ஒரு லிட்டர் கழுதை பாலுக்கு 7 ஆயிரம் ரூபாயா? ஒரு லிட்டர் ஏதாவது ஒன்றுக்கு? பைத்தியக்காரத்தனமாக உள்ளது. ஆனால், குஜராத் மாநிலம் சவுராஷ்டிராவில் ஹலாரி கழுதைகளின் பாலின் விலைதான் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாத செய்தித்தாளின் தலைப்புச் செய்தியாக இருந்தது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இது உண்மையாக இருந்தது. வழக்கமாக இந்த விலை கிடைக்கும் என்று நீங்கள் எண்ணினால், குஜராத்தின் ஹராலி வளர்க்கும் சமுதாயத்தினர் உங்களை பார்த்து சிரிப்பார்கள்
இந்த வகை பால் இந்த விலை விற்பதற்கு காரணம், அதில் அரிதான மருத்துவ குணங்கள் இருப்பதால் என்பது தெரிகிறது. குஜராத்தில் அதிகபட்சமாக லிட்டர் ரூ.125க்கு விற்கப்பட்டு வருகிறது. அதுவும் ஆராய்ச்சிக்காக ஒரு நிறுவனத்தினர் வந்து குறிப்பிட்ட அளவில் மட்டுமே பெற்றுச்செல்கிறார்கள்.
நான் இங்கே சவுராஷ்டிராவில் இருந்தபோது, அந்த பத்திரிக்கையின் தலைப்புச்செய்தியை தொடர்ந்து சென்றேன். ராஜ்கோட் மாவட்டத்தின் பருத்தி தரிசு வயலில், நான் கோலாபாய் ஜீஜீபாய் பர்வாடை சந்தித்தேன். தனது 60 வயதுகளில் மேய்ச்சல் விலங்குகள் வளர்த்து வருகிறார். அவர் தேவ்பூமி துவாரகா மாவட்டம் பந்த்வாட் வட்டம் ஜாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். வழக்கமாக ஆண்டுதோறும் குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து செல்லும்போது நான் வழியில் சந்தித்தேன். செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் மந்தையையுடன் 5 ஹலாரி வகை கழுதைகளையும் வளர்த்து வருகின்றனர்.
“ரேபரி மற்றும் பர்வாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஹலாரி இன கழுதைகளை வளர்த்து வருகிறார்கள்“ என்று கோலாபாய் கூறினார். “அவர்களிலே சில குடும்பத்தினர் மட்டுமே பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்கிறார்கள். இந்த விலங்குகள் அழகாக இருக்கும். ஆனால், வாழ்வாதாரத்திற்கு உதவாது. அவை ஒரு வருமானமும் தராது“ என்கிறார். கோலாபாயும், அவரது 5 சகோதரர்களும் சேர்ந்து 45 கழுதைகள் வைத்துள்ளனர்.
மேய்ச்சல் விலங்குகள் வளர்க்கும் நாடோடிகளின் வருமானத்தை கணக்கிடுவது மிகவும் குழப்பமான ஒன்றாகும். அவர்களுக்கு நிலையான வருமானம் இல்லை. குறிப்பிட்ட அளவு என்றும் சொல்லி விட முடியாது. மற்றவர்கள் செய்வதுபோல் வழக்கமான மாத செலவுகள் அவர்களுக்கு இருக்காது, உதாரணமாக, மின்சாரம் மற்றும் பெட்ரோல் போன்ற செலவுகள் இல்லை. ஆனால், புஜ்ஜில் உள்ள தொண்டு நிறுவனமான சஜீவன் மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்கள் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 5 பேர் கொண்ட ஒரு மேய்ச்சல் விலங்குகள் வளர்க்கும் குடும்பத்தினரின், மொத்த வருமானம் மந்தையின் அளைவைப்பொறுத்து, ஆண்டொன்றுக்கு, ரூ.3 முதல் 5 லட்சம் வரை இருக்கும். நிகர வருமானம் (அனைத்து செலவுகளுக்குப்பின்னர்) ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த வருமானம், ஆடுகளில் பால் மற்றும் ரோமங்களை விற்பதன் மூலம் கிடைப்பதாகும்.
கழுதைகள் மிக குறைவான வருமானத்தையே ஈட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் வருமானம் குறைந்து வருவதால், மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பவர்கள், ஹலாரி இன கழுதைகள் வளர்ப்பதை கடினமாக கருதுகின்றனர்.



















