ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ஹர்சனா கலன் கிராம இளைஞர்கள் குளிர்கால மதிய வேளைகளில், வயலில் வேலை முடிந்த பிறகு மரத்தடி நிழலில் இளைப்பாறுவது அல்லது சீட்டுக்கட்டு விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அங்கு பெண்களை பார்க்கவே முடியாது.

“இங்கு ஏன் பெண்கள் வர வேண்டும்?" என்று கேட்கிறார் அவ்வூர் வாசியான விஜய் மண்டல். “அவர்களுக்கு எப்போதும் வேலை இருப்பதால் இதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. அதுவுமில்லாமல் இதுபோன்ற பெரிய மனிதர்கள் கூடும் இடத்தில் அவர்களுக்கு என்ன வேலை? " என்று கேட்கிறார் அவர்.

நாட்டின் தலைநகரான டெல்லியிலிருந்து வெறும் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கிராமத்தில் சுமார் 5,000 பேர் வசிக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை இக்கிராம பெண்கள் வெளியில் செல்லும்போது, கண்டிப்பாக முகத்தை துணியால் மூடிக் கொண்டுதான் செல்ல வேண்டும்.

“ஊர் மத்தியில் ஆண்கள் கூடும் இடங்களை பெண்கள் பார்க்கவும் கூடாது” என்கிறார் மண்டல். ஆண்கள் கூடும் இந்த இடத்தில் தான் பிரச்சனைகளை தீர்க்க பஞ்சாயத்து கூட்டங்கள் நடைபெறுகின்றன. “அக்கால பெண்கள் எல்லாம் பாரம்பரியத்தை மதித்தார்கள்” என்று சொல்கிறார் ஹர்சனா கலனின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சதிஷ் குமார்.

“அவர்களிடம் கண்ணியம், மரியாதை இருந்தது” என்று சொல்லும் மண்டல், “அவர்கள் பஞ்சாயத்து கூடும் இடங்களுக்குக் கூட முகத்தை மூடிக் கொண்டு தான் வருவார்கள்” என்று  புன்னகை மலரச் சொல்கிறார்.

டெல்லிக்கு அருகே உள்ள மஜ்ரா தபாஸ் எனும் கிராமத்திலிருந்து 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இக்கிராமத்திற்கு வந்த 36 வயதாகும் சாய்ராவிற்கு இந்தக் கட்டுப்பாடுகள் ஒன்றும் புதிதல்ல. ஆண்களைப் போல் குலப்பெயரை போட்டுக் கொள்ளாமல் முன்பெயரை மட்டும் வைத்துக் கொள்ளவே அவர் விரும்புகிறார்.

“திருமணத்திற்கு முன்பே என் கணவரை பார்த்திருந்தால், இதற்கு சம்மதித்திருக்க மாட்டேன். இக்கிராமத்திற்கு வருவதற்கும் நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன்” என்று சொல்லும் சாய்ராவின் விரல்கள், தையல் இயந்திரத்தில் லாவகமாக ஊதா நிறத் துணியை செலுத்தி, திறன்பட தைத்துக் கொண்டிருக்கின்றன. (இக்கட்டுரையில் அவரது பெயர், அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.)

Saira stitches clothes from home for neighborhood customers. 'If a woman tries to speak out, the men will not let her', she says

'பெண்கள் பேச நினைத்தாலும், இந்த ஆண்கள் விடுவதில்லை' என்கிறார் வீட்டிற்கு அருகே உள்ள வாடிக்கையாளர்களுக்கு துணிகளை தைத்துக் கொடுக்கும் சாய்ரா.

“இந்த கிராமத்தில் பெண்கள் பேச நினைத்தாலும், ஆண்கள் அவர்களை அனுமதிப்பதில்லை. வீட்டில் ஆண்கள் இருக்கும்போது நீ பேச வேண்டிய அவசியம் என்ன? என்பார்கள். பெண்கள் வீட்டை தாண்டி வெளியே வரக் கூடாது என என் கணவரும் சொல்வார். துணி தைப்பதற்கு தேவையான சில பொருட்களை வாங்க வெளியே செல்ல நேர்ந்தால் கூட வீட்டிற்குள் இரு. அது தான் உனக்கு நல்லது என்பார்“ என்கிறார் சாய்ரா.

அவரது கணவரான 44 வயதாகும் சமிர் கான் டெல்லி அருகே நரேலாவில் பிளாஸ்டிக் அச்சுவார்க்கும் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். ”பெண்களை ஆண்கள் பார்க்கும் விதம் உனக்குப் புரியாது” என்று கணவர் தன்னிடம் அடிக்கடி கூறுவதாகச் சொல்லும் சாய்ரா, “வீட்டிலேயே இருப்பதுதான் உனக்குப் பாதுகாப்பு; வெளியே நிறைய ஓநாய்கள் சுற்றுகின்றன” என்று கணவர் சொன்னதை நினைவுகூர்கிறார்.

இதுவரை பார்த்திடாத அந்த ஓநாய்களுக்கு பயந்து சாய்ராவும் வீட்டிலேயே இருக்கிறார். ஹரியானாவின் 64.5 சதவீத கிராமப்புற பெண்கள் ( தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4, 2015-16ன்படி) சந்தைக்கோ, சுகாதார நிலையத்திற்கோ அல்லது கிராமத்திற்கு வெளியேவோ தனியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சாய்ரா தினமும் மதிய வேளையில் வீட்டின் ஜன்னலுக்கருகில் போடப்பட்டிருக்கும் தையல் எந்திரத்தில் துணி தைக்கிறார். பகலில் மின்வெட்டு ஏற்பட்டால் அங்குதான் தைப்பதற்குப் போதுமான வெளிச்சம் கிடைக்கும். தினமும் மதியம் தைப்பதன் மூலம் அவர் மாதத்திற்கு ரூ. 2,000 சம்பாதிக்கிறார். இதைக் கொண்டுதான் தனது மகன்களான 16 வயதாகும் சோஹைல் கானுக்கு, 14 வயதாகும் சன்னி அலிக்கும் வேண்டியதை வாங்கித் தருகிறார். தனக்கு வேண்டியதை அரிதாகவே வாங்கி கொள்கிறார்.

தன் இரண்டாவது மகன் சன்னி பிறந்த சில மாதங்களில் சாய்ரா குடும்ப கட்டுப்பாட்டு அறுவை கிசிக்சை செய்து கொள்ள முயற்சித்தார். இதுபற்றி அவரது கணவர் சமிருக்கு தெரியாது.

15 வயது முதல் 49 வயதிலான திருமணமான பெண்களின் கருத்தடை பரவல் வீதம் (CPR) ஹரியானாவின் ஒட்டுமொத்த சதவீதம் 64 ஆக இருக்கிறது. ஆனால், சோனிபட் மாவட்டத்தை அதைவிடக் கூடுதலாக 78 சதவீதமாக (NFHS-4) இருக்கிறது.

இரண்டாவது மகன் பிறந்த சில மாதங்களில் சாய்ரா கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள இரண்டு முறை முயற்சி செய்துள்ளார். ”முதல் தடவை என் பெற்றோரின் ஊரான மஜ்ரா தபாசில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அணுகினேன். என்னைப் பார்த்தால் திருமணமான பெண்ணாக தெரியவில்லை என்று கூறி மருத்துவர் மறுத்துவிட்டார். இரண்டாவது முறை அதே மருத்துவமனைக்கு எனது மகனையும் ஆதாரத்திற்காக அழைத்துச் சென்ற போது, இந்த முடிவை சொந்தமாக நீ எடுப்பதற்கு உனக்கு வயசு பத்தாது என்று மருத்துவர் கூறிவிட்டார்” என்கிறார் சாய்ரா.

டெல்லியின் ரோஹினியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது பெற்றோருடன் தங்கியிருந்த போது சாய்ரா வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்துள்ளார்.

Only men occupy the chaupal at the village centre in Harsana Kalan, often playing cards. 'Why should women come here?' one of them asks
Only men occupy the chaupal at the village centre in Harsana Kalan, often playing cards. 'Why should women come here?' one of them asks

ஹர்சனா கலன் கிராமத்தின் மத்தியில் ஆண்கள் கூடி அடிக்கடி சீட்டுக்கட்டு விளையாடுகின்றனர். 'இங்கு ஏன் பெண்கள் வரவேண்டும்?' என அவர்களில் ஒருவர் கேட்கிறார்

இந்த முறை சென்றபோது என் கணவர் குடிகாரர் என பொய் சொல்லி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று புன்னகையுடன் நடந்தை நினைவு கூர்கிறார் சாய்ரா. ஆனால் அவருக்கு என்ன வேண்டுமென்கிற தெளிவு இருந்தது. “வீட்டில் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தொடர்ந்து பிரச்சனை, போராட்டம் தான். இனிமேல் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன்“ என்கிறார்.

அன்றைக்கு நடந்த சம்பவங்களை சாய்ரா இப்படி நினைவு கூர்கிறார்: “அன்று மழை பெய்து கொண்டிருந்தது. மருத்துவமனை வார்டின் கண்ணாடி கதவருகே உட்கார்ந்திருந்த என் தாயின் கைகளில் இருந்த சின்னவன் அழுதுக் கொண்டிருந்தான். என் அருகில் ஏற்கனவே அறுவை சிகிச்சையை முடித்திருந்த பெண் (மயக்க மருந்து செலுத்தப்பட்டதால்) தூங்கிக் கொண்டிருந்தார். எனக்கு சீக்கிரமே மயக்கம் தெளிந்துவிட்டது. நான் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டுமே என்ற கவலையில் இருந்தேன். ஒரே தவிப்பாக இருந்தது.”

இதுபற்றி தெரிந்ததும் சமிர் சில மாதங்கள் சாய்ராவிடம் பேசாமல் இருந்துள்ளார். சாய்ரா தன்னிச்சையாக எடுத்த முடிவால் அவர் கோபமடைந்துள்ளார். கருப்பை கருவிகளான காப்பர் டி போன்றவற்றை பயன்படுத்தவே அவர் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் மீண்டும் பிள்ளை பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் சாய்ரா உறுதியாக இருந்திருக்கிறார்.

“வீட்டு வேலைகளுடன் சேர்த்து வயல்கள், எருமை மாடுகளையும் நான் தான் கவனித்து வருகிறேன். கருப்பை கருவிகளைப் பயன்படுத்தும் போது ஏதும் நடந்துவிட்டால் என்ன செய்வது?” என்று சொல்லிக் கொண்டே, தனது 24ஆவது வயதில் கருத்தடை குறித்தும், வாழ்க்கை குறித்தும் ரொம்பவும் தெரியாமல் குழப்பத்தில் இருந்ததை நினைவுகூர்கிறார், 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சாய்ரா.

சாய்ராவின் தாயார் படிப்பறிவு இல்லாதவர். ஆனால் அவரது தந்தை படித்தவர். இருந்தும் சாய்ராவின் படிப்பை அவர் ஊக்குவிக்கவில்லை. “பெண் என்பவளும் கால்நடை மாதிரி தான். எருமையைப் போன்று அவர்களின் மூளைகளும் மழுங்கிவிடுகின்றன“ என்று ஊசி வழியாக பார்த்துக் கொண்டே சொல்கிறார் சாய்ரா.

“ஹரியானாவில் ஆண்களுக்கு நிகராக எந்த பெண்ணும் கிடையாது“ என்று சொல்லும் சாய்ரா, “அவர் சொல்லும் எதையும் செய்ய வேண்டும். இதை சமைக்க வேண்டும் என்றால் சமைக்க வேண்டும். உடை, உணவு, வெளியே செல்வது என அனைத்துமே அவர் சொல்வது படி தான் நடக்க வேண்டும்“ என்கிறார். சாய்ரா இப்போது தன் கணவரை பற்றி சொல்கிறாரா அல்லது தந்தை குறித்து பேசுகிறாரா என்று தெளிவாக தெரியவில்லை.

Wheat fields surround the railway station of Harsana Kalan, a village of around 5,000 people in Haryana
Wheat fields surround the railway station of Harsana Kalan, a village of around 5,000 people in Haryana

ஹரியானாவின் சுமார் 5,000 பேர் வசிக்கும் ஹர்சனா கலன் கிராம ரயில் நிலையத்தை சூழ்ந்துள்ள கோதுமை வயல்கள்.

சாய்ராவின் பக்கத்து வீட்டுக்கார பெண்ணான 33 வயதாகும் சானா கானின் குடும்பம் வேறுபட்டது. (இக்கட்டுரையில் அவரது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இளநிலை பட்டம் பெற்ற அவர் ஆசிரியராகி தொடக்கப் பள்ளியில் பணியாற்ற விரும்புகிறார். வேலைக்கு செல்வது பற்றி எப்போது சானா பேச்செடுத்தாலும் “நீ வெளியே வேலைக்கு போ. நான் வீட்டில் இருந்து கொள்கிறேன். நீயே குடும்பத்தை தனியாக பார்த்துக் கொள்” என்று அவரது கணவர் ருஸ்தோம் அலி கிண்டலாக கூறிவிடுவதாக சானா சொல்கிறார். 36 வயதாகும் ருஸ்தோம் கணக்காளர் அலுவலகம் ஒன்றில் அலுவலக உதவியாளராக வேலை செய்கிறார்.

சனா உரையாடலைத் தொடர்கிறார். “இதுபற்றி எப்போது பேச்செடுத்தாலும் வாக்குவாதமாகி விடுகிறது. இந்த நாடு ஆண்களுக்கானது. ஆண்களை அனுசரித்து போவதைத் தவிர பெண்களுக்கு வேறு வழி கிடையாது. இல்லாவிடில் சச்சரவுகள் தான் ஏற்படும். இதில் என்ன பலன் இருக்கிறது? “ என்று சமையலறைக்கு வெளியே நின்று கொண்டு கேட்கிறார் சானா.

சாய்ரா மதிய வேளைகளில் துணிகளை தைப்பது போல, சானா தனது வீட்டில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். இதன் மூலம் அவர் மாதத்திற்கு ரூ. 5,000 வரை சம்பாதிக்கிறார். இது அவரது கணவரின் வருவாயில் பாதியாகும். இப்பணத்தை பெரும்பாலும் அவரது குழந்தைகளுக்குத் தான் சானா செலவிடுகிறார். ஹரியானாவில் உள்ள 54 சதவீத பெண்களைப் போன்று சானாவிற்கும் சொந்தமாக வங்கி கணக்கு கிடையாது.

சானா இரண்டு குழந்தைகளுக்குத் தான் ஆசைப்பட்டார். அவருக்கு IUD போன்ற கருத்தடைக் கருவிகள் குறித்தும் தெரிந்துள்ளது. ஆயினும் சானாவும், அவரது கணவர் ருஸ்தோம் அலியும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை பெற்றுள்ளனர்.

2010ஆம் ஆண்டு சானாவிற்கு முதல் குழந்தையாக ஆசியா பிறந்தாள். அப்போது சானா சோனிப்பட்டில் தனியார் மருத்துவமனையில் கருவுறுவதை தடுக்கும் கருவியான IUD பொருத்திக் கொண்டார். அவர் காப்பர் டியை விரும்பவில்லை. இதனைப் பெறுவதற்கு அக்கிராமத்தில் உள்ள பல பெண்களை போன்று சானாவும் பதிவு செய்து விட்டு காத்திருக்க வேண்டும்.

“காப்பர்-டி என்பது நீண்ட காலத்திற்கு பொருத்தி கொள்ளலாம். 10 ஆண்டுகளுக்கு அது கருவுறுவதை தடுக்கிறது. அதுவே பல அடுக்கு கொண்ட IUD மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு தான் வேலை செய்யும்"  என விளக்குகிறார் ஹர்சனா கலன் கிராமத்தில் உள்ள சுகாதார துணை மையத்தின் மருத்துவச்சியும், துணை செவிலியருமான நிஷா போகத். "இக்கிராமத்தில் உள்ள பல பெண்கள் பல அடுக்கு கொண்ட IUDஐ முதல் தேர்வாக கொண்டு பயன்படுத்தி வருகின்றனர்". "காப்பர்-டி தண்டு வடிவத்தில் உள்ளதால் சிலர் சந்தேகிக்கின்றனர்". யாராவது ஒருவர் காப்பர்-டி அசவுகரியமாக உள்ளதாக கூறினால் மற்றவர்களும் அதை வேண்டாம் என்கின்றனர்" என்கிறார் நிஷா.

அங்கீகரிக்கப்பட்ட (ஆஷா) சமூக சுகாதார செயற்பாட்டாளராக உள்ள சுனிதா தேவி 2006ஆம் ஆண்டு முதல் ஹர்சனா கலனில் பணியாற்றி வருகிறார். “காப்பர்-டி பொருத்திய பிறகு ஒரு வாரத்திற்கு ஓய்வெடுக்க வேண்டும். அதிக எடையை தூக்கக் கூடாது. காப்பர்-டி பொருந்துவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் இதையெல்லாம் இப்பெண்கள் கேட்பதில்லை. கேட்காமல் ‘இக்கருவி என் நெஞ்சு வரைக்கு வந்துவிட்டது‘ என புகார் கூறுகின்றனர்“ என்கிறார் சுனிதா தேவி.

Sana Khan washing dishes in her home; she wanted to be a teacher after her degree in Education. 'Women have no option but to make adjustments', she says
Sana Khan washing dishes in her home; she wanted to be a teacher after her degree in Education. 'Women have no option but to make adjustments', she says

சானா கான் தனது வீட்டில் பாத்திரங்களை துலக்குகிறார். பட்டம் பெற்ற பிறகு ஆசிரியராக அவர் விரும்பினார். 'அனுசரித்து செல்வதை தவிர பெண்களுக்கு வேறு வழி கிடையாது' என்கிறார் அவர்.

ஏற்கனவே பொருத்திய பல அடுக்கு IUDஐ அகற்ற சென்றபோது என்னிடம் தெரிவிக்காமல் காப்பர்-டியை பொருத்திவிட்டனர். "இதுபற்றி அந்த தனியார் மருத்துவமனை மருத்துவரும், என் கணவரும் பொய் சொல்லிவிட்டனர். எனக்கு பல அடுக்கு IUD பொருத்தவில்லை, காப்பர்-டி தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்தும் என் கணவர் என்னிடம் சொல்லவில்லை, எனக்கு இதுபற்றி தெரியவந்தபோது நான் சண்டையிட்டேன்" என்கிறார் அவர்.

இது உங்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதா, அப்படியில்லை என்றால் என்ன பிரச்னை என்று நாங்கள் அவரிடம் கேட்டோம். "அவர்கள் என்னிடம் பொய் சொல்லிவிட்டனர். அவர்கள் நினைத்தால் பொய் சொல்லிவிட்டு எதையும் என் மீது பொருத்திவிட முடியும்" என்று சொன்ன அவர், "காப்பர்-டியின் அளவை பார்த்து பெண்கள் அஞ்சுவார்கள் என்பதால்  என்னிடம் உண்மையை மறைக்குமாறு அவரிடம் (ருஸ்தோம் அலி) மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்" என்கிறார்.

IUD அகற்றப்பட்ட பிறகு, 2014ஆம் ஆண்டு இரண்டாவது மகள் அக்ஷி பிறந்தாள். இரண்டு குழந்தைகள் போதும் என சானா நினைத்தார். ஆனால் ஆண் பிள்ளையை 2017ஆம் ஆண்டு பெற்றெடுக்கும் வரை அவரது குடும்பத்தினரிடமிருந்து வற்புறுத்தல் இருந்துள்ளது. “ஆண் வாரிசை சொத்தாக பார்க்கின்றனர், அதுவே பெண் பிள்ளைகளை அப்படி பார்ப்பதில்லை“ என்கிறார் சானா.

நாட்டில் ஆண் குழந்தைகளை ஒப்பிடுகையில் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் மிக குறைவாக உள்ள மாநிலங்களில் ஒன்று ஹரியானா. (2011 கணக்கெடுப்பின்படி) இங்கு (0-6 வயது பிரிவில்) 1000 சிறுவர்களுக்கு 834 சிறுமிகளே உள்ளனர். சோனிப்பட் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை என்பது 1000 சிறுவர்களுக்கு 798 சிறுமிகள் என மிகக் குறைவாக உள்ளது. ஆண் வாரிசை விரும்புவதோடு பெண் பிள்ளைகளை அவமதிக்கவும் செய்கின்றனர். இங்கு குடும்ப கட்டுப்பாடு குறித்த முடிவுகளை குடும்பத்தின் ஆண்களும், குடும்பத்தினரும் தான் எடுப்பதாக பரவலான கருத்து உள்ளது. NFHS-4 தரவுப்படி ஹரியானாவில் வெறும் 70 சதவீத பெண்கள் தான் தங்களின் உடல்நலம் சார்ந்த முடிவுகளை எடுக்கின்றனர். அதுவே இங்கு ஆண்கள் 93 சதவீதம் உடல்நலம் குறித்த தங்களின் முடிவுகளை எடுக்கின்றனர்.

சாய்ரா, சானா வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காந்தா ஷர்மா குடும்பத்தில் (இக்கட்டுரையில் அவரது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) 44 வயதாகும் கணவர் சுரேஷ் ஷர்மா மற்றும் நான்கு குழந்தைகள். திருமணமான முதல் இரண்டு ஆண்டுகளில் அஷூவும், குஞ்சனும் பிறந்தனர். கருத்தடை அறுவை சிகிச்சைக்கு கணவனும், மனைவியும் முடிவு செய்த போது, சுரேஷின் தாயார் ஒப்புக் கொள்ளவில்லை.

“என் மாமியார் பேரனுக்கு ஆசைப்பட்டார். இதற்காக நான் நான்கு குழந்தைகளை பெற்றேன். பெரியவர்கள் கேட்டால் செய்ய வேண்டியது தான். என் கணவர் குடும்பத்தில் மூத்த மகன். குடும்பத்தின் முடிவுகளை நம்மால் அவமதிக்க முடியாது“  படிப்பில் சிறந்து விளங்கியதற்காக தனது மகள்கள் பெற்ற பதக்கங்களை பார்த்து கொண்டே சொல்கிறார் 39 வயதாகும் காந்தா.

Kanta's work-worn hand from toiling in the fields and tending to the family's buffaloes. When her third child was also a girl, she started taking contraceptive pills
Kanta's work-worn hand from toiling in the fields and tending to the family's buffaloes. When her third child was also a girl, she started taking contraceptive pills

வயல்களில் கடுமையாக உழைப்பது, குடும்பத்தின் எருமை மாடுகளை மேய்ப்பது போன்றவை காந்தாவின் வேலைகள். மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தபோது அவர் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தார்.

கிராமத்திற்கு புதிதாக திருமணமாகி எந்த மணப்பெண் வந்தாலும் சுனிதா தேவி போன்ற ஆஷா பணியாளர்கள் பதிவேட்டில் சேர்க்கின்றனர். “பெரும்பாலான இளம் மணமகள்கள் திருமணமான முதல் ஆண்டிலேயே கருவுற்று விடுகின்றனர். குழந்தைப் பெற்ற பிறகு நாங்கள் அவர்களது வீட்டிற்கு சென்று குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை குறித்து அவர்களின் மாமியார் உள்ளிட்டோரின் முன்னிலையில் பேசுவோம். பிறகு அவர்கள் முடிவு செய்துவிட்டு எங்களிடம் முடிவுகளை தெரியப்படுத்துவார்கள்” என்கிறார் சுனிதா.

“இல்லாவிட்டால் என் மருமகளுடன் தனியாக என்ன பேச்சு என மாமியார்கள் கோபமடைந்து விடுவார்கள்” என்கிறார் சுனிதா.

மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்தவுடன் காந்தாவிற்கு அவரது கணவர் கருத்தடை மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். அதுவும் தனது தாயாருக்கு தெரியாமல் செய்துள்ளார். மாத்திரைகளை நிறுத்திய சில மாதங்களில் காந்தா மீண்டும் கருவுற்று ஆண் குழந்தையை பெற்றுள்ளார். இதில் நகை முரண் என்னவென்றால் காந்தாவின் மாமியார் 2006ஆம் ஆண்டே இறந்துவிட்டார். இதனால் அடுத்த ஆண்டில் பிறந்த அவரது பேரன் ராகுலை பார்க்கவே இல்லை.

அப்போது முதல் காந்தா தான் குடும்பத்தின் மூத்த பெண்மணி. அவர் IUD பயன்படுத்துவதை விரும்புகிறார். அவரது மகள்கள் படிக்கின்றனர். முதலாவது மகள் இளநிலை செவிலியர் பட்டம் படித்து வருகிறார். அவளின் திருமணம் குறித்து காந்தா இன்னும் சிந்திக்கவில்லை.

“அவர்கள் நன்றாக படித்து வெற்றி பெறட்டும். நம் மகள்களுக்கு நாம் உதவாவிட்டால், அவர்களின் கணவர் மற்றும் குடும்பத்தினர் படிக்க உதவுவார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது? எங்கள் காலம் வேறு. அது முடிந்துவிட்டது” என்கிறார் காந்தா.

“என் எதிர்கால மருமகள் கருத்தடையை விரும்பினால் பயன்படுத்தி கொள்ளட்டும். அது அவளின் விருப்பம். எங்கள் காலம் வேறு, அது முடிந்துவிட்டது“ என்கிறார் காந்தா.

முகப்பு ஓவியம்: ப்ரியங்கா போரர் தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய பொருட்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான பேப்பர் பேனாவிலும் அவரால் செயல்பட முடியும்.

இந்தியாவின் கிராமப்புற பருவப் பெண்கள், இளம் பெண்கள் குறித்த செய்தியை சேகரிக்கும் திட்டத்தை பாரி மற்றும் கவுன்டர் மீடியா டிரஸ்ட் தேசிய அளவில் செய்து வருகிறது. பின்தங்கிய பிரிவினர், எளிய மக்களின் சூழல், வாழ்க்கை அனுபவத்தை அவர்களின் குரல் வழியாக வெளிக் கொணர்கிறது.

இக்கட்டுரையை மீண்டும் பிரசுரிக்க வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் நகலை (கார்பன் காப்பி) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதி அனுப்புங்கள்.

தமிழில்: சவிதா

Anubha Bhonsle

मुक्‍त पत्रकार असणार्‍या अनुभा भोसले या २०१५ च्‍या ‘पारी फेलो’ आणि ‘आयसीएफजे नाइट फेलो’ आहेत. अस्‍वस्‍थ करणारा मणिपूरचा इतिहास आणि ‘सशस्‍त्र दल विशेष अधिकार कायद्या(अफ्‍स्‍पा)’चा तिथे झालेला परिणाम या विषयावर त्‍यांनी ‘मदर, व्‍हेअर इज माय कंट्री?’ हे पुस्‍तक लिहिलं आहे.

यांचे इतर लिखाण Anubha Bhonsle
Sanskriti Talwar

संस्कृती तलवार नवी दिल्ली स्थित मुक्त पत्रकार आहे. ती लिंगभावाच्या मुद्द्यांवर वार्तांकन करते.

यांचे इतर लिखाण Sanskriti Talwar
Illustration : Priyanka Borar

Priyanka Borar is a new media artist experimenting with technology to discover new forms of meaning and expression. She likes to design experiences for learning and play. As much as she enjoys juggling with interactive media she feels at home with the traditional pen and paper.

यांचे इतर लिखाण Priyanka Borar
Series Editor : Sharmila Joshi

शर्मिला जोशी पारीच्या प्रमुख संपादक आहेत, लेखिका आहेत आणि त्या अधून मधून शिक्षिकेची भूमिकाही निभावतात.

यांचे इतर लिखाण शर्मिला जोशी
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

यांचे इतर लिखाण Savitha