அவர்கள் முதலில் படகிலும், பிறகு இரண்டு ரயில்களிலும் வந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம், சுந்தர்பன்சில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 80 விவசாயிகள் 1,400 கிலோமீட்டருக்கு மேல் பயணித்து கிழக்கு டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் திரண்டனர். நவம்பர் 28ஆம் தேதி காலையில் நடைபெறும் கிசான் முக்தி மோர்ச்சாவில் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை ஊர்வலத்தில் வலியுறுத்த அவர்கள் வந்திருந்தனர். தங்களின் பகுதியின் உள்கட்டமைப்பு, அவர்களின் உற்பத்திக்கு நல்ல விலை, கைம்பெண் உதவித்தொகை போன்றவையும் அதில் அடக்கம்.
“விவசாயிகளாகிய நாங்கள் ஒதுக்கப்படுகிறோம். விவசாயிகளுக்கு என வளர்ச்சியோ, முறையான அமைப்போ கிடையாது. அவர்கள் தங்களின் முதன்மை வாழ்வாதாரங்களில் இருந்து இப்போது மாறி வருகின்றனர்,” என்கிறார் பிரபிர் மிஷ்ரா. “சுந்தர்பன்ஸ் மக்களின் வாழ்வாதாரத்தை கோரி நாங்கள் ஒன்று திரண்டோம். மேற்கு வங்கத்திற்காகவும், சுந்தர்பன்சின் 19 வட்டாரங்களுக்காகவும் போராட ஏழு வட்டாரங்களைச் சேர்ந்த 80 பிரதிநிதிகள் டெல்லிக்கு வந்துள்ளோம்,” என்றார் அவர்.
“ஏதேனும் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வளர்ச்சி பெற்ற நகருக்கு பலவித வலி, துயரங்களுடன் நாங்கள் வந்தோம்,” என்கிறார் ராம்லீலா மைதானத்தில் அடுத்த நாள் நடைபெறும் பேரணிக்காக குருத்வாரா ஸ்ரீ பாலா சாஹிப்ஜியில் தங்க உள்ள பிற போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்ட துர்கா நியோகி.
தமிழில்: சவிதா