யசோதாபாய் ஜோர்வார் அவரது மாலை வேளைகளை பன்றிகளை விரட்டுவதில் செலவிடுகிறார். “இவை வயலில் இங்குமங்கும் அதிவேகமாக ஓடும். உண்மையில் இந்த நிலத்தால் எங்களுக்கு பயன் ஒன்றும் இல்லைதான். ஆனால், என்னை ஓய்வின்றி வைத்துக்கொள்வதற்கு நான் எதையாவது செய்ய வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
70 வயதை கடந்தவர் ஜோர்வார், கடந்த சில மாதங்களாக, தனது வீட்டில் அவர் தனியாக வசித்து வருகிறார். மஹாராஷ்ட்ராவில் உள்ள பீட் மாவட்டத்தில் உள்ள ஹத்கர்வாடி கிராமத்தில் வாழ்கிறார் அவர். “எனது இரண்டு மகன்களும், அவர்களின் மனைவிகள் மற்றும் 5 குழந்தைகளுடன் பாரமதிக்கு (இது மேற்கு மஹாராஷ்ட்ராவில் இங்கிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றுவிட்டார்கள்“ என்று அவர் கூறுகிறார். “அவர்கள் எங்கள் கிராமத்தைவிட்டு அக்டோபர் மாத இறுதியில், கரும்பு வெட்டுவதற்காக சென்றுள்ளனர். மீண்டும் மார்ச் மாத இறுதியில் திரும்பி வருவார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும், மராத்வாதாவின் விவசாயிகள், குறிப்பாக பீட் மாவட்டத்திலிருந்து, கரும்பு வயல்களில் தொழிலாளர்களாக பணிபுரியச் செல்வது வழக்கமான இடம்பெயர்வு தான். விவசாயம் மற்றும் கூலித்தொழிலில் கிடைக்கும் வருமானம் அவர்கள் வாழ்வதற்கு போதுமானதாக இருக்காது. ஒரு தம்பதியினர், ஒரு டன் கரும்பு வெட்ட ரூ.228 பெறுவதன் மூலம் 5 மாதத்தில் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும். ஆண்டுதோறும், பல குடும்பங்களுக்கு இந்த நிரந்தர வருமானம் மட்டுமே, பணத்திற்கான வழியாகும்.
‘எங்கள் இரண்டு ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய் கூட இருக்காது“ என்று தெளிவாகக் கூறுகிறார் ஜோர்வார். “விவசாய வேலைகள் நடைபெறும் காலங்களில், நாங்கள் வருமானத்திற்கு வேளாண் கூலித்தொழிலை சார்ந்திருக்கிறோம். தண்ணீரும் மலைப்பாங்கான இடங்களில் எளிதாக கிடைக்காது“ என்று அவர் மேலும் கூறுகிறார். அவரின் மகன்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஹத்கார்வாடியில் தங்கும் 6 – 7 மாதத்தில் அவர்கள், உணவுப்பயிர்களான சோளம், கம்பு மற்றும் துவரம்பருப்பு ஆகியவை பயிரிடுவார்கள். பெரும்பாலும் அதை வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துவார்கள். இந்த விளைச்சலையே ஜோர்வார் தனியாக இருக்கும்போது உணவுக்காக பயன்படுத்துவார்.









