விட்டோ பாண்டேவுக்கு கழிவறையை அடைவதற்கு 60 அடிகள் தேவைப்படும். இந்த சமமில்லாத நிலத்தில் அவரால் தனியாக அங்கு செல்ல முடியாது. சில நேரங்களில், அவரின் கையைப்பிடித்து, நடந்து அழைத்துச்செல்லும் ஒருவரின் துணைக்காக பல மணி நேரங்கள் வரை காத்திருக்கக் நேரிடும். “அடிக்கடி கீழே விழுவேன். விழுந்து எழுவேன். ஒருமுறை காளை மாடு முட்டியதில், சில வாரங்களுக்கு எனது உடல் வீங்கியிருந்தது“ என்று அவர் கூறுகிறார்.
பிறவியிலேயே விட்டோ, பார்வையற்றவர். அவரை வழக்கமாக, அவரது சகோதரரின் மனைவி கீதாதான் கழிவறைக்கு அழைத்துச் செல்வார். “இவர் என்னை கழிவறைக்கு அழைக்கும்போது நான் வேறு வேலை செய்துகொண்டு இருப்பேன். அதுதான் பிரச்னையாக இருக்கும“ என்று கீதா கூறுகிறார். அவர் திறந்தவெளியை பயன்படுத்துபவர். “இந்த கழிவறையில் தண்ணீர் வசதியும் இல்லாததால், அது மிகவும் அசுத்தமாக உள்ளது. இது ஒரு பயனற்ற கழிவறை“ என்று அவர் கூறுகிறார். அவரது கணவர் சனாதாக், விட்டோவின் மூன்று சகோதரர்களுள் இளையவர். அவர் லக்னோ மாவட்டத்தில், கோசாய்கஞ்ச் வட்டத்தில் உள்ள பக்காரி கிராமத்தில் உள்ள அவர்களின் 0.6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
பக்காரியில் கட்டப்பட்டுள்ள 203 கழிவறைகளில் பெரும்பாலானவை வசிக்கும் இடத்தில் இருந்து மிகத்தொலைவில் உள்ளது. உடைந்து விழும் நிலையிலும், பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. அடிப்படையான கழிவறை வசதி கூட இல்லாததால், அவர்கள் இயற்கை உபாதைகளை நீண்ட நேரத்திற்கு அடக்கி வைத்திருக்க வேண்டியுள்ளது, நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது, கிராமவாசிகள் முன் அவமானப்பட வேண்டியுள்ளது.
தாராவதி சாஹீ, இல்லத்தரசி, அவருக்கு வயிறு கோளாறு ஏற்படும்போது, தொலைவில் உள்ள கழிவறை அவசரமாகச் செல்லும்போது, மற்றவர்கள் வீட்டின் முன்புறமே மலம் கழித்துவிட நேரிடும். “இது எவ்வளவு அவமானகரமாக இருக்கும். அக்கம்பக்கத்தினர், என்னை அருவருப்பாக பார்ப்பார்கள். வயிறு சரியில்லாதபோது, எனக்கு மலத்தை அடக்குவது மிகச்சிரமமானது. நான் மலம் கழித்த இடத்தை, நாளொன்றுக்கு 5 முறை கழுவிவிடுவேன்“ என்று அவர் கூறுகிறார். 65 வயதில் கழிவறைக்கு சிறிது தூரம் நடந்து செல்வதே அவருக்கு கடினமான ஒன்றாகும். அவரின் 72 வயது கணவர், மட்டா பிரசாத் சாஹீவுக்கு, அவர்களின் மூன்று பிகா விளைநிலத்தில் வேலை செய்வதே கடினமாக இருக்கும் நிலையில், அவருக்கும் தாராவதிக்கு உள்ள அதே பிரச்னை உள்ளது. “நாங்கள் நிறைய பேரிடம் கைகட்டி நின்றோம். ஆனால் ஒருவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. கழிவறை கேட்டுக்கேட்டே நான் சோர்ந்துவிட்டேன்“ என்று அவர் கூறுகிறார்.






