35 வயதான ஹிரா நினாமாவும் கல்பனா ராவலும் ஒருவருக்கு ஒருவர் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் வசிக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஒரே ஆசைதான். மகன் பிறக்க வேண்டும் என்பதுதான் அது. பன்ஸ்வாரா மாவட்டத்தின் செவ்னா கிராமத்தில் நான் ஹிராவைச் சந்தித்தேன். “மகள்களால் அவர்களின் அம்மா அப்பாவுக்கு என்ன பிரஜோசனம்?” என்று ஹிரா கேட்கிறார். “ குடும்பத்துக்கு வாரிசு வேண்டும் - குறைந்தது ஒரு பையனாவது இருப்பது நல்லது” என்கிறார் கல்பனா.
ராஜஸ்தானின் அதே மாவட்டத்தில் உள்ள வகா கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.
அவ்வப்போது விவசாயத் தொழிலாளியாக வேலை செய்பவர் ஹிரா. மற்ற நேரங்களில் வீட்டை நிர்வகிக்கும் பணியைச் செய்கிறார். அவர் 2012 முதலான கடந்த ஏழு ஆண்டுகளில், ஆறு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கடைசியாக பிறந்த பெண் குழந்தைக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகிறது. “எனது மாமியார் அழுவதைக் கேட்டதும், எனது ஆறாவது குழந்தை ஒரு பெண் என்று எனக்குத் தெரிந்து விட்டது. குழந்தையைப் பார்ப்பதற்கு முன்பாகவே, என் கண்ணீர் வழிந்தோடியது. நான் என் கணவரை விட அதிமாக அழுதேன் ” என்கிறார் அவர்.
“எனது இரண்டாவது மகள் பிறந்ததிலிருந்தே நான் பாபாஜியை வணங்கச் செல்கிறேன். அவர் ஒரு தேங்காய் மீது சில மந்திரங்களை ஓதினார். பின்னர், நான் அதை உடைத்து தண்ணீர் குடித்தேன். ஆனால், எனது அம்மாவைவிட நான் மிகவும் சபிக்கப்பட்டிருக்கிறேன் என்று அவர் பெருமூச்சுடன் கூறுகிறார். வெட்கப்பட்டுகொண்டே பேசுகிற ஹிராவே கூட ஐந்து மகள்களில் கடைசியாகப் பிறந்த கடைக்குட்டிதான்.
ஹிராவின் செவ்னா கிராமத்தில் 1,237 பேர் வசிக்கின்றனர். பில் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர் அவர். எழுத்தறிவு இல்லாத கிராமம் அது. அவளும் இங்குள்ள பிற பெண்களும் பல பிரசவங்களில் தப்பிப் பிழைத்தவர்கள். அவர்களின் உடல்நலத்தை விலையாகக் கொடுத்து அவர்கள் இந்த பிரசவங்களைச் சந்திக்கிறார்கள். ஹிராவுக்கு 35 வயதுதான். ஆனால், அவரது வயதை விட மிகவும் வயதானவர் போன்று, பலவீனமாக அவர் இருக்கிறார். அவரது உடலில் தொடர்ந்து வலிகள் இருக்கின்றன. கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிற அவருக்கு வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது.








