இந்த தொற்றுநோய் நம்மை வெறும் மண்டலங்களாகவும் பகுதிகளாவும் சுருக்கிவிட்டது. அறிவுறுத்தப்படும் சமூக இடைவெளி மக்களிடையே பெரும் இடைவெளியை உருவாக்கிவிட்டது. தொடர்பு கொள்ளவும் இணைந்து கொள்ளவும் அஞ்சுகிறோம். ஊடகங்கள் எல்லாவற்றிலும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் தங்களின் கிராமங்களை அடையும் முயற்சியில் நடந்து சோர்ந்து, பசியில் வாடி, காத்து தவிக்கும் செய்திகளை பார்க்கிறோம். காசுமில்லாமல் ஒரு கவளம் சோறுமில்லாமல் தடுப்புகளையும் லத்தியடிகளையும் சந்திக்கும் அவர்களின் நிலையை பார்க்கும்போது, மனிதநேயம் என ஒன்று இருக்கிறதா என கேள்வியே எழுகிறது.
பிறகு ஒரு மனிதரை நீங்கள் பார்க்கிறார்கள். மகாராஷ்டிராவில் இருக்கும் அகோலா மாவட்டத்திலிருக்கும் வீட்டை நோக்கி, சுட்டெரிக்கும் மே மாத வெயிலில் நெடுஞ்சாலை நடுவில், வயோதிக அத்தையை தன் கைகளில் தூக்கி சென்றுக் கொண்டிருக்கிறார். அவர் மனிதரா அல்லது தேவதையா? சாதாரண நேரங்களிலேயே பலர் வயோதிகர்களை திருவிழாக்களிலும் முதியோர் இல்லங்களிலும் அநாதரவாக விட்டுச் சென்று விடுவார்கள். பணம் படைத்த பெற்றோர்களை தனியாக வீடுகளில் வசிக்க விட்டுவிட்டு, சம்பாதிக்கவும் வாழ்க்கை தேடியும் வெளிநாடுகளுக்கு பறந்து செல்வோரும் உண்டு. இந்த மனிதர் சாதாரண நபராக தெரியவில்லை. வறுமையிலும் அவமானத்துக்கு நடுவிலும் மனிதநேயம் இருக்கிறது என நமக்கு காட்டும் தேவதை அவர்.
குறிப்பு: விஷ்வனாத் ஷிண்டே என்ற புலம்பெயர் தொழிலாளர் அவருடைய அத்தையான பச்சேலா பாய் என்பவரை நவி மும்பையிலிருந்து விதர்பாவில் இருக்கும் அகோலாவுக்கு மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் சுமந்து சென்றிருக்கிறார். லபனி ஜங்கி என்கிற ஓவியர் இக்காட்சியை ரவிஷ் குமாரின் (NDTV India) ப்ரைம் டைம் என்ற நிகழ்ச்சியில் சோஹித் மிஷ்ராவின் செய்தியறிக்கையாக மே மாதம் 4ம் தேதி பார்த்தார். லபனியின் செய்தியை மொழிபெயர்த்தவர் ஸ்மிதா காடோர்.
தமிழில்: ராஜசங்கீதன்