கந்தன் கோராவின் வீட்டில் உள்ள இருட்டறையில் இருக்கக்கூடிய பாத்திரங்கள், தொட்டிகள் மற்றும் மீன்தொட்டிகளில் தேவதை மீன், மயில் மீன், கப்பீஸ், மோலி மற்றும் இதர மீன்கள் நீந்துகின்றன. இதுகுறித்து கூறிய அவர், “இது ஆத்மார்த்தமான வேலை. அவைகளைக் குழந்தைகள் போன்று வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார்.
மேற்குவங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள உதய்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் மீன்வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஊர் தெற்கு கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவரது குடும்பம் முழுவதும் அலங்கார மீன்வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது குடும்பத்தைப் போலவே கோரா பரா, மண்டல் பரா மற்றும் மிஸ்திரி பரா ஆகிய மூன்று குக்கிராமங்களைச் சேர்ந்த 50-60 குடும்பங்களும், இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 540 குடும்பங்களும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக அவர் மதிப்பிட்டுக் கூறினார்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்கத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள், கிட்டத்தட்ட 200 வகையான வண்ணமயமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அலங்கார மீனினங்களை நாடுமுழுவதும் உள்ள அலங்கார மீன் ஆர்வலர்களிடம் விற்பதற்காக வளர்த்து வருகின்றனர்.







