புனே நகரில் உள்ள கோத்ருட் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள லட்சுமி நகர் காலனியில் வசிப்பவர் அபோலி காம்ப்ளே. அவர் கூறுகையில், "நாங்கள் அனைவரும் வீட்டு வேலைகள் செய்வதன் மூலமே வயிற்றை நிரப்புகிறோம். ஆனால் இப்போது எந்த வேலையும் இல்லை; ஆகவே, எங்கிருந்து எங்களுக்கு பணம் கிடைக்கும்? . ரேஷன் பொருள்கள் எதுவும் இல்லை. உணவு கிடைக்கவில்லை என்றால், குழந்தைகள் எப்படி வாழ்வார்கள்? ” என்று கேட்கிறார்.
கோவிட் -19 ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, மார்ச் 30 அன்று அவர் வசிக்கும் குப்பத்து காலனிக்கு நான் சென்றப்போது, அபோலியின் கோபமும் விரக்தியும் அவரது குரலில் தெளிவாகத் தெரிந்தன. “குறைந்தபட்சம் இதுபோன்ற சமயங்களில் எங்களுக்கு உணவு தானியங்கள் ரேஷன் கடையில் கிடைக்க வேண்டும், ” 23 வயதாகும் அவர் இப்படி கூறுகிறார். “பெண்கள் அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். நாங்கள் வெளியே செல்ல காவல்துறை அனுமதிப்பதில்லை. நாங்கள் வெளியே சென்று வேலை செய்ய முடியாவிட்டால், எங்களுக்கான உணவு பொருள்களை நாங்கள் வாங்க முடியாது. எங்கள் குடும்பத்தை எப்படி நடந்துவது என்பது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இவ்வளவு கடினமான நேரத்தில்கூட எங்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்கவில்லை என்றால், என்ன பயன்? எங்களுக்கு ரேஷன் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் தூக்கிட்டு கொள்ளவேண்டுமா? ” அபோலியின் குடும்பம் 1995ம் ஆண்டு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அகோலேகடி கிராமத்திலிருந்து புனே நகரத்திற்கு குடிபெயர்ந்தது. ஏப்ரல் 16ம் தேதி அபோலி திருமணம் செய்து கொள்ளவிருந்தார், ஆனால் அவரது திருமணம் இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏழு குடியிருப்புகளில் (தன்னார்வல அமைப்புகள் நடத்திய கணக்கெடுப்பின்படி) கிட்டதட்ட 850 பேர் வசிக்கும் அந்த காலனிக்கு நான் சென்றிருந்தபோது, அங்குள்ள பெண்கள் உணவு மற்றும் பணப் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர் - அவர்களில் பலர் வீட்டுப் பணியாளர்கள் . லட்சுமி நகரிலுள்ள 190 குடும்பங்களில் பெரும்பாலானவை மகாராஷ்டிராவின் அகமதுநகர், பீட், சோலாப்பூர் மற்றும் லாத்தூர் மாவட்டங்களிலிருந்தும், பக்கத்து மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் குடியேறியவர்கள். அவர்களில் பலர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாதாங் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவின் புத்தாண்டு நாளான குடி பத்வாவுக்கு முந்தைய இரவு, பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கு அறிவித்தபோது, அத்தியாவசிய பொருட்கள் அடுத்த நாள் கிடைக்குமா என்பது பற்றின தெளிவான அறிவிப்பு இல்லை. திறந்திருக்கும் கடைகளிலிருந்து தங்களால் இயன்றதை வாங்க மக்கள் துடித்தனர் - ஆனால் அதற்குள்ளாகவே விலைகள் உயர்ந்துள்ளன.
பின்னர், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப் பெறும் என்றும், வறுமைக் கோட்டுக்கு (பிபிஎல்) கீழே உள்ள குடும்பங்களுக்கு கூடுதலாக பொது விநியோக முறையிலிருந்து (பி.டி.எஸ்) மூன்று மாதங்கள் இலவச ரேஷன் பொருள்கள் அளிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.




