"130,721 மரங்களை வெட்டுவதன் தாக்கம் பெரியதாக இருக்காது".
சம்பல்பூர் பிரிவின் பிராந்திய தலைமை வனத்துறையின் மூத்த அதிகாரி, 2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் எழுதியது இதுதான். ஒடிசாவின் சம்பல்பூர் மற்றும் ஜார்சுகுட மாவட்டங்களின் எல்லையில் உள்ள தாளபிரா மற்றும் பத்ரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 2,500 ஏக்கர் வனப்பகுதியை நிலக்கரிச் சுரங்கத்திற்கு ஒப்படைக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
இந்த இரு கிராமங்களில் வசிப்பவர்கள் ஆங்கிலத்தில் இருக்கும் இந்த ஆவணங்களை பார்த்தது கிடையாது. வனத்துறை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது இந்த ஆவணங்கள்தான் தாளபிரா II மற்றும் III திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்திற்கான வனத்துறையின் அனுமதி வழங்குவதில் முடிந்தது. ஆனால் இங்குள்ள மக்களால் அதிகாரிகளின் கருத்திற்கு பெரியதாக உடன்பட முடியவில்லை - அவர் நியமிக்கப்பட்ட 'வனப்பாதுகாவலர்' என்பது பெரும் முரண்.
கடந்த இரண்டு வாரங்களாக சுரங்கத்திற்கு பாதை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் (சரியாக எத்தனை மரங்கள் என்பது தெளிவாக தெரியவில்லை) வெட்டப்பட்டுள்ளன. எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி) இந்த கிராமத்தில் 2150 பேர் வசிக்கின்றனர், அவர்களில் பலர், பல தசாப்தங்களாக தாங்கள் பாதுகாத்து வந்த காட்டினை காவல்துறை மற்றும் அரசின் ஆயுதமேந்திய பணியாளர்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவே அழிப்பதைக் கண்டு கோபமுற்றும் மனமுடைந்து போயும் இருக்கின்றனர்.
இந்த இடத்தில் உடனடியான தாக்கத்தை ஏற்படுத்துவது மரம் வெட்டுவதே. இந்த அழிவு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி விடியற்காலையில் துவங்கியது என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். தாளபிராவின் முண்டா ஆதிவாசி கிராமமான முண்டாபதாவில் உள்ள மானஸ் சலீமா என்கிற இளைஞர்: "அவர்கள் திடீரென்று வந்து மரங்களை வெட்டத் துவங்கிய போது நாங்கள் எழுந்திருக்கக் கூட இல்லை. இவ்விசயம் தீயாக பரவியது, கிராமவாசிகள் அதை தடுக்க விரைவாக விரைந்தனர். ஆனால் எல்லா இடத்திலும் கடுமையான போலீஸ் படை நிறுத்தப்பட்டிருந்தது", என்று கூறுகிறார்.
"நாங்கள் கிட்டத்தட்ட 150 - 200 பேர் கூடி எங்களது மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் படி மாவட்ட ஆட்சியரை சென்று சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு செய்தோம்", என்று முண்டாபதாவில் வசிக்கும் மற்றொரு நபரான பக்கீரா பூதியா கூறுகிறார். "ஆனால் அந்த நிறுவனத்திற்கு எதிராக யார் சென்றாலும் அல்லது அவர்களின் வேலையை நிறுத்த முயன்றாலும் அந்த நபர் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது", என்று கூறுகிறார்.
தாளபிரா மற்றும் பத்ரபள்ளி ஆகியவை அடர்த்தியான கலப்பு இலையுதிர் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பரந்து விரிந்த கிராமங்கள் - வெக்கையான டிசம்பரின் மதிய வேளை ஒன்றில் அவர்களை நான் சந்திக்கச் சென்ற போது இந்த பசுமையான நிழல்கள் தான் உடனடி நிவாரணம் தந்தது. பல நிலக்கரி சுரங்கங்கள், இரும்பு ஆலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளைக் கொண்ட ஜார்சுகுட பகுதி, ஒவ்வொரு ஆண்டும் ஒடிசாவின் மிக உயர்ந்த வெப்பநிலையைப் பதிவு செய்து வருகிறது.
இங்குள்ள கிராமங்களில் முக்கிய சமூகங்களாக முண்டா மற்றும் கோண்டு ஆதிவாசி சமூகங்கள் இருக்கின்றன, இந்த மக்கள் முக்கியமாக நெல் மற்றும் காய்கறிகளை பயிரிடுதல் மற்றும் வன விளைபொருட்கள் ஆகியவற்றைச் சார்ந்து இருக்கின்றனர். இவர்களது நிலத்திற்கு அடியில் தான் அந்த வளமான நிலக்கரி வளம் இருக்கிறது.
"காடு எங்களுக்கு மஹுவா, சால், விறகுகள், காளான்கள், வேர்கள், கிழங்குகள், இலைகள் மற்றும் விளக்குமாறு தயாரித்து விற்க புற்கள் ஆகியவற்றை தருகின்றது", என்று கூறுகிறார் பிமலா முண்டா. "ஒரு லட்சம் மரங்களை வெட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வனத்துறை எப்படி சொல்ல முடியும்?" என்று கேட்கிறார்.
தாளபிரா II மற்றும் III நிலக்கரி சுரங்கம் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது, இது 2018 ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைசஸ் லிமிட்டட் நிறுவனத்திடம் சுரங்கத்தை உருவாக்கி இயக்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவுக்கு அளித்த அறிக்கையில் அதானி நிறுவனம், சுரங்கம் 12,000 கோடி வருமானம் ஈட்டும் என்று (அந்த நேரத்தில் ஊடகங்களில்) தெரிவித்திருருந்தது.
இந்த நிலக்கரியை பெறுவதற்கே தாளபிரா கிராமத்தின் காடுகளில் இருந்த வானுயர்ந்த சால் மற்றும் மஹுவா மரங்கள் கோடரியால் வெட்டப்பட்டு தரையில் கிடக்கின்றன. சிறிது தொலைவில் உள்ள ஒரு பொட்டலில் புதியதாக அறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் உள்ள ஒரு அதானி நிறுவனத்தின் ஊழியர், "இதுவரை 7000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன", என்று கூறினார். பின்னர் பிற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார் மேலும் அந்நிறுவனத்தின் தகவல் தொடர்பு அலுவலரின் பெயர் மற்றும் எண்ணை கேட்டதற்கும், "அது சரியாக இருக்காது", என்று பதில் கூறினார்.
கிராமங்களுக்குச் செல்லும் சாலையில், ஒடிசா மாநில ஆயுதப்படை வீரர்களின் ஒரு குழுவை கண்டோம். அவர்கள் ஏன் அங்கு இருக்கிறார்கள் என்று கேட்டோம். அவர்களில் ஒருவர், "மரங்கள் வெட்டப்படுவதால் இருக்கிறோம்", என்று கூறினார். காட்டில் எந்த பகுதியில் எல்லாம் மரம் வெட்டப்படுகிறதோ அங்கெல்லாம் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று அவர் கூறினார். நாங்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போதே அவரது சக ஊழியர் ஒருவர் தனது அலைபேசியில் ஒருவரை தொடர்பு கொண்டு நாங்கள் அக்கிராமத்தில் இருப்பதை தெரிவித்தார்.
ஒடிசாவின் வன மற்றும் சுற்றுச்சூழல் துறையால் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அனுமதி ஆவணங்களின்படி, சுரங்கத்துக்காக (II மற்றும் III) மொத்தம் 4,700 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கும் மேலும் 443 பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் 575 பட்டியல் பழங்குடியினர் குடும்பங்கள் உட்பட மொத்தம் 1894 குடும்பங்களை இடம் பெயர்க்கப்பட வேண்டியிருக்கும், என்று தெரிவிக்கிறது.
"ஏற்கனவே 14,000 - 15,000 மரங்கள் வெட்டப்பட்டு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அது இன்னமும் தொடரத்தான் செய்கிறது", என்கிறார் பக்கத்ராம் போயி. இவர் தான் தாளபிராவில் உள்ள வன உரிமைகள் குழுவின் தலைவராக உள்ளார். (இது 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டத்தின் கீழ், திட்டமிடுதல் மற்றும் வன உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளான வனத்தை பாதுகாப்பது மற்றும் வன உரிமை கோருவது உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக கிராம அளவில் உருவாக்கப்பட்ட குழுக்களாகும்.) "என்னால் கூட அவர்கள் எத்தனை மரத்தை வெட்டினார்கள் என்பதைக் கூற முடியாது", என்று அவர் கூறுகிறார். "அரசாங்கமும் அந்த நிறுவனமும் தான் இவற்றையெல்லாம் செய்து, கிராமவாசிகளாகிய எங்களை இருளில் மூழ்கடிக்கின்றனர், ஏனெனில் நாங்கள் இதனை முதல் நாள் முதல் எதிர்த்து வருகிறோம்", என்று கூறுகிறார். அதாவது 2012 ஆம் ஆண்டு முதல் முறையாக கிராமவாசிகள் தங்கள் வன உரிமைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதிய போதிலிருந்து.
முண்டாபதாவில் வசிக்கும் ரீனா முண்டா, "எங்களது முன்னோர்கள் முதலில் இந்த காடுகளில் வாழ்ந்து அவற்றை பாதுகாத்தனர். அதையே நாங்களும் செய்வதற்கு கற்றுக் கொண்டோம்", என்று கூறுகிறார். தெங்கப்பள்ளிக்கு (ஒடிசாவில் இருக்கும் பாரம்பரிய வன பாதுகாப்பு அமைப்பு, சமூகத்தின் உறுப்பினர்கள் மரங்களை வெட்டுதல் மற்றும் கடத்தலை தடுக்க காடுகளில் ரோந்து செல்கின்றனர்) ஒவ்வொரு குடும்பத்தினரும் மூன்று கிலோ அரிசி அல்லது பணத்தை பங்களிப்பாக அளிப்போம்", என்று கூறுகிறார்.
"நாங்கள் பாதுகாத்து வளர்த்த காடுகளுக்குச் செல்ல இப்போது எங்களுக்கே அனுமதி அளிக்கப்படவில்லை", என்று வேதனையின் வெளிப்பட சுதிர் முண்டா கூறுகிறார். கிராம மக்கள் இந்த அழிவினை தடுப்பது எப்படி என்பதைப் பற்றி விவாதிக்க உள்ளூர் பள்ளிக்கூடத்தைச் சுற்றி கூடி இருக்கின்றனர். "அவர்கள் எங்களது மரங்களை வெட்டுவதை பார்க்கும் போது எங்களுக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. எங்களது அன்புக்குரியவர்கள் இறந்து போவதைப் போல உணர்கிறேன்", என்று கூறுகிறார்.
கிராம மக்கள் தாங்கள் பல தசாப்தங்களாக காடுகளை பாதுகாத்து வருகின்றனர் என்பதை வலியுறுத்துகின்றனர். "அப்போது அரசாங்கம் எங்கே சென்று இருந்தது?" என்று கேட்கிறார் மூத்தவரான சுரூ முண்டா. "இப்போது அந்த நிறுவனம் காட்டை கேட்பதால், அரசாங்கம் காடு தங்களுடையது என்று கூறுகிறது, மேலும் காட்டை விட்டு நாங்கள் செல்ல வேண்டுமாம்", என்று கூறுகிறார். மற்றொரு மூத்தவரான, அச்யுத் பூதியா, "மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்த போது எனது கண்களில் கண்ணீர் வந்தது. எங்களது பிள்ளைகளை போல நாங்கள் அதைப் பாதுகாத்து வந்தோம்", என்று கூறினார். இவர் தான் ரோந்து பணியில் பல ஆண்டு காலம் பணியாற்றியவர் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
தாளபிரா கிராமத்தின் வன உரிமைகள் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஹேமந்த் ராவுத், "இந்த மரம் வெட்டுதல் துவங்கியதிலிருந்து எங்களில் பலருக்கு இரவில் தூக்கம் வரவில்லை", என்று கூறுகிறார்.
பருவநிலை மாற்றம் மற்றும் நீர் தொடர்பான பிரச்சினைகளுக்காக பணியாற்றும் சம்பல்பூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரஞ்சன் பாண்டா கூறுகையில், கிராமவாசிகள் காடுகளை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என்கிறார், ஏனெனில் ஜார்சுகுட மற்றும் இபி பள்ளத்தாக்கு பகுதி ஆகியவை நாட்டின் முக்கியமான மாசுபடுத்தும் இடங்களாக இருக்கின்றன என்று கூறுகிறார். "சுரங்கம்,மின்சாரம் மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளின் அதிகப்படியான செறிவு காரணமாக ஏற்கனவே கடுமையாக நீர் பற்றாக்குறை, வெப்பம் மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை", என்று அவர் கூறுகிறார். "இந்த இடத்தில் இருந்த 1,30,721 முழுமையாக வளர்ந்த இயற்கை மரங்களை வெட்டுவது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல அழுத்தங்களை தூண்டிவிட்டு, இந்த இடத்தை வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும்", என்று கூறுகிறார்.
பல கிராமவாசிகளும் இதே கருத்தைத் தான் வெளிப்படுத்துகின்றனர். இப்பகுதியில் அதிகரித்து வரும் வெப்பநிலையைப் பற்றியும் குறிப்பிடுகின்றனர். "காடுகள் அழிக்கப்பட்டால், இங்கு வாழவே முடியாது", என்று வினோத் முண்டா கூறுகிறார். "ஒரு கிராமவாசி மரத்தை வெட்டினால், நாங்கள் சிறையில் அடைக்கப்படுவோம், ஆனால் காவல்துறையின் ஆதரவோடு இந்த நிறுவனம் இவ்வளவு மரங்களை எப்படி வெட்டுகிறது?" என்று கேட்கிறார்.
பக்கத்து கிராமமான பத்ரப்பள்ளி கிராமத்திற்கு செல்லும் பாதை அடர்ந்த சால் காடுகளால் நிறைந்திருக்கிறது. இங்கு மரம் அறுக்கும் இயந்திரங்கள் இன்னும் வந்து சேரவில்லை. இங்கு வசிக்கும் மக்கள் நாங்கள் ஒரு மரத்தை கூட வெட்ட அனுமதிக்கமாட்டோம் என்று கூறுகின்றனர். "நிர்வாகம் எங்களுக்கு எதிராக அதன் படையை பயன்படுத்தினால், நீங்கள் மற்றொரு கலிங்கநகரை இங்கு காண நேரிடும், ஏனெனில் இந்த முழு விவகாரமும் சட்டவிரோதமானது", என்று கூறுகிறார் திலீப் சாகு. மாநிலத்தின் கடலோர மாவட்டமான ஜஜ்பூரில் டாடா எஃகு நிறுவனம் ஒரு எஃகு ஆலையை நிறுவுவதற்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தியதற்கு எதிரான போராட்டங்களின் போது 2006 ஆம் ஆண்டில் 13 ஆதிவாசிகள் இறந்ததை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறுகிறார்.
வன உரிமைகள் சட்டம் கூறுவது வனப்பகுதியை சுரங்கம் போன்ற வனமற்ற பிற பயன்பாடுகளுக்காக திசை திருப்பும் போது சில நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படலாம் என்கிறது, அவையாவன: முதலாவதாக மாற்றப்பட போகிற வனப்பகுதியில் இருக்கின்ற கிராமங்களில் உள்ள மக்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் அவர்களுக்கு முன் வைக்கப்பட்ட பின்னர், கிராம சபைகள் அதற்கு ஒப்புக் கொள்ளலாம் அல்லது அதனை நிறுத்தி வைக்கலாம். இரண்டாவதாக மாற்றம் செய்யப்பட வேண்டிய இடத்தில் தனி நபருக்கோ அல்லது சமூக வன உரிமைக்கான கோரிக்கைகளோ நிலுவையில் இருக்கக்கூடாது.
பத்ரப்பள்ளியின் கிராம பஞ்சாயத்து தலைவரும் மற்றும் கிராம வன உரிமைகள் குழுவின் தலைவருமான சஞ்சுக்தா சாகு, கிராம சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் தான் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சுரங்கம் அமைப்பதற்கு வனத்தை அழிப்பதற்கான அனுமதி வழங்கியது என்பதில் 'மோசடி' உள்ளது, என்று கூறுகிறார். மேலும் எங்களிடம் நிரூபிப்பதற்காக கிராமசபை பதிவினையும் எடுத்துக் காண்பிக்கிறார், "எங்களது கிராமம் ஒருபோதும் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு 700 ஹெக்டேர் நிலத்தை ஒப்படைக்க சம்மதிக்கவில்லை. அதற்கான வழியும் இல்லை. இதற்கு மாறாக 2012 ஆம் ஆண்டு வரை 715 ஏக்கர் நிலத்திற்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக வன உரிமைக்கான கோரிக்கையை நாங்கள் தாக்கல் செய்திருக்கிறோம். ஏழு ஆண்டுகள் ஆகிய பின்னரும் கூட நிர்வாகம் எங்களது கோரிக்கையை செயல்படுத்தவில்லை> இப்போது அந்நிறுவனத்திடம் காடு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் அறிகிறோம். அது எப்படி சாத்தியம்?" என்று கேட்கிறார்.
கிராமத்தில் இருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 1950 நடுப்பகுதியில் சம்பல்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஹிராகுட் அணை கட்டுவதற்காக வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்ரப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர், என்று கூறுகிறார் பத்ரப்பள்ளியைச் சேர்ந்த திலீப் சாகு. "இந்தக் காடும் நிலக்கரிச் சுரங்கத்திற்கு வழங்கப்பட்டால், நாங்கள் மீண்டும் வெளியேற்றப்படுவோம். எங்களது வாழ்நாள் முழுவதையும் அணைகள் மற்றும் சுரங்கங்களுகாக வெளியேற்றப்படுவதிலேயே நாங்கள் கழிக்க வேண்டுமா?" என்று கேட்கிறார்.
தாளபிராவில் வசிப்பவர்களும் வனத்தை அழிப்பதற்கான தங்கள் கிராமத்தின் கிராம சபை ஒப்புதல் தீர்மானம் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அக்டோபர் மாதம் அவர்கள் மாநில அரசின் பல்வேறு அதிகாரிகளுக்கு எழுதி அனுப்பிய எழுத்துப்பூர்வ புகார்களை காண்பிக்கின்றனர். "இவை அனைத்தும் மோசடி மூலம் செய்யப்படுகிறது. இந்தக் காடு வெட்கப் படுவதற்கு நாங்கள் ஒருபோதும் ஒப்புதல் அளிக்கவில்லை", என்று வார்டு உறுப்பினரான சுஷ்மா பத்ரா கூறுகிறார். மாறாக வன உரிமைகள் சட்டத்தின் கீழ் வனத்திற்கான எங்கள் உரிமைகளை அங்கீீீகாரம் செய்ய வேண்டி, எங்கள் தாளபிரா கிராம வனக் குழு, 2012 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியது, மேலும் அதன் நகலை நாங்கள் எழுதிய ஒப்புதலுக்கான மோசடி பற்றிய எழுத்துப்பூர்வ புகாரில் இணைத்து ஒப்படைத்துள்ளோம்", என்று கூறினார்.
தாளபிரா வன அழிப்பிற்கான அனுமதி ஆவணங்களை ஆய்வு செய்த புதுதில்லியின் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான காஞ்சி கோஹ்லி, பொதுவாகவே வனத்துறையின் வனத்தை பிற பயன்பாடுகளுக்கு திசை திருப்பும் செயல்முறைகள் வெளிப்படையானதாக இருக்காது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆய்வறிக்கைகள் மற்றும் ஒப்புதலுக்காக பரிந்துரைகள் ஆகியவை கிடைப்பதில்லை. தாளபிரா விசயத்திலும் இது தான் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. மரம் வெட்டுதல் துவங்கிய போது தான் வனப் பகுதியில் நடைபெறும் சுரங்கப் பணியின் தீவிரத்தை கிராம மக்கள் உணர்ந்திருக்கின்றனர். அவர்களிடம் பரம்பரை உரிமைகளுக்கான உணர்வு மேலோங்கி இருக்கிறது", என்று கூறுகிறார்.
ஆவணங்களைப் படித்துப் பார்த்தால் ஆய்வறிக்கைகள் சாதாரணமாகவும் ,மதிப்பீடுகள் துண்டு துண்டாகவும் நடைபெற்றிருக்கிறது என்பதும் தெளிவாக வெளிப்படுகிறது என்று கோஹ்லி கூறுகிறார்.1.3 லட்சம் மரங்களை வெட்டுவதன் தாக்கம் மிகக் குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது> அது ஒரு போதும் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனை குழுவால் கிராமசபை தீர்மானங்கள் சரி பார்க்கப்படவில்லை. மொத்தத்தில், வனத்தை பிற பயன்பாட்டிற்கு திசைதிருப்பும் செயல்பாட்டில் சட்டபூர்வ ஓட்டைகள் இருப்பது தெளிவாக புலனாகிறது", என்று கூறுகிறார்.
கிராமவாசிகளின் போராட்டங்களுக்கு அதிகாரிகள் செவிசாய்த்தே ஆக வேண்டும் என்று ரஞ்சன் பாண்டா கூறுகிறார். "நிலக்கரி தான் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய குற்றவாளி. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, நிலக்கரி எரி மின் உற்பத்தி நிலையங்களை நிறுத்துவது பற்றி மொத்த உலகமுமே சிந்தித்து வருகிறது", என்று கூறினார்.
வன உரிமைச் சட்டத்தை கிராமங்களில் உள்ள மக்களுக்கு மத்தியில் விளம்பரப்படுத்த அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எங்களது சொந்த முயற்சியில் தான் உரிமை கோரலை நாங்கள் தாக்கல் செய்தோம். "எந்த ஒரு சட்டமும் உருவாக்கப்படுவதற்கு முன்பே இந்த காட்டை நாங்கள் தான் பாதுகாத்து வந்தோம்", என்கிறார் திலீப் சாகு. கிராமவாசிகளாகிய நாங்கள் அந்த நிறுவனத்திற்கு எங்களது காடுகளை அழிப்பதற்கான ஒப்புதலை அளித்துவிட்டோம் என்று அரசாங்கம் கூறுகிறது. நான் அவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், நாங்களே ஒப்புதல் கொடுத்திருந்தால், மரத்தை வெட்டுவதற்கு அந்நிறுவனத்திற்கு ஆதரவாக இவ்வளவு போலீஸ் படையை எதற்கு எங்களது கிராமங்களுக்கு அரசு அனுப்ப வேண்டும்?" என்று கேட்கிறார்.
பின் சேர்க்கை: தாளபிரா நிலக்கரி சுரங்கப் பகுதியில் மரம் வெட்டுவது போன்ற எந்த செயல்பாடுகளிலும் தங்களது நிறுவனம் ஈடுபடவில்லை என்று அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே அந்த நிலையை பிரதிபலிக்கும் வகையில் மேற்கண்ட கட்டுரை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழில்: சோனியா போஸ்