“இந்த வெள்ளை நிற சோயாவை பார்த்தீர்களா?”, என தன் கைகளில் வைத்திருந்ததை காண்பித்தார் அசோக் கட்கல். “வழக்கமாக ஒரு குவிண்டால் ரூ.3000 முதல் 3500 வரை விலை கிடைக்கும், ஆனால் கரும்புள்ளிகள் மற்றும் பூஞ்சை பாதிப்பால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. இம்முறை எந்த வருமானமுன் ஈட்ட முடியாது”, என்றார்.
நவம்பர் 11ம் தியது ரதகள்ளி கிராமத்தில் அமைந்துள்ள தனது வயலில் பாதிக்கப்பட்ட பயிர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் கடகல். அவர் தனியாகவே அப்பணியை செய்து கொண்டிருந்தார். “எப்படி என்னால் ஒரு பணியாளருக்கு ஊதியம் வழ்ங்க முடியும்”, என தனது நெற்றியில் வழிந்தோடும் வியர்வையை துடைத்தவாறே வினவினார்,
கட்கல் பயிரிட்டிருந்த மூன்று ஏக்கர் நிலமும் அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் நீரில் மூழ்கியிருந்தது. கடந்த மாதம் பெய்த மழையில் அவரது பயிரில் 90% அளவிற்க்கு அழுகியும் போனது. அவரது கிராமம் அமைந்துள்ள நாசிக் மாவட்டம் தின்டோரி தாலுகாவில் அக்டோபர் 1ம் தியதி முதல் 12ம் தியதி வரை 179.2 மிமி மழை பொழிந்தது. வழக்கமாக இக்காலத்தில் சராசரியாக 71 மிமி மழை மட்டுமே பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறன.
பருவமழை துவங்கும் ஜூன் மாதத்தில் ரத்கள்ளியில் மழை குறைவாக இருந்த போதிலும், செப்டம்பர் மாத இறுதியில் அதிகரித்த மழை 51 வயதான அசோக்கிற்க்கு நல்ல விளைச்சலுக்கான நம்பிக்கையை விதைத்தது. ஆனால் எதிர்பாராமல் பெய்த அக்டோபர் மாத மழை அவரது நம்பிக்கையை சிதைத்துவிட்டது. அம்மாத இறுதியிலேயே பயிர் இழப்பை கிராம கணக்கீட்டாளருக்கு தெரிவித்த பின்பும் இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் எவரும் ஆய்வு செய்ய வருகை தரவில்லை.










