மாறுபட்ட வடிவங்கள் மற்றும் பூச்சு ஓவியங்கள் கொண்ட கலையால் அறியப்பட்டவர்கள் வர்லிகள். ஆனால், வட மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் மரம், கற்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கொண்ட அவர்களின் நடுத்தரமான வீடுகள் கொண்ட குடியிருப்பில் அக்கலைகளை செய்யாமல் அச்சமூகத்தினர் வாழ்கிறார்கள்.
“ஒரே ஒரு வர்லி கலைஞர்தான் இங்கு இருக்கிறார்“ என்று 43 வயது ஆஷா காலே கூறுகிறார். அவர் ராவல்பாடாவில் வசிப்பவர். “எஞ்சிய நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கைக்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம்“. ஆஷா மற்றும் அவரது இரு சகோதரர்களும் ஓவியங்கள் வரையக் கற்றுக் கொள்ளவில்லை. “அது முக்கியம் என நாங்கள் கருதவில்லை“ என்று ஆஷா கூறுகிறார்.
25 வயது நிறைந்த தினேஷ் பாராப் என்ற ஒரே ஒரு கலைஞர்தான் இருக்கிறார். சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா நவபடாவில் உள்ள அவரது குடும்பத்துடன் வசிக்கிறார். “வர்லிகள் அவர்களின் சொந்தக் கலையில் ஆர்வமின்றி உள்ளார்கள்“ என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். தினேஷ் அவரது பாட்டியிடம் இருந்து இக்கலையை கற்றுக்கொண்டார். அவரது தாய் ஷாமு பால்வாடியில் பணி செய்கிறார். அவரது தாயிடம் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டார். “ஆனால், இதை பழகிக்கொள்வதற்கு எனது தாய் எனக்கு நேரம் கொடுக்கவில்லை. ஏனெனில் எங்களிடம் பணம் இல்லை“ என்று அவர் கூறுகிறார்.
“இதற்கிடையில் நீண்ட காலமாக தேசியப் பூங்காவில் உள்ள வர்லிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளார்கள்“ என்று ஆஷா கூறுகிறார். “அவர்கள் எங்களை எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றுவோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் என்ன செய்வோம்? நாங்கள் எங்களுக்கு தெரியாத இடத்தில் வீடு கட்டிக்கொள்ள வேண்டும்“. ஆஷாவின் குடும்பத்தினர் இந்த நிலத்தில் 7 தலைமுறைகளாக வசித்து வந்தாலும் இதுதான் நிலை. “அவர்கள் எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக ஏதோ உதவி செய்வது போல எங்களுக்கு சிறிய வேலைகளைத் தருவது என்னை ஆத்திரமூட்டுகிறது“ என்று அவர் கூறுகிறார்.










