பழப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்பது பி.கிஸ்தாவின் பல வருட ஆசை. “விவசாய கூலி மூலம் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு கடனை அடைக்க முடியாது என தெளிவாக தெரிந்து கொண்டேன்” என்கிறார். ஒருவழியாக போன வருடம் நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். “நான்கு ஏக்கர் நிலத்தை வருடத்திற்கு 20,000 ரூபாய் கொடுத்து குத்தகை எடுத்துள்ளேன். மூன்று வருடங்களுக்கு முன்பு என் மகள் மற்றும் மகனின் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயத்தை தொடங்கினேன்”
மார்ச் கடைசியில் ஊரடங்கு தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு, அவரது ஊரிலும் ஆனந்தபூர் மாவட்டத்தின் புக்கராய சமுத்திரம் தாலுகாவில் உள்ள மற்ற கிராமங்களிலும் ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக தன்னுடைய நிலத்தில் பயிரிடப்பட்ட 50 டன் வாழையை (தர்ப்பூசணியும் கூட) இழந்தார். பழங்களை விற்றதன் மூலம் நான்கு லட்ச ரூபாய் நஷ்டம் போக, அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் மட்டுமே கிடைத்தது. முன்பு வாங்கிய கடனை அடைப்பதற்குப் பதில், அவருடைய கடன் 3.5 லட்சத்திலிருந்து 7.5 லட்சமாக தற்போது ஏறியுள்ளது.
2019-ம் ஆண்டு பருவமழை சிறப்பாக இருந்ததால் ஆனந்தபூர் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த வருடம் ராபி விளைச்சல் சிறப்பாக இருந்ததை அடுத்து இப்போதும் நல்ல வருமானம் கிடைக்கும் என கிஸ்தா போல் இவர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒரு டன் ரூ.8000 வரை போகும் என்று வாழை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராபி பருவ இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சந்தையில் நிச்சியமற்ற தன்மை நிலவியதால் வியாபாரிகள் பொருட்களை வாங்க தயக்கம் காட்டினர். ராபி பருவத்தில் ஏப்ரல் மாதம் வரை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வாழை அறுவடை செய்யப்படும். இப்போது அனைத்தும் அடி வாங்கியுள்ளது. இதன் பாதிப்பு விவசாயிகளை மிகவும் பலவீனமாக்கியுள்ளது.
கடுமையான இழப்புகளை சந்தித்தவர்களில் புக்கராயசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஜி.சுப்ரமண்யமும் ஒருவர். 3.5 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ள அவர், இதற்காக 3.5 லட்சம் செலவழித்துள்ளார். ஏப்ரல் மாதம், தான் அறுவடை செய்த 70 டன்னையும், ஒரு டன் ரூ.1500 என்ற விலையில் கிராமத்திற்கு வந்த வியாபாரியிடம் மொத்தமாக விற்றுவிட்டார். அந்த மாதம் 8-9 டன் எடை கொண்ட வாழைத்தார் சரக்கு, விவசாயிகள் ஒரு டன்னுக்கு கொடுக்கும் விலையை விட குறைச்சலாக வெறும் ரூ.5,000 – ரூ. 3,000 விலைக்கு வாங்கப்பட்டது.






