“கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்கு பதில் மொத்தமாக கடவுள் எங்களை கொன்றுவிடலாம்,” என்கிறார் அசார் கான். விவசாயியான அவரின் நிலத்தை, சுந்தர்பனில் இருக்கும் மவுசினி தீவை மே 26ம் தேதி விழுங்கிய கடலலைகளுக்கு இழந்திருந்தார்.
வங்காள விரிகுடாவில் உருவாகி இருந்த புயலால் முரிகங்கா ஆற்றில் வழக்கத்துக்கு மாறாக 1-2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. கரையை உடைத்து ஓடிய நீர், தீவின் தாழ்வுப்பகுதியில் வெள்ளச்சேதத்தை உருவாக்கியது. வீடுகளும் நிலங்களும் சேதமாயின.
யாஸ் புயலின் விளைவு மே 26ம் தேதி மதியத்துக்கும் சற்று முன்பு நேர்ந்தது. தென்மேற்கு மவுசுனியிலிருந்து 65 நாடிகல் மைல் தொலைவிலிருந்த ஒடிசாவின் பலாசோரில் கனமழை பெய்தது. அதிதீவிர புயலாக அது மாறியதும், காற்று 130-140 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது.
“புயல் வருவதை நாங்கள் பார்த்தோம். எங்களின் உடைமைகளை எடுப்பதற்கு நேரமிருப்பதாக நினைத்தோம். ஆனால் வெள்ளம் எங்களின் கிராமத்துக்குள் புகுந்து விட்டது,” என்கிறார் பக்தங்கா கிராமத்தை சேர்ந்த மஜுரா பீவி. மவுசினியின் மேற்கிலுள்ள முரிகங்காவின் கரையில் அவர் வசிக்கிறார். “உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினோம். உடைமைகளை காக்க முடியவில்லை. பலர் மரங்களில் ஏறி தங்களை காத்துக் கொண்டனர்.”
தீவின் நான்கு கிராமங்களான பக்தங்கா, பலியாரா, கசும்தலா மற்றும் மவுசுனி ஆகிய இடங்களுக்கு செல்லும் நீர்வழிப் போக்குவரத்து ஓயாத மழையால் மூன்று நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது. மே 29ம் தேதி நான் மவுசுனியை அடைந்தபோது பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன.
“என் நிலம் உப்புநீருக்கு அடியில் இருக்கிறது,” என்கிறார் பக்தங்கா முகாமில் நான் சந்தித்த அபிலாஷ் சர்தார். “விவசாயிகளான எங்களின் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம்,” என்கிறார் அவர். “அடுத்த மூன்று வருடங்களுக்கு என் நிலத்தில் விவசாயம் பார்க்க முடியாது. மீண்டும் மண் வளம் பெற ஏழு வருடங்கள் ஆகலாம்.”




















