"நான் எல்லா வகையான புயல்களையும் பார்த்திருக்கிறேன், ஆனால் இது வேறுவிதமானது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்தது. மதிய வேளையில் ஒரு முரட்டுக்காளை எங்களை துரத்துவது போல வயலுக்குள் நீர் புகுந்தது. நான் எனது சகோதரரின் மாற்றுத்திறனாளி மகனை தூக்கிக் கொண்டு விரைந்து ஓடினேன்", என்று மேற்கு வங்கத்தின் சுந்தரவனத்தில் உள்ள தக்ஷின் காசியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியரான சுவபன் நாயக் விவரித்தார்.
மே 20 ஆம் தேதி அன்று காற்றின் வேகம் 185 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வீசியது, அம்பான் புயல் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கக்தீப் வட்டத்திலுள்ள ராம்கோபால்பூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு அருகில் தான் கரையை கடந்தது.
இந்த கிராமவாசிகள் சந்தித்த புயல்களிலேயே இது சற்று வித்தியாசமானதாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு வீசிய ஐலா புயலோ அல்லது 2019 ஆம் ஆண்டு வீசிய புல்புல் புயலோ, அம்பான் புயல் செய்த சேதாரத்தை சுந்தரவனத்திற்கு செய்யவில்லை என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
"எங்களது பள்ளியும் பேரழிவுக்கு உட்பட்டது. மேற்கூரை பறந்துவிட்டது மேலும் நான்கு வகுப்பறைகளும் நாசமாகிவிட்டன. நூறு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது", என்று தனியாரால் நடத்தப்படும் தக்ஷின் காசியாபாத்தில் உள்ள மனப் தீர்த்த தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நாயக் கூறுகிறார்.
மே 20 ஆம் தேதி அன்று சுந்தரவனத்தை நோக்கி "அதிதீவிர சூறாவளிப் புயலான" அம்பான் நகரத் துவங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மாலை 4.30 மணி அளவில் அம்பான் புயல் கக்தீபிற்கு தென்மேற்கே உள்ள சாகர் தீவிற்கு அருகில் கரையைக் கடந்தது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கக்தீப், குல்டலி, நம்கானா, பதர்பிரதிமா மற்றும் சாகர் ஆகிய வட்டங்கள் புயல் கரையை கடந்த பகுதிக்கு மிக அருகில் இருந்தன மேலும் இவைதான் தெற்கு வங்காளத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள், அங்கு இந்த புயல் மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மே 29 ஆம் தேதியன்று கக்தீப் பேருந்து நிலையத்திலிருந்து தக்ஷின் காசியாபாத் செல்லும்போது சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது. சாலையின் இருபுறமும் சிதைந்து கிடந்ததை நாங்கள் கண்டோம். மரங்கள் வேரோடு சரிந்து கிடந்தன மேலும் வீடுகள் மற்றும் கடைகளும் நாசமாகி இருந்தன.
ரஞ்சன் கயன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தக்ஷின் காசியாபாத் செல்லும் வழியில் உள்ள நேதாஜி பஞ்சாயத்தில் இருக்கும் மாதப் நகரில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள நன்னீர் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். புயலால் கடல் நீர் உட்புகுந்து குளத்தை மாசுபடுத்தியுள்ளது. இந்த ஆண்டு நன்னீர் மீன்களை வளர்ப்பதற்காக நாங்கள் சுமார் 70,000 ரூபாய் முதலீடு செய்துள்ளோம். அவை அனைத்தும் இப்போது இறந்துவிட்டன. சந்தையில் விற்பதற்கு மீன்கள் ஏதும் மீதம் இருக்கிறதா என்று நாங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் போட்டிருந்த வெற்றிலை கொடிகளும் அழிந்துவிட்டது அதனால் இப்போது எங்களது ஒட்டுமொத்த குடும்பமே கடனில் மூழ்கியுள்ளது என்று கூறிய அவர் இழப்பீட்டின் மதிப்பீடு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறுகிறார். "எங்களுக்கு மகிழ்ச்சியான நாட்கள் எப்போதும் திரும்பப் போவதில்லை", என்று அவர் கூறுகிறார்.


















