தேவ் போரே 30 ஆண்டுகளாக கயிறுகளை தயாரித்து வருகிறார். பலவீனமான பருத்தி இழைகளை, அதிக இழுவிசைத்திறன் கொண்ட நூல்களிலிருந்து பிரிப்பார். அவற்றை வீட்டின் தரையில் போட்டு இழுப்பார். அவற்றை அவரது வீட்டின் தரையிலிருந்து ஒன்பது அடி உயரமுள்ள கூரையில் ஒரு கொக்கியில் மாட்டி, தலா 1.5 முதல் 2 கிலோ எடையுள்ள நூல்பண்டல்களாக மாற்றுவார். இத்தகைய 10 பண்டல்களை ஏழு மணி நேரத்தில் தயாரிக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இவற்றை தயாரிக்க வேண்டும்.
அவர்களின் குடும்ப வியாபாரத்தில் பருத்தி என்பது தாமதமாக நுழைந்ததுதான். பல தலைமுறைகளாக, அவரது குடும்பம் கத்தாழை செடியிலிருந்து கயிறுகளை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து செய்ய முடியாதபோது, அவர்கள் பருத்திக்கு மாறினர். இப்போது அதுவும் நலிந்த தொழிலாக மாறுகிறது. எங்கும் நைலான் கயிறுகள் பெருகிவிட்டன.
தேவு ஒரு சிறுவனாக இருந்தபோது, அவரது தந்தை மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை கிராமங்களுக்கு அருகிலுள்ள காடுகளுக்கு 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மராத்தியில் கய்பத் என்றும், உள்நாட்டில் ஃபட் என்றும் அழைக்கப்படும் நீலக்கத்தாழை செடியைச் சேகரிப்பார். அவர் சுமார் 15 கிலோவைக் கொண்டு வருவார். இலைகளின் முள் விளிம்புகளை அகற்றிய பிறகு, அவற்றை ஒரு வாரம் தண்ணீரில் ஊறவைத்து இரண்டு நாட்கள் உலர்த்துவார். இந்த செயல்முறையில் கயிறு தயாரிக்க இரண்டு கிலோ நார்ச்சத்து கிடைக்கும். தேவுவின் தாய் மைனாபாயும் இந்த வேலையைச் செய்வார். 10 வயதாக இருக்கும்போது தேவுவும் அம்மாவுக்கு அவ்வப்போது உதவுவார்.
1990 களின் முற்பகுதியில், போர்ஸ் மற்றும் பிற குடும்பங்கள் கத்தாழை இழைகளுக்குப் பதிலாக பருத்தி நூலைப் பயன்படுத்தத் தொடங்கின. பருத்தி நீண்ட காலம் நீடித்தது. அது தவிர, “மக்கள் காடுகளை வெட்டித் தள்ளிவிட்டனர். கத்தாழை செடியை நீண்டகாலம் ஊறவைத்தல் மற்றும் உலர்த்தும் செயல்முறையும் ஒரு காரணம். அதனால் கத்தாழை இழைகளை விட பருத்தி நூலைப் பயன்படுத்துவது எளிது ” என்கிறார் தேவ் .
1990களின் பிற்பகுதி வரை, அவரது கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கயிறுகளைத் தயாரித்தன என்று தேவு மதிப்பிடுகிறார். இவர் பெல்காம் மாவட்டத்தில் சிக்கோடி தாலுகாவின் போரகான் கிராமத்தில் வசித்து வருகிறார். மலிவான நைலான் கயிறுகளின் வருகையுடன் வருமானம் வீழ்ச்சியடையத் தொடங்கியபோது, பலர் அருகிலுள்ள கிராமங்களில் விவசாயப் பணிகளுக்குத் திரும்பினர். அல்லது அருகிலுள்ள இச்சல்கரஞ்சி மற்றும் ககல் நகரங்களில் உள்ள விசைத்தறிகள் அல்லது ஆட்டோக்களைப் பழுது பார்க்கும் பட்டறைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்றனர்.















