நன்றாக வாரி பின்னப்பட்டிருந்த அவரின் சடையில் கூட அவரின் கடுமையான உழைப்பு தெரிகிறது. அவரது முகத்தில் எண்ணிலடங்கா சுருக்கங்கள் உள்ளன. அவர் ஹவாய் செருப்பும், காதி புடவையும் அணிந்துள்ளார். அந்த புடவை அவரின் கால்களுக்கு மேலே படர்ந்திருக்கிறது. அது, அவர் அந்த நாளின் பணிக்காக தயாராக உள்ளார் என்பதை தெரிவிக்கிறது. பின்னத் பகுதியில் இருந்து குமாயான் மண்டலத்தில் உள்ள கோசி நதிக்கு நீர் வழங்கும் ருத்ரதாரி அருவி வரை உள்ள பகுதிகள் முழுவதும் நம்மை அழைத்துச் செல்லும் திட்டம் இருந்தது.
உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மற்றும் பாகேஸ்வர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள 2,400 பேர் வரை வசிக்கும் கவுசானி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்ச்-ஏப்ரல் விழாவில் நாம் பங்குகொள்கிறோம். பாசந்தி சமந்த் (60), பாசந்தி அக்கா என்றுதான் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். ஒரு நிகழ்ச்சிக்கு அவர்தான் பேச்சாளர். எங்கள் கூட்டத்திற்கு தலைமை ஏற்க அவரை தோராயமாக தேர்ந்தெடுக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர் ஒரு இயக்கத்திற்கு தலைமை ஏற்கிறார். கவுசாணியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 15 முதல் 20 பெண்கள் அடங்கிய 200 குழுக்களை அமைக்கிறார். கோசி நதியை பாதுகாப்பதற்காக இந்த இயக்கம். 2002ம் ஆண்டில் நதியின் கோடைக்கால நீரளவு விநாடிக்கு 80 லிட்டராக குறைந்து விட்டது. 1992ம் ஆண்டில் இது 800 லிட்டராக இருந்தது. மெல்ல மெல்லக் குறைந்து இந்த அளவை எட்டியிருந்தது. அப்போது முதல், சமந்த் மற்றும் கவுசானியின் பெண்களும் நதியின் பாதுகாப்புக்காக கடுமையாக உழைத்தார்கள்.
2002ம் ஆண்டு சமந்த், மரங்கள் வெட்டுவதை நிறுத்திவிட்டு, அகல இலைகள் கொண்ட நாட்டு ஓக் மரங்கள் நடுவதை பெண்கள் மத்தியில் வலியுறுத்தினார். பெண்கள் தண்ணீரை கவனமுடன் பயன்படுத்துவது மற்றும் காட்டுத்தீயை தடுப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சமந்த் முதலில் அவர்களிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டினார். பல ஆண்டுகள் அந்தப் பெண்கள் ஒன்றாக இருந்து, ஒருவொருக்கொருவர் பலமாக இருந்து, வீடுகளில் உள்ளச் சண்டைகளைக் கூட எதிர்த்துப் போராடினர்.
ஆனால், முதலில் சமந்துக்கு தனது வாழ்க்கையே போராட்டமாக இருந்தது.
“என் வாழ்க்கை மலையைப் போன்று கடினமானதாகவும், மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவும் இருந்தது“ என்று அவர் கூறுகிறார். 12 வயதில் அவர் 5ம் வகுப்பு நிறைவு செய்திருந்தபோது, அவருக்கு திருமணம் முடிந்தது. அவர் தனது கணவரின் கிராமமான பைத்தோராகார் மாவட்டத்தின் தார்கோட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது அவருக்கு 15 வயதாகியிருந்தது. பள்ளி ஆசிரியரான அவரது கணவர் இறந்துவிட்டார். “நான் அவரை தின்றுவிட்டதாக என் மாமியார் என்னைச் சாடினார்“ என்று அவர் கூறுகிறார்.
விரைவில் அவர் தனது சில உடைகளை மடித்து எடுத்துக்கொண்டு, பைத்தோராகாரில் உள்ள தனது கிராமமான டைகராவிற்கு வருகிறார். அவரின் தாய் மற்றும் அத்தைகளுக்கு புல்வெட்டி, மாட்டுச்சாணம் சேகரித்து உதவி செய்கிறார். பிகார் காவல்துறையில் பணிபுரிந்த சமந்தின் தந்தை அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சித்தார். “அவர் என்னை துவக்கப்பள்ளி ஆசிரியராக்க விரும்பினார்“ என்று அவர் கூறுகிறார். ஆனால், அதற்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. “நான் ஏதாவது புத்தகம் வாசித்தால், எனது தாய் என்னை திட்டுவார். ’நீ என்ன, ஏதாவது அலுவலகம் சென்று வேலை செய்ய போகிறாயா?’ என்பார். எனக்கு அப்போது அவரை எதிர்க்கும் தைரியம் இல்லை.“
சில ஆண்டுகளுக்குப்பின்னர், லட்சுமி ஆசிரமம் குறித்து பாசந்தி கேள்விப்படுகிறார். அது கவுசானியில் உள்ள பெண்களுக்கு பயிற்சிகள் வழங்கும் மையம். அம்மையம் 1946ம் ஆண்டு கேத்தரீன் ஹெயில்மேன் என்ற மகாத்மா காந்தியின் சீடரால் துவக்கப்பட்டது. பாசந்தி அந்த ஆசிரமத்தில் சேர விண்ணப்பித்து கடிதம் அனுப்பியிருந்தார். “அதன் தலைவர் ராதா பட் என்பவர் என்னை வரச்சொன்னார்“ என்று அவர் கூறுகிறார். 1980ல் அவரது தந்தை அவரை அங்கு ஓராண்டு தையல் பயிற்சிக்காக விட்டிருந்தார்.
அவர் அங்கு தங்கியிருந்தபோது லட்சுமி ஆசிரமத்தின் பால்வாடியில் குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்து தனது தந்தையின் கனவை நிறைவேற்றினார். அவர் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கான விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து அனுப்பியிருந்தார். “நான் பத்தாம் வகுப்பு தொலைதூர கல்வியில் எனது 31வது வயதில் முடித்தேன். அதை எனது சகோதரர் எனது கிராமம் முழுவதுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்“ என்று அவர் கூறுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம், நேற்று நடந்தது போல் உள்ளது.
இதற்கிடையில், பாசந்தி ஆசிரமத்தில் முழு நேரப் பணியாளராக பணிசெய்ய துவங்கியிருந்தார். அங்குதான் அவர் தற்போதும் வசித்து வருகிறார். அவரது பணி, பால்வாடிகள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் துவங்குவதற்கு உதவுவதையும் உள்ளடக்கியது. அவற்றின் மூலம் உத்ரகாண்ட் முழுவதும் தையல், கைவினைப்பொருட்கள் மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய அனைத்துத் தொழில்களும் கற்றுக் கொடுத்தார். ஆனால், அவர் கவுசானிக்கு திரும்பிச் செல்வதற்கு விரும்பினார். “நான் பெண்களுடன் கிராமத்தில் இருக்க வேண்டியச் சூழலில், அவ்வளவு பெரிய நகரத்தில் (அவர் அப்போது டேராடூனில் வசித்தார்) நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று வியந்தேன், “ என்று அவர் கூறுகிறார்.
2002ம் ஆண்டு கவுசானி திரும்பினார். அங்கு சூழ்நிலை படுமோசமாக இருந்தது. மரம் வெட்டுவதால் ஏற்படும் அழிவுகளை உணராமல், கிராம மக்கள் மரங்களை வெட்டினார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் அடுப்பெரிக்கவும், வேளாண்மைத்தொழிலுக்கும் தாங்கள் வெட்டும் மரங்கள், பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்றே கருதினர். மற்றொருபுறம் கோசி நதி வறண்டது. 2003ல் சமந்த், அமர் உஜாலாவின் கட்டுரையை படித்தார். அதில் காடுகள் அழிப்பதையும், காட்டுத்தீயையும் கட்டுப்படுத்தாவிட்டால், கோசி நதி 10 ஆண்டுகளில் வறண்டுவிடும் என்று அவர் எழுதியிருந்தார். இப்பிரச்னைகளை அவர் கையில் எடுத்து, இயங்குவதற்கு உந்துசக்தியாக அக்கட்டுரை இருந்தது.
ஆனால், அவர் எதிர்பார்த்ததைவிட கடுமையான பிரச்னைகள் ஏற்பட்டன.
கிராமத்துப்பெண்கள் சூரியன் உதிப்பதற்கு முன்னரே விறகுகள் சேகரிக்க சென்றுவிடுவார்கள். அவர்கள் வயல் வேலைக்கு செல்வதற்கு முன்னர் சிறிதளவு ரொட்டி, உப்பு மற்றும் அரிசியை மதிய உணவாக எடுத்துக்கொள்வார்கள். சமந்த் இதை அடிக்கடி கூறுவார், “ஏற்கனவே அவர்கள் சேகரித்து வந்த விறகுகள் அப்படியே கிடக்கும். அதைக் கரையான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்“ ஆனால், இந்தப் பெண்கள் மேலும் விறகுகள் சேகரிப்பார்கள். அவர்கள் வீட்டில் அமர்ந்திருந்தால்,“மாமியார் மற்றும் கணவரிடம் கடுமையாக திட்டு வாங்குவார்கள்.“ போதியளவு உணவு உண்ணாதது, கடினமான வேலைப்பளு ஆகியவை, அவர்கள் கஷ்டப்பட்டு ஈட்டும் பணத்தை மருத்துவத்திற்கு செலவிட வைக்கும். குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதற்கு சிறிதளவோ அல்லது சுத்தமாகவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.
சமந்த்துக்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களை அமைப்பதன் நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பெண்கள் அவரிடம் பேசமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் குடும்பத்தின் ஆண்கள் அவர்களை செயற்பாட்டாளர்களாக விட மாட்டார்கள்.
ஒருநாள் சம்ந்த், கவுசானியின் பேருந்து நிலையம் அருகே ஒரு பெண்கள் குழுவை சந்தித்தார். அவர் தயக்கத்துடனே அவர்களை நெருங்கினார். கோசியின் தண்ணீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பெண்கள் அதை விவசாயத்திற்கும் வேண்டும் என்றனர். அரசு, இதுவரை கிராமத்தில், வாய்க்கால்கள் அல்லது தடுப்பணைகள் எதையும் கட்டவில்லை. கோசி தொடர்ந்து செழிக்க இந்த ஒரே வழியை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சமந்த் அவர்களிடம் ஒரு செய்தித்தாளை காட்டி, அகண்ட இலைகளை கொண்ட ஓக் மரங்கள் நடுவதன் அவசியத்தையும் ஆங்கில அரசு, விரும்பத்தகாத வகையில் பைன் மரங்களை வைத்தது குறித்தும் விளக்கிக்கூறினார். 1970ல் உத்ரகாண்டின் வனப்பாதுகாப்புக்காக கார்வால் மண்டலத்தில் நடந்த சிப்கோ இயக்கத்தை எடுத்துக்காட்டாக கூறினார். அவர்களிடம் அன்பாக பேசியதுடன் அவர்கள் எவ்வாறு 10 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் வயல்களுக்கு தண்ணீரின்றி அவதியுறுவார்கள் என்பதையும் எடுத்துக்கூறி அவர்களிடம் கோசியை காக்க வேண்டுமென கெஞ்சி கேட்டுக்கொண்டார். வறண்ட கோசியின் நிலை எப்படி இருக்குமென்றும் அவர்கள் கண்முன் காட்சியாக விளங்கும்படி எடுத்துரைத்தார்.
இந்த உரையாடல் அவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 2003ம் ஆண்டில் ஒரு பெண்கள் குழுவை அமைத்து, அதற்கு ஒரு தலைவரையும் நியமித்து கண்காணித்தனர். பின்னர் மரங்களை வெட்டுவது படிப்படியாக நின்றுவிட்டது. பின்னர் கவுசானியின் ஆண்களும் அந்த இயக்கத்தை ஆதரிக்க துவங்கினார்கள். இப்போதும் பெண்கள் விறகுகள் சேகரிப்பதற்கு காலையில் வீடுகளில் இருந்து கிளம்பிச் செல்கிறார்கள். ஆனால் இப்போது காய்ந்த விறகுகளை மட்டும் சேகரிக்கிறார்கள். கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே தற்போது ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வனத்துறை அவர்களுக்குத்தான் வனத்தில் முதல் உரிமை உள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும். இருதரப்பும் மரங்களை வெட்டக்கூடாது. இது முன்னுதாரணமாக அமைந்தது. அருகில் உள்ள பல கிராமங்களில் இதுபோன்ற பெண்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இவ்வளவு வெற்றியடைந்த பின்னரும், சவால்கள் மீண்டும், மீண்டும் வந்தது. எடுத்துக்காட்டாக ஒருமுறை, அரசின் உத்தரவுகள் இருந்தும், 2005ம் ஆண்டு உள்ளூர் உணவுவிடுதியின் சொந்தக்காரர் கோசியின் தண்ணீரை உறிஞ்சி எடுத்தார். அங்கிருந்த பெண்கள், பாசந்தி அக்காவை தொலைபேசியில் அழைத்து விவரம் கூறினர். டேங்கர் லாரியை கடந்து செல்ல அனுமதிக்க கூடாது என்று அவரும் வலியுறுத்தினார். அப்போது முதல் அந்த இயக்கம் வலிமையானதுடன், அனைவருக்கும் தெரியவந்தது. பெண்கள் போராட்டத்தில் அமர்ந்தனர். அந்த உணவு விடுதியின் சொந்தக்காரர் இறங்கி வந்து, ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்குவதாக ஒப்புக்கொண்டார். அந்த பணமும் சுய உதவிக்குழுக்களின் நிதிக்கு சென்றது.
கிராம மக்களும், சுற்றுலாதுறையினரும் மட்டும் தவறு செய்யவில்லை. வனத்துறை அதிகாரிகளும், திருட்டுத்தனமாக மரத்தொழிலை செய்து வந்தனர். அவர்களிடம் வேலை செய்பவர்கள் அடிக்கடி வந்து மரங்களை வெட்டுவார்கள். ஒருநாள் சமந்தும், பெண்களும் அவர்கள் முன் சென்று, “ஒரு செடியை கூட நீங்கள் இங்கு நட்டு வளர்க்கவில்லை. இங்கு வந்து எங்கள் மரங்களை திருடுகிறீர்கள்“ என்று கூறினர். அங்கிருந்த எண்ணிலடங்கா பெண்கள் ஒற்றுமையாக இருந்தனர். அவர்கள் மாதக்கணக்கில் வனத்துறை அதிகாரிகள் மரங்கள் வெட்டுவதை தடுப்பதில் உறுதியாக இருந்தனர். அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கடிதத்தை கோரினர். ஆனால், வனத்துறை அதிகாரி அதைத் தர மறுத்தார். அவருக்கு எதிராக புகார் அளிக்கவுள்ளதாக அச்சுறுத்தினர். பின்னர், வேலையிழக்கும் அபாயம் இருந்ததால், அவர் மரங்கள் வெட்டுவதை நிறுத்தினார்.
அப்போது முதல், உள்ளூர் குழுக்கள் காடுகளை கண்காணிப்பவர்களாக மட்டுமில்லை, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களாகவும் மாறினர். போதைப்பழக்கம் மற்றும் குடும்பப் பிரச்னைகளில் தலையிட்டனர். பெண்களுக்கு சூழ்நிலைகளை கையாள்வது எப்படி என்பது குறித்து அறிவுரை வழங்கினர். பிரச்னைகள் தொடரும்போது, “எனக்கு கலந்துரையாடுவதற்கும், தீர்வுகளை பெறுவதற்குமான இடமாக இது உள்ளது“ என்று கவுசானியின் ஒரு சுய உதவிக்குழு உறுப்பினரான 30 வயது மம்தா தப்பா கூறுகிறார்.
2016ம் ஆண்டு சமந்த், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தின் நரி சர்க்கார் புரஷ்கார் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டு, முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டார். அவர் கோசி நதி பாதுகாப்பிற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது கழிவு மேலாண்மை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கவுசானியிலும், அதனைச்சுற்றியும் உள்ள உணவகங்களில், திடக்கழிவை மறுசுழற்சி செய்வது குறித்து பேசி வருகிறார். அவரின் பெரிய பங்களிப்பாக அவர் கூறுவது, “கிராம சபைகளிலோ அல்லது உள்ளூர் கமிட்டிகளிலோ அல்லது தங்கள் வீடுகளிலும் ஏற்படும் பிரச்னைகளிலோ பெண்கள் அமைதியாக இருக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்த வேண்டும்.“
இந்த பேட்டியை ஏற்பாடு செய்துகொடுத்த பராஷ் மகோத்சவ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் திரீஷ் கபூர் மற்றும் பிரசன்னா கபூர் ஆகியோருக்கு இந்தக் கட்டுரையை எழுதியவர் நன்றி கூறுகிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.