உரையாட ஆரம்பிக்கும் போது சில கிராமவாசிகள் வீர் நாராயண் சிங்கை ‘கொள்ளையன்’ என்று அழைக்கிறார்கள். நாம் பேசிவிட்டு கிளம்புபோது வீர் நாராயண் மீதான அவர்களின் பார்வை மென்மையாகிறது
“வீர் நாராயண் சிங்கா? அவன் கொள்ளைக்காரன் (லூட்டேரா). சில பேரு அவனைப் பெரிய நாயகனா ஆக்கிட்டாங்க. நாங்க அப்படியில்லை.” என்கிறார் சத்தீஸ்கரின் சோனாகான் கிராமத்தை சேர்ந்த சஹஸ்ராம் கன்வார். அவரைச் சுற்றியிருக்கும் சிலர் அது உண்மை எனத் தலையாட்டி ஆமோதிக்கிறார்கள். இன்னும் சிலர் அதே போன்ற கருத்துக்களைச் சொல்கிறார்கள்.
எங்களுடைய இதயமே நொறுங்கி விட்டது. நாங்கள் சோனாகானை ஆவலோடு தேடிக்கொண்டு வந்தோம். 1850-களின் மத்தியில் மிகப்பெரிய ஆதிவாசி எழுச்சியின் மையமாக இந்த ஊர் இருந்தது.. 1857-ன் விடுதலைப் போருக்கு முன்னரே நிகழ்ந்த பெரும் புரட்சி அது.அந்த போராட்டத்தில் ஒரு உண்மையான நாட்டார் நாயகன் தோன்றினான்.
இந்தக் கிராமத்தில் தான் ஆங்கிலேயருக்கு எதிராக வீர் நாராயண் சிங் கொதித்து எழுந்தார்.
1850களில் பஞ்சத்தின் கோரப்பிடியில் கிட்டத்தட்ட மக்கள் சிக்கிக்கொண்டு சின்னாபின்னம் ஆனார்கள். நிலைமை மோசமாகி கொண்டே இருந்த போது, சோனாகான் கிராமத்தை சேர்ந்த வீர் நாராயண் சிங், பணக்கார நிலப் பண்ணையார்களை எதிர்த்தான். “அவர் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை.” என்கிறார் இந்த ஆதிவாசி கிராமத்தின் மூத்த ஆதிவாசியான சரண் சிங். அவர் மட்டுமே நாராயண் சிங் குறித்து நல்ல விதமாகப் பேசுகிறார்.
வீர் நாராயண் சிங் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை.” என்கிறார் சோனாகான் எனும் ஆதிவாசி கிராமத்தின் மூத்த ஆதிவாசியான சரண் சிங். அவர் மட்டுமே நாராயண் சிங் குறித்து நல்ல விதமாகப் பேசுகிறார்
“பஞ்சகாலத்தில் பணக்காரர்களின் தானிய களஞ்சியங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. வியாபாரிகள், முதலாளிகளை ஏழைகள் சாப்பிடுவதற்காகத் தானிய கிடங்குகளைத் திறந்து விடும்படி வீர் நாராயணன் முழங்கினார். முதல் அறுவடை நடந்ததும் வாங்கிய தானியத்தை ஏழைகள் நிச்சயம் திருப்பித் தருவார்கள் என்று அவர் உறுதி தந்து கூடப் பார்த்தார். ஆனால், அது எதுவும் எடுபடாமல் போனது. ஒரு குன்றுமணி அரிசி கூடக் கிடையாது எனக் கைவிரித்தார்கள். ஏழைகளை ஒன்று திரட்டி தானியங்களைப் பிடுங்கி அவர் அனைவருக்கும் விநியோகம் செய்தார்.” என்கிறார் சரண் சிங். இந்தப் போராட்டம் வெகு சீக்கிரமே சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆதிவாசிகளுக்கும் உத்வேகம் கொடுத்தது. அவர்களும் தங்களைச் சுரண்டுபவர்களை எதிர்த்து போராடினார்கள்.
“இந்தப் போராட்டம் 1857-ன் விடுதலைப்போருக்கு முன்னரே துவங்கி விட்டது. இந்தப் போராட்டம் பின்னர் 1857 விடுதலை போராட்ட வீரர்களோடு தன்னை இணைத்து கொண்டது.” என்கிறார் போபாலின் பரகத்துல்லா பல்கலையின் பேராசிரியர் ஹிராலால் சுக்லா. இதன் பொருள், பம்பாயிலும், கல்கத்தாவிலும் அறிவுஜீவிகள் ஆங்கிலேய அரசு வெற்றிபெற வேண்டும் என்று பிரார்த்தனை கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த போது சத்தீஸ்கர் ஆதிவாசிகள் மகத்தான தியாகங்களைப் புரிந்தார்கள் என்பதே ஆகும்.
ஆங்கிலேய அரசு நாராயண் சிங்கை 1857-ல் தூக்கிலிட்டது.
சோனாகானில் இருக்கும் மக்கள் விடுதலைப் போரில் செய்யப்பட்ட தியாகங்களை எள்ளி நகையாடுபவர்கள் இல்லை. அவர்களே பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். “ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியா நமது நாடு. விடுதலை பெற்றதற்குப் பிந்தைய ஐம்பது வருடங்கள் போற்றுதலுக்கு உரியவை. ஏழைகளுக்குக் குறைவாகவே நன்மைகள் நிகழ்ந்தன என்றாலும் விடுதலையை மெச்சுகிறேன்.” என்கிறார் சிறு விவசாயி ஆன ஜெய்சிங் பைக்ரா.
சில சோனாகான் கிராமவாசிகள் வீர் நாராயணின் சமாதிக்கு அழைத்து சென்றார்கள்
இன்னமும் சோனாகான் கிராமத்தை பசி பிடித்து ஆட்டுகிறது. இந்தக் கிராமத்தின் பெயரில் மட்டுமே தங்கம் இருக்கிறது. ஆனால், ஆதிவாசி, ஆதிவாசி அல்லாத ஏழைகள் நிறையப் பேர் இந்தச் சத்தீஸ்கர் கிராமத்தில் உள்ளார்கள். “இந்த ஆண்டை விடப் போன பருவ காலத்தில் குறைவான மக்களே இந்தக் கிராமத்தில் இருந்தார்கள். சில சமயங்களில் நாங்கள் எல்லாரும் பஞ்சம் பிழைக்க நகரங்களுக்குச் சென்று விடுவோம்.” என்கிறார் ஷ்யாம்சுந்தர் கன்வார். இங்கே கல்வியறிவு இயக்கம் தோல்வியடைய அதுவும் முக்கியக் காரணம்.
‘பசியும், மோசமான சுகாதார வசதிகளும் சோனாகானின் பெரும் பிரச்சினைகள்.’ என்று பெண்கள் விளக்குகிறார்கள்
சோனாகான் ஒரு வனவிலங்கு சரணாலயத்தின் நடுவே உள்ளது. ஆகவே. வனம் சார்ந்த கடந்த கால, நிகழ்காலப் பிரச்சினைகள் அப்படியே உள்ளன. யாருக்கு எதிராக எல்லாம் வீர் நாராயணன் போராடினாரோ அந்த ஆதிக்க சக்திகள் இன்னமும் வலிமையோடு இயங்குகின்றன. வியாபாரிகள், கந்துவட்டிக் காரர்கள், நிலப்பிரபுக்கள். “உயிர் வாழ்வதற்காக நிலங்களைக் கூடச் சமயங்களில் அடமானம் வைக்க நேரிடும்.” என்கிறார் விஜய் பைக்ரா.
இப்படி வீர் நாராயண் போராடிய எல்லாச் சிக்கல்களும் உயிர்ப்போடு இருக்கும் போது ஏன் அவர் குறித்த நினைவுகள் செத்துக் கொண்டிருக்கின்றன?
இதற்கான பதில் “மத்திய பிரதேசத்தின் 1980-90 காலகட்ட அரசியலில் இருக்கிறது. பதிமூன்று வருடங்களுக்கு முன்னால் அஜித் சிங் இங்கே ஹெலிகாப்டரில் வந்தார். இந்த ஏப்ரல் மாதம் முக்கியமான மூன்று அமைச்சர்கள் வந்துவிட்டுப் போனார்கள். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டரில் தான் வந்தார்கள். இதற்கு நடுவே வேறு சிலரும் வந்து விட்டுப் போனார்கள்.” என்கிறார் போபாலில் உள்ள ஒரு அரசு அதிகாரி.
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக எழுந்த கிளர்ச்சி குறித்து மூத்தவர்கள் பேச மற்றவர்கள் காது கொடுத்து கேட்கிறார்கள்
ராய்ப்பூரில் இருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் சோனாகானுக்குப் பக்கத்தில் உள்ள நகரான பித்தோராவை சாலை பயணத்தில் இரண்டு மணிநேரம் ஆகிறது. ஆனால், பித்தோராவில் இருந்து முப்பது கிலோமீட்டரில் உள்ள கிராமத்தை அடைய 2 மணிநேரம் ஆகிறது. “இங்க யாருக்கேனும் உடல்நலம் மோசமானால் மருத்துவ உதவிக்கு 35 கிலோமீட்டர் தூரம் காட்டைக் கடந்து பயணிக்க வேண்டும்.” என்கிறார் ஜெய்சிங் பைக்ரா.
அர்ஜூன் சிங் திறந்து வைத்த மருத்துவமனை என்ன ஆனது? “அவர் திறந்து வைத்துவிட்டு போன பிறகு மருத்துவரே வந்தது இல்லை. ஒரே ஒரு கம்பவுண்டர் என்னென்ன மருந்து வாங்க வேண்டும் என்று மகிழ்வோடு எழுதி கொடுப்பார். ஆனால், மருந்துகளை வெளியே வாங்கிக் கொள்ள வேண்டும்.”
பிறகு ஏன் பெருந்தலைகள் இங்கே வருகிறார்கள். என்ன தான் செய்கிறார்கள்?
“ஒவ்வொருமுறையும் ஒரே கதை தான். நாராயண் சிங் குறித்து உணர்ச்சி பொங்க பேசுவார்கள். அவர்களின் வாரிசுகளுக்குப் பணம், பரிசுகள் தருவார்கள். கிளம்பி விடுவார்கள்.” என்கிறார்கள். அவர்களின் வாரிசுகள் யாரையும் எங்களால் பார்க்க முடியவில்லை.
“அவர்கள் இங்கே வசிப்பதில்லை. உண்மையில் அவர்கள் தான் வீர் நாராயண் சிங்கின் வாரிசுகளா என்றே தெரியவில்லை. அவர்களே அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், இங்குள்ள குல தெய்வத்தைக் கூட வணங்க மாட்டார்கள்.” என்கிறார் சரண் சிங்.
மத்திய பிரதேச அரசு வெளியிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பட்டியல்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ வெளியீடுகளைக் காண நேர்ந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் மரணமடைந்தார்கள். ஆனால், இவர்களுடைய பெயர் ஒன்றைக்கூட இந்த வெளியீடுகளில் காண முடியவில்லை. சத்தீஸ்கர், பஸ்தார் போராளிகள் பெயர்கள் கண்ணில் தென்படவே இல்லை. ஆனால், மிர்தாக்கள், சுபெயர்கள் இந்த வெளியீடுகள் முழுக்கக் காணக்கிடைக்கின்றன. வரலாறு வென்றவர்களால் எழுதப்படுகிறது. க்லாக்கள், அகர்வால்கள், குப்தாக்கள், துபேக்கள் ஆகியோரின்
எண்பதுகளில் மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்தார், அவருக்குப் போட்டியாக இருந்த சுக்லா சகோதரர்களை எதிர்கொள்ள முடிவு செய்தார். ஷ்யாமா சரண் சுக்லா மூன்று முறை மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்தார். வித்யா சரண் சுக்லா பல முறை மத்திய அமைச்சராக இருந்தார். அவர்களின் கோட்டையாகச் சத்தீஸ்கர் திகழ்ந்தது. மாநில காங்கிரசில் யார் பெரியவர் என்கிற உட்கட்சி போரில் வெற்றி பெற அர்ஜூன் சிங் அடித்து ஆடினார். அதற்கு அவருக்குக் கிடைத்த பகடைக்காய் தான் வீர் நாராயண் சிங்.
நாராயண் சிங்கின் பெயர் பாடப்புத்தகத்தில் இல்லை என்றாலும், இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத விடுதலை நாயகன் அவர். அதனால் அரசு அவரைத் தத்தெடுத்துக் கொண்டது.
வீர் நாராயண் சிங்கை கொண்டாடியதன் அரசியல் சுக்லாக்களை ஓரங்கட்டுவதே ஆகும். யார் சத்தீஸ்கரின் உண்மையான நாயகர்கள்? மேட்டுக்குடி சுக்லாக்களா? ஆதிவாசி தலைவர்களா? சத்தீஸ்கரின் மகத்தான பாரம்பரியம் யாருக்கு உரியது? கடந்த காலம் என்கிற போர்வையில் நிகழ்கால அரசியல் போர்கள் நிகழ்த்தப்பட்டன. வீர் நாராயணனை கடவுள் போலக் கொண்டாடி, தன்னைப் பழங்குடிகளோடு இணைத்துக்கொண்டு சுக்லாக்களை எதிர்கொண்டார் அர்ஜூன் சிங்.
வீர் நாராயண் சிங்கை அரசாங்க இயந்திரம் தனக்கு வசதியான வடிவத்தில் கட்டமைத்தது. அதனால் சில நன்மைகள் விளைந்தன. அவ்வளவாகக் கொண்டாடப்படாத ஒரு நாயகனை மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள். அதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால், அதற்குப்பின் இருந்த உள்நோக்கங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சோனாகான் நோக்கி வரும் அரசியல் தலைவர்கள் வீர் நாராயணன் யாருக்குச் சொந்தம் என்பதில் போட்டி போட்டுக்கொண்டார்கள். மருத்துவமனைகள், கட்டிடங்கள் திறக்கப்பட்டன. ஆனால், அவை அரிதிலும், அரிதாகத்தான் செயல்பட்டன. வேலைகள், நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன. வீர் நாராயணனின் பெயர் நீர்த்தேக்கங்கள், தோட்டங்கள் ஆகியவற்றுக்குச் சூட்டப்பட்டது. ஆனால், அவரின் கிராமத்தில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே லாபம் அடைந்தது.
மாநிலம் முழுக்க நாராயண் சிங்குக்கு ரசிகர்கள் கிடைக்க, அவரின் சொந்த கிராமத்தில் அவரின் மரியாதை வீழ்ந்தது. ஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டும் உதவிகளை அள்ளிக்கொடுப்பது சோனாகான் கிராமவாசிகளைக் கடுப்பேற்றுகிறது.
வீர் நாராயணின் எதிர்ப்பு அரசியல் காணாமல் போய் விட்டது. ஆழமற்ற அடையாள அரசியல் வென்று விட்டது. உண்மையான நாட்டார் நாயகன் மேட்டுக்குடியின் அரசியல் ஆட்டத்தில் அழிக்கப்பட்டார். அவர் ஆதிவாசிகளின் ஒற்றுமைக்காக ஓயாமல் போராடினார். அவர்கள் இன்று பிரிந்து கிடக்கிறார்கள். அரசியல் கீழ்மைகள் நிறைந்த எண்பதுகள் வந்துவிட்டன.
எங்களுடைய சோனாகான் பயணம் முடியப்போகிறது. கிராம மக்கள் வீர் நாராயண் மீது கொண்டிருந்த கடுமையான பார்வையைத் தளர்த்துகிறார்கள். அவர்களின் கோபங்கள் நியாயமானது என்றாலும், அதைத் தவறான் ஆளிடம் காட்டுகிறோம் என உணர்ந்தவர்களாகப் பேசுகிறார்கள். “அவர் மிகவும் நல்ல மனிதர். அவர் எங்கள் அனைவருக்காகவும் போராடினர் இல்லையா? அவர் சுயநலமில்லாதவர். ஏன் ஒரே ஒரு குடும்பம் மட்டும் பயன்பெற வேண்டும்?” எனக்கேட்கிறார் விஜய் பைக்ரா.
நாய்களுக்கு நவிலப்பட்ட நாயகனின் சமாதி: வீர் நாராயணின் சமாதி
சோனாகானில் வீர் நாராயண் இருமுறை இறந்தார். முதல் முறை ஆங்கிலேய அரசால் கொல்லப்பட்டார். இரண்டாவது முறை மத்திய அரசு கொன்றது. அவர் எழுப்பிய எல்லா பிரச்சினைகளும் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன.
This story originally appeared in The Times of India on August 27, 1997
இந்த தொடரில் மேலும் வாசிக்க
ஆங்கிலேயரை அசைத்துப் பார்த்த சாலிஹான்
பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 1
பனிமாராவின் வெறுங்கால் விடுதலை வீரர்கள் - 2
9௦ ஆண்டுகளாக தொடர்ந்த அகிம்சைப் போர்
பத்து முத்தான விடுதலைப் போராட்ட கதைகள்
கொதித்து எழப்போகும் கோயா மக்கள்
இருமுறை இறந்த விடுதலை வீரர் வீர் நாராயண்