“மக்கள் பேரம் பேசும்போது வேடிக்கையாக உள்ளது,” என்கிறார் ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நுங்கு வியாபாரி குப்பா பப்பலா ராவ். “பெரிய கார்களில் வருகின்றனர், முகக்கவசம் அணிந்துள்ளனர், ரூ.50 நுங்கை ரூ.30-40க்கு கொடு என பேரம் பேசுகின்றனர்,” என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்கிறார்.
ரூ.20 மிச்சப்படுத்தி மக்கள் என்ன செய்வார்கள் என வியக்கிறார் பப்பலா ராவ். “அவர்களை விட எனக்கு பணத்தேவை அதிகம் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியுமா. சாதாரண நேரங்களில் இந்தப் பணம் எனது பேருந்து கட்டணத்திற்கு உதவும்.”
விசாகப்பட்டினம் நகரின் இந்திரா காந்தி வனஉயிரின பூங்கா அருகே தேசிய நெடுஞ்சாலை 16ல் மே 29ஆம் தேதி சாலையோரம் நுங்கு விற்ற வியாபாரிகளில் ஒருவர் 48 வயதாகும் பப்பலா ராவ். காக்கி நிற முகக்கவசம் அணிந்தபடி தனது வியாபாரத்தை அவர் கவனிக்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்களில் நுங்கு விற்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். “கடந்தாண்டு ஒரு நாளுக்கு ரூ.700-800 வரை வருமானம் கிடைத்தது - நுங்கு எங்களை ஒருபோதும் ஏமாற்றியதில்லை,” என்கிறார் அவர்.
கோவிட்-19 ஊரடங்கால் நுங்கு வியாபாரிகள் முக்கியமான வாரங்களில் வியாபாரத்தை இழந்துள்ளனர். மே மாத கடைசி வாரத்தில் தான் வியாபாரத்தை தொடங்கினர். “எங்களால் நுங்கும் விற்க முடியவில்லை, வேறு எங்கும் சென்று வேலை செய்யவும் முடியவில்லை,” என்கிறார் பப்பலா ராவின் மனைவியான 37 வயதாகும் குப்பா ராமா. அவர் வாடிக்கையாளர்களுக்கு நுங்குகளை கட்டிக் கொடுக்கிறார். விசாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்தபுரம் மண்டலத்தில் உள்ள தங்களது வீட்டிலிருந்து ராமாவும், பப்பலாவும் ஒன்றாகச் சேர்ந்து 20 கிலோ மீட்டர் பயணம் செய்து நுங்கு விற்க வருகின்றனர்.
“வியாபாரம் இந்தாண்டு சிறப்பாக இல்லை. ஒரு நாளுக்கு 30-35 டஜன் நுங்குதான் எங்களால் விற்க முடிகிறது என்கிறார்,” ராமா. “போக்குவரத்து, சாப்பாட்டுச் செலவு போக, நாள் ஒன்றுக்கு ரூ. 200-300 தான் நிற்கிறது,” என்கிறார் பப்பலா ராவ். கடந்தாண்டு தினமும் 46 டஜன் விற்றதையும் அவர் நினைவுகூர்கிறார். இந்தாண்டு ராமாவும், அவரும் 12 நாட்கள் மட்டுமே அதாவது ஜூன் 16 வரை மட்டுமே நுங்கு விற்றுள்ளனர். கோடைக் காலம் முடியும் நிலையில் உள்ளதால் ஜூன் மாத வியாபாரம் என்பது சரிந்து ஒரு நாளுக்கு 20 டஜன் மட்டுமே விற்பனையாகிறது.









