என்று குறிப்பிடுகிறார். அவருக்கு அண்மையில்தான் கத்தாரில் வேலை செய்வதற்கான பணி ஆணை கிடைத்திருந்தது. “அவர் வேலைக்கு செல்வதற்கான விசா கிடைப்பதற்கு முன்னரே மரணம் அவருக்கு விசா கொடுத்துவிட்டது“ என்று அவர் கண்ணீருடன் கூறினார்.

அக்தரின் உடல், அவரது வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரேம்வதி நகரில் உள்ள தக்கியா மீரான் மைதானத்தில் புதைக்கப்பட்டது. அங்கு அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. சாதுர்நிஷா, தனது மகனுக்கு அம்மை நோய் ஏற்பட்டதன் விளைவாக எதிர்ப்புத்திறன் குறைவு காரணமாக கோவிட் – 19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

2020ம் ஆண்டு ஜீன் 14ம் தேதி, “கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகமுடைய மரணங்களில் உடலை உடனடியாக அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம், கோவிட் உள்ளதா என்ற ஆய்வகத்தின் அறிக்கைக்காக காத்திருக்க வேண்டிய தேவையில்லை“ என்று இந்திய அரசு அறிவித்தது .

Two days after his death, the family – Vimla and sons Gyanendra Kumar, Dheerendra Kumar and Abhishek – received the test result which said he was Covid-19 positive, but his death certificate (left) says otherwise
PHOTO • Durgesh Singh
Two days after his death, the family – Vimla and sons Gyanendra Kumar, Dheerendra Kumar and Abhishek – received the test result which said he was Covid-19 positive, but his death certificate (left) says otherwise
PHOTO • Durgesh Singh

அவர் இறந்த இரண்டு நாட்கள் கழித்து அவரது குடும்பத்தினர் விம்லா மற்றும் மகன்கள் ஞானேந்திர குமார், தீரேந்திர குமார் மற்றும் அபிஷேக் ஆகியோருக்கு கிடைத்த பரிசோதனை முடிவுகள் அவருக்கு கோவிட் – 19 தொற்று ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்கிறது. ஆனால், அவரின் (இடது) இறப்புச்சான்றிதழ் வேறு விதமாக கூறுகிறது

அறிகுறி இருந்தும், தொற்று ஏற்படவில்லை என்று பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றவர்களும் கோவிட் – 19 மரணங்களில் சேர்ப்பதற்கான சாத்தியமில்லை என்று இதற்கு அர்த்தம்.

உன்னாவ் மாவட்டம் பிகாபூர் வட்டம் குதுப்புதீன் கர்ஹேவா கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமாரும் அதில் ஒருவர். யாதவ் (56), மாநில மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிபவர். அவர் ஏப்ரல் 22ம் தேதி முதல் அவதிப்பட்டு வந்த காய்ச்சல் மற்றும் இருமலுக்கு உள்ளூரில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கி அதை சாப்பிட்டார். இருமல் அதிகமாகி, அவர் மிக சோர்வடைந்த பின்னர், ஏப்ரல் 25ம் தேதி அவரது குடும்பத்தினர் அவரை 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு மாதிரி மட்டும் கொடுத்துவிட்டு வந்தார். அடுத்த நாள் காலை படுக்கையிலிருந்து எழுந்து கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்து இறந்தார்.

“எழுந்து சென்றபோதே திடீரென மயங்கி விழுந்து உடனே இறந்தும்விட்டார்“ என்று அவரது மனைவி விம்லா கூறுகிறார். இவர் வேலைக்கு எதுவும் செல்வதில்லை. வீட்டை கவனித்துக்கொள்கிறார்.

அவர்களுக்கு 19 முதல் 25 வயது வரை மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது உடலை எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமின்றி தகனம் செய்துவிட்டனர். இரண்டு நாட்கள் கழித்து தான், அவருக்கு கோவிட் – 19 தொற்று ஏற்பட்டுள்ளது என்ற பரிசோதனை முடிவு கிடைத்தது. மாவட்ட மருத்துவமனையால் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் இதய சுவாச செயலிழப்பு ஏற்பட்டதால் மரணம் என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது.

“நாங்கள் அனைத்து கோவிட் – 19 இறப்பையும் பதிவு செய்யவே முயற்சி செய்தோம், எல்லோருக்கும் பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்பது உண்மைதான். சிலருக்கு முடிவுகள் தாமதமாகக் கிடைத்தது. நாங்கள் தற்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறோம்“ என்று கிரிஜா சங்கர் பாஜ்பாய் கூறுகிறார். இவர் மாநில சுகாதார துறையின் மைய இயக்குனர் மற்றும் லக்னோ கோவிட் – 19 மேலாண்மையை கண்காணிப்பவர்.

எனினும், இதுபோன்ற எத்தனை மரணங்கள் பதிவு செய்யப்படாமல் போனதோ, அது இனியும் தொற்றால் இறந்தவர்கள் என்ற கணக்கில் கொண்டுவரப்படாது. இனி தெரியவும் தெரியாது.

துர்கேஷ் சிங் உன்னாவ் கொடுத்த தகவல்களுடன் எழுத்தப்பட்டுள்ளது.

தமிழில் : பிரியதர்சினி R.

Rana Tiwari

Rana Tiwari is a freelance journalist based in Lucknow.

यांचे इतर लिखाण Rana Tiwari
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

यांचे इतर लिखाण Priyadarshini R.