“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் வணக்கம் சொன்னேன்“. குடியரசுத் தலைவர் எனக்கு வணக்கம் சொன்னார். ’ராஷ்டிரபதி பவனுக்கு உங்களை வரவேற்கிறேன்‘ என்றும் சொன்னார்“ என்கிறார் கமலா புஜாரி. பத்மஸ்ரீ விருது வாங்குவதற்காக இந்த ஆண்டு மார்ச் மாதம் புதுடெல்லிக்கு தான் பயணம் செய்ததை நினைவு கூர்ந்தார் கமலா.
‘விதைகளைப் பாதுகாக்கிற’ திருமிகு கமலாவின் பணியை அங்கீகரித்து, அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக துவக்கப்பட்ட பயணம் இது. கமலாவுக்கு திருமணமான பின்னர், அவர் ஒடிசாவில் உள்ள கோராபுட் மாவட்டத்தின் பத்ராபூர் கிராமத்துக்கு சென்றார். அப்போது, அந்த கிராமத்தினர், 15 வகையான நெல் பயிர்கள் மற்றும் கருஞ்சீரகம், கோதியா, ஹலாடிசூடி, உமுரியாசூடி, மச்சகந்தா, பூடேயி, டோடிகாபுரி ஆகிய நெல் வகைகளை வளர்த்து, விவசாயம் செய்ததை கமலா நினைவுகூர்கிறார். மற்ற பயிர்களும் அதிகமான அளவில் இருந்தன.
”ஒவ்வொரு குடும்பமும் இரண்டு அல்லது மூன்று வகையான நெல் வகைகளைப் பயிரிட்டு வந்தனர். அவை ஒவ்வொன்றும் மற்றவற்றோடு வேறுபட்டவை“ என்கிறார் கமலா. “அறுவடை காலத்தின் முடிவில், மக்கள் விதைகளையும் தானியங்களையும் ஒருவருக்கு ஒருவர் பண்டமாற்று முறையில் மாற்றிக்கொண்டனர். அந்த வகையில் கிராமத்தில் நிறைய வகையான தானியங்கள் இருந்தன“, என்றும் அவர் சொன்னர்.
ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்பு, நெல் வகைகள் குறையத் துவங்கின. “ உள்ளூர் வகைகளை பயிரிடுவது மிகவும் குறைந்ததை நான் கவனித்தேன். அவற்றை பாதுகாப்பது அவசியம் என்று நினைத்தேன்“ என்கிறார் கமலா. அவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் பூமியா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்.
கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள், தனித் தனி குடும்பங்களாக பிரியத் துவங்கியதால், சிறு குடும்பங்கள் அதிக மகசூலைத் தரும் கலப்பின விதைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், விதைகளின் வகைகள் குறையத் துவங்கின என்கிறார் திருமிகு. கமலா. அரசாங்கம் கொள்முதல் செய்து பாதுகாத்து வைக்கிற தானிய கிடங்குகளில் தானியங்களை கொள்முதல் செய்வதற்கு என்றே தர நிர்ணயங்களை வைத்திருக்கின்றனர். அதற்கு பொருந்தாத நெல்வகைகளை அவர்கள் கொள்முதல் செய்வதில்லை” என்கிறார் கமலாவின் மகன் தன்க்கதார் புஜாரி. “ சில நேரங்களில் மஞ்சகன்டா போன்ற மிகத் தரமான விதை வகைகளை தானியக் கிடங்கில் விற்பனைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பெரும்பாலும், நாங்கள் மஞ்சகன்டாவையும் ஹல்திசுடியையும் வீட்டு உபயோகத்துக்குப் பயிரிடுவோம். ‘சர்காரிதான் 1010‘ விதையை (புதிய கலப்பின வகை) மண்டியில் விற்பனை செய்வதற்காகப் பயிரிடுவோம்.
பாரம்பரிய விவசாய முறைகளால் மேம்படுத்தப்பட்ட உள்ளூர் தாவர வகைகள் மறையத் துவங்குவதை பார்த்த கமலாஜி, பட்ராபுட் கிராமத்தை சுற்றி 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமங்களுக்கு விதைகளை சேகரிக்க நடந்தே சென்றார். “ நான் சென்ற பாதைகள் கடினமானவையாக இருந்தன, பல இடங்கள் தரிசு நிலங்களாகவும் வனாந்திரமாகவும் இருந்தன“ என்று அவர் நினைவு கூர்கிறார். சில சமயங்களில் விதை சேகரிக்கப் போன கிராமங்களிலேயே அவர் தங்க நேர்ந்துள்ளது.
தான் சேகரித்த விதைகளை தன் வீட்டில் சேமித்து வைக்க ஆரம்பித்தார் கமலா. அல்லது தனது குடும்பத்துக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறு சிறு பாத்திகளில் அவற்றை விதைக்கத் துவங்கினார். நாட்கள் செல்லச் செல்ல, அவரது கிராமத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் பட்ராபூட் எனும் ஊரில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் ஜெய்பூர் கிளையால் 2001ல் துவக்கப்பட்ட விதை வங்கியில் விதைகளை சேமிக்க ஆரம்பித்தார்.
நாம் அவரை ஜெய்பூர் ஒன்றியத்தின் டோங்கார்சின்சின்சி பஞ்சாயத்தில் உள்ள கஞ்சய்பட்ராபூர் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, 119 வீடுகளைக் கொண்ட பட்ராபுட் எனும் இடத்தில் சந்தித்தபோது, அவர் “அருகாமை கிராமங்களில் உள்ள பல குடும்பங்களில் இரண்டே இரண்டு வகைதான் மஞ்ச்சகன்டா மற்றும் ஹல்தி சூடி) விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.“ என்று நம்மிடையே பகிர்ந்து கொண்டார். பட்ராபுட் கிராமத்தையும் உள்ளடக்கிய, மக்கள் தொகையான 966இல், 381 பேர் பட்டியல் பழங்குடியினர்கள்.
கமாலாஜிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கூட, அதிக அளவில் 35 வயதான அவரது மகன் தங்கதாரால் பயிரிடப்படுகிற அந்த நிலத்தில், மஞ்ச்சகன்டா மற்றும் ஹல்டிசூடி வகை நெற்பயிர்கள் சிறு இடங்களில் பயிரிடப்படுகின்றன. இதைத் தவிர அந்தக் குடும்பம் வேறு பாரம்பரிய விதைகள் எதையும் பயிரிடுவதில்லை. அவர்கள் உள்ளூர் வகையினை பயிரிடுவதிலிருந்து அதிக மகசூல் தரும் கலப்பின வகை பயிர்களை பயிரிடுவதற்கு கடந்த பத்தாண்டுகளில் மெதுவாக மாறிவிட்டார்கள் என்று தங்கதார் கூறினார்.
“எங்களின் வருமானம் நாங்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறோம் என்பதைச் சார்ந்தது“ என்று அவர் சொல்கிறார். “ஒன்றிரண்டு பாரம்பரிய வகைகளை பயிரிட்டால் 6லிருந்து 10 குவிண்டால்கள் விளைச்சல் கிடைக்கும். அதிக மகசூல் தரும் வகைகளை பயிரிட்டால் கிடைக்கும் விளைச்சலை (15லிருந்து 18 குவிண்டால்கள்) விட இது மிகவும் குறைவு. இவ்வளவு குறைவான உற்பத்தி இருந்தால் நான் எப்படி என்னுடைய குடும்பத்தை பராமரிக்க முடியும்? தவிர, பல ரகங்களை விற்பனை செய்வதைவிட ஒரே ரகத்தை விற்பனை செய்வது எளிது“
தனது குடும்பம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கமலாஜி விதைகளை பாதுகாக்கும் தன் வேலையை தொடர்ந்தார். அதற்காக அவருக்கு விருதுகள் கிடைத்தன. 2002ல், ஜோகான்ஸ்பெர்கில் ஜெய்ப்பூர் ஆதிவாசி சமூகங்களின் சார்பாக ‘ஈக்வட்டார் இனிசியேடிவ்‘ என்ற விருதை அவர் பெற்றார். 2009 - 10ல், பஞ்சாபடி கிராம்ய உனயான சமிதியின் சார்பாக (2003இல் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் உதவியோடு துவக்கப்பட்ட கிராமப்புற வளர்ச்சி சொசைட்டி, இதில் கமலாஜி துணைத் தலைவராக இருந்துள்ளார்), ‘தாவர மரபணு காப்பாளர் சமூக விருது‘ வாங்கினார். இந்த விருது தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பால் உருவாக்கப்பட்ட
தாவர வேளாண் - பல்லுயிரைக் பாதுகாத்து, அவற்றை பராமரிப்பதற்காக விவசாயிகள் மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஒரு அரசாங்க அமைப்பு, தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2001ஐ அமல்படுத்துவதற்காக, 2005 நவம்பரில் வேளாண்துறையின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். பாரம்பரிய விவசாய முறைகளால் மேம்படுத்தப்பட்ட உள்ளூர் தாவர வகைகளை பாதுகாத்த, வளர்த்த, உருவாக்கிய அல்லது முன்னேற்றிய விவசாயிகள் மற்றும் தாவரங்கள் வளர்ப்பவர்களுக்கு உரிமைகளை இந்த அமைப்பு வழங்குகிறது.
ஆனால், கமலாஜி முன்பு பயிரிட்ட மற்றும் தற்போது பாதுகாத்து வரும் விதைகள் மீதான உரிமைகளைப் பெறுவதற்கு பத்மஸ்ரீ விருதோ அல்லது தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு அளித்த விருதோ இரண்டுமே உதவவில்லை. தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்று இருக்கிறது என்பதும் அதன் வாயிலாக உரிமைகளைப் பெற முடியும் என்பது பற்றி கூட கமலாவுக்குத் தெரியாது. உதாரணத்துக்கு, கருஞ்சீரகம் மீதான உரிமை 2013 அக்டோபர் 8 ம்தேதியிலிருந்து ஒடிசாவில் உள்ள ஹரிசந்தராபூரைச் சார்ந்த ஜோகேந்திர சாஹூ என்பவரிடம் உள்ளது. அந்த உரிமை 2028 அக்டோபர் 7ம் தேதி வரை அவரிடம் இருக்கும். கருஞ்சீரகத்துக்கான உரிமைகள் வேண்டும் எனும் ஜோகேந்திரரின் கோரிக்கை விண்ணப்பம் 2013 ஜூன் மாதத்தில் ‘இந்திய தாவர வகைகள்’ என்ற பத்திரிக்கையில் விளம்பரப்படுத்தப்பட்டது. கமலாஜி அல்லது வேறு ஒரு விவசாயியோ சமூகமோ தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பயிர் மீது உரிமை இருக்கிறது என்று கருதினால், இத்தகைய விளம்பரம் வெளியிடப்பட்டு 3 மாதங்களுக்குள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
ஆனால் கமலாஜி பத்திரிகையைப் படிக்கவில்லை. உண்மையில், பல விவசாயிகளுக்கு பிபிவிஎஃப்ஆர்ஏ (PPVFRA) பற்றி தெரியாது அல்லது அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் விதைகளுக்கு உரிமை கோரலாம் என்பதும் தெரியாது. உரிமை கோரலை முதலில் தாக்கல் செய்பவர்கள்தான் பதிவு செய்துகொள்ள முடியும் என்பது இதன் பொருள். எனவே ஜோகேந்திரா மட்டும் கலாஜிராவின் பலன்களை அனுபவிப்பார். அந்த வகை தானியம் பல்வேறு வணிகரீதியான லாபங்களை ஈட்டினால், அடுத்த 9 ஆண்டுகளுக்கு அவர்தான் அதை அனுபவிப்பார். மே 2019 வரை பிபிவிஎஃப்ஆர்ஏ 3,538 வகைகளுக்கு சான்றிதழ்களை வழங்கியுள்ளது - அவற்றில் 1,595 விவசாயிகளின் தானிய வகைகள் ஆகும். மீதம் உள்ள சான்றிதழ்கள் தனியார் விதை நிறுவனங்கள், ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் அல்லது தனிப்பட்ட வணிக வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஒரு புதிய வகையை வளர்க்காவிட்டால் எந்தவொரு தனிப்பட்ட விவசாயிக்கும் அல்லது சமூகத்திற்கும் உரிமைகள் இருக்கக்கூடாது என்று பண்ணை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “ ஒரு விதையை தொடர்ந்து பருவந்தோறும் பயன்படுத்தினால்தான் அந்த விதை செழித்து வளரும். சான்றிதழ்கள், உரிமைகள் போன்ற வழிமுறைகளில் எப்படி ஆகும்? ” என்று கமலாஜி கேட்கிறார்.
வலுவான சாகுபடி இல்லாத நிலையில், பல வகைகள் மறைந்து வருகின்றன. கஞ்சீபத்ரபுட்டிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டுரா தொகுதியில் உள்ள லிம்மா கிராமத்தின் நுகுடா குக்கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பூமியா ஆதிவாசி விவசாயி சந்திரம்மா மாசியா,(வயது 55), தனது குடும்பமும் பாரம்பரிய வகைகளிலிருந்து ‘மேம்பட்ட’ ஒரு வகை தானியத்துக்கு மாறியதாகக் கூறுகிறார். “நாங்கள் இந்த‘ மேம்படுத்தப்பட்ட ’வகையிலிருந்து சுமார் 18 முதல் 20வரையிலான குவிண்டால்கள் பெற்றோம். மகசூல் அதிகரிப்பதைப் பார்த்து, மற்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் விதைகளுக்காக என்னை அணுகி வருகின்றனர் ”என்றும் அவர் கூறுகிறார். சந்திரம்மா தனது குடும்பத்தின் நுகர்வுக்காக மட்டுமே அரை ஏக்கரில் பாண்டாகுரா என்று அழைக்கப்படும் 100 நாளில் விளையும் ஒரு தானிய வகையைப் பயிரிடுகிறார்.
இதேபோல், பரோஜா சமூகத்தைச் சேர்ந்த ஆதிவாசி விவசாயி 40 வயதான ருக்மணி கில்லோ,லிம்மா கிராமத்தின் ஜொலகுடா குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அரை ஏக்கரில் முக்தபாலியையும், இரண்டு ஏக்கரில் மச்சகாந்தாவையும் பயிரிடுகிறார். “இந்த தானிய வகைகளை விதைப்பு நாளிலிருந்து 90 முதல் 100 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். நீண்ட கால தானிய வகைகளுக்கு 120 முதல் 140 நாட்கள் தேவைப்படும். இந்த குறுகிய கால தானிய வகைகளுக்கு உள்நாட்டில் விவசாயிகளிடையே நல்ல கிராக்கி உள்ளது,” என்கிறார் ருக்மணி
கமலாஜியின் மகள், 42 வயதான ரைமதி கியூரியா, பாட்ரபுட்டிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குக்கிராமமான நாகுடாவில், தனது குடும்பத்துக்கு இருக்கிற, ஆறு ஏக்கரில் பயிரிடுகிறார் . இந்த ஆண்டு அவர் காலாஜிரா, மச்சகாந்தா, ஹலடிச்சுடி, கோதியா, டங்கர் மற்றும் போடிகபுரி ஆகிய தானியவகைகளைப் பயிரிட்டுள்ளார். "ஆறு ஏக்கர்களில், இரண்டு ஏக்கரில் இருந்து உற்பத்தி செய்யப்படுவது பத்து பேர் கொண்ட எங்கள் 10 குடும்பத்திற்கு போதுமானது. மீதியை உள்ளூர் விவசாயிகளுக்கு விற்கிறோம். இவை அனைத்தும் குறுகிய காலத்திலேயே மகசூல் தருகிற தானிய வகைகள் ”என்கிறார் ரைமதி.
குறுகிய கால வகைகள் உள்ளூரிலேயே விற்பனை ஆகிவிடும். ஏனெனில், அவை செப்டம்பர்-அக்டோபர் மாத காலகட்டத்தில் சில நாட்கள் கொண்டாடப்படும் ஆதிவாசி திருவிழாவான நுவாக் பண்டிகையின்போது பிரதானமாக அவைதான் தேவைப்படும். "எங்கள் கிராம தெய்வமான காவ்ன் புதி தகுரானிக்கு அந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட தானியத்திலிருந்து சமைத்த உணவை படையல் செய்த பின், நாங்கள் உணவு உண்போம். அந்த நாளில், நாங்கள் இயந்திரத்தைப் பயன்படுத்தி, பதப்படுத்தப்பட்ட தானியங்களைச் சாப்பிடுவதில்லை. கையால் பதப்படுத்தப்பட்ட தானியத்தைச் சாப்பிடுவோம் ”என்கிறார் குண்டுரா தொகுதியில் உள்ள குண்டுரா கிராமத்தைச் சேர்ந்த, பரோஜா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 38 வயதான தமு பரோஜா.
மற்ற பிற பழமையான வகைகள் விதை வங்கிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. பட்ராபுட், நுவாகுடா மற்றும் ஜோலாகுடா ஆகிய கிராமங்களில் கிராம மக்கள் சமூகம் கூட்டாக இணைந்து நடத்தும் (எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தால் துவக்கப்பட்டவை) விதை வங்கிகள் உள்ளன. நுவாகுடா விதை வங்கியில் 94 நெல் வகைகள் மற்றும் 16 கேழ்வரகு வகை விதைகளை வைத்திருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும், இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியில் பயிரிடப்படுகின்றன. இந்த வருடம் வெவ்வேறு இடங்களிலிருந்து இன்னமும் அதிக வகை நெல் விதைகளை நாங்கள் சேகரித்துள்ளோம். இப்போது எங்களிடம் உள்ள நெல் வகைகள் 110 “ என்கிறார், 25 வயதான, ஒடிசா மாநில அரசாங்க தானியங்கள் பாதுகாப்பு மையத்தில் உள்ள, உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த வல்லுநர், புத்ரா பிரதான்.
“விவசாயத்தில், விதை விதைக்கப்படவேண்டும், வளர்க்கப்படவேண்டும், சேகரிக்கப்படவேண்டும், பாதுகாப்பாக வைத்திருக்கப்படவேண்டும், விநியோகிக்கப்படவேண்டும். இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் மக்களுக்கு விதைகள் வழங்கும் வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னிடம் உள்ள விதைகளை நான் தொலைத்தாலும், மற்றவர்கள் அவர்களிடம் நான் கொடுத்த வேறு ஒரு வகையை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்,“ என்கிறார் கமலிஜி. “அரசாங்கத்தின் உதவி எங்களின் விதைகளைப் பாதுகாப்பதில் எங்களை நீண்ட தூரத்துக்கு அழைத்துச் செல்லும். எங்களின் எதிர்காலத்துக்காக பாரம்பரிய விதைகளை பாதுகாக்க உதவிடவேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.“
“என் அம்மாவைப் பார்க்க வரும் பலர், உன் அம்மா உள்ளூர் வகை விதைகளை பாதுகாத்ததற்காக, விருது வாங்கியுள்ளபோது, நீ எப்படி அரசாங்கம் தரும் விதையை பயிரிடலாம் என்று கேட்கிறார்கள். அதனால், அடுத்த ஆண்டிலிருந்து, நான் உள்ளூர் வகை விதைகளுக்கு மாறப்போகிறேன் “ என்று கூடுதலாக கூறுகிறார் அவரது மகன் டங்கதர் .
கூடுதல் தகவல்கள் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான உதவிகள் செய்த, ஒடிசா மாநிலத்தின் கோராபுட்டில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷனில் பணியாற்றுகிற, பிரதாப் சந்திரசேனாவுக்கும் பிரசாந்த் குமார் பரிடாவுக்கும்,ஒடிசாவின் WASSAN நிறுவனத்தைச் சேர்ந்தவர்களான, சுசான்டா சேகர் சவுத்திரி, திரிநாத் தாரா புடியா, ஆகியோருக்கு இந்த கட்டுரையின் ஆசிரியர் நன்றி தெரிவிக்கிறார்.
தமிழில்: த. நீதிராஜன்