காதிமா நகரத்தை சேர்ந்த 41 வயதாகும் வழக்கறிஞர் அனில் சிங் ராணா, தாரு சமூகத்தை சேர்ந்தவர், நில உரிமைகளை தீர்மானிப்பதற்கான சட்ட செயல்பாட்டில் சிறிதளவும் நம்பிக்கை இல்லை. "இதுபோன்ற வழக்குகள் நீடித்துக் கொண்டே போகும். வழக்கமாக எங்கள் சமூகத்தில் பதிவுகள் மற்றும் ஆவணங்களை வைத்திருப்பதில் மோசமாக இருக்கின்றனர் மக்கள். நிலத்தை இழப்பது என்பது எளிதான காரியமல்ல. இது பல அடுக்குகளில் செயல்படுகிறது", என்கிறார்.
உத்தரகாண்டில் உள்ள சுமார் 40 கிராமங்களில் பழங்குடியினரின் உரிமைகளுக்காக பணிபுரியும் கிராம அளவிலான அமைப்புகளின் கூட்டமைப்பான பூமி அதிகார் மஞ்ச் (BAM) உடன் ராணா, கடந்த பத்தாண்டுகளில் பெரும்பகுதியை செலவழித்திருக்கிறார். 2009ஆம் ஆண்டில் BAM தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வனவாசிகளின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கும், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம் 2006ஐ செயல்படுத்த வேண்டி மாநில அரசை வலியுறுத்தியது. மஞ்சின் முறைகளான - விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் பரப்புரை - பழங்குடியினரின் நில உரிமைகள் போராட்டத்தில் சில வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளது.
2012 இல் கமலா இந்த மன்றத்திற்கு தான் சென்றார்.
"நாங்கள் எளிய மனிதர்கள். நீதிமன்றத்தை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. சமூக அழுத்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்", என்று அவர் கூறுகிறார். BAM களப்பணியாளர்களில் ஒருவரான அவரது மைத்துனி மினா தேவியுடன், கமலா தனது நிலத்தை திரும்பக் கேட்கத் தொடங்கினார். "நாங்கள் அவர்களுடைய (கடன் கொடுப்பவர்கள்) கடைகளுக்குச் சென்று நின்றோம். என்னிடம் பேசுங்கள், ஆவணங்களை காட்டுங்கள் என்று நான் கேட்டேன். எங்களுடன் நாங்கள் கிராமத்தில் இருந்து வேறு சில பெண்களையும் அழைத்துச் சென்றோம்", என்றார்.
கடந்த ஆண்டு அவரது விடாமுயற்சியின் விளைவாக ஒரு கந்துவட்டிக்காரர் 3.5 ஏக்கர் நிலத்தை திரும்பக் கொடுத்தார். தனது பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் கூறும் போது, நாங்கள் அனைவரும் (கடன் கொடுப்பவர்கள்) இந்த யுத்தியை பயன்படுத்தினால் எங்களது வேலை முடிவடைந்துவிடும். எங்கள் வசம் உள்ள நிலம் அனைத்தையும் இழக்க நேரிடும்", என்று கூறினார்.
கமலாவின் இளைய மகன், 20 வயதாகும் கேசவ், குடும்பத்தின் நிலப் பதிவேடுகளை கண்டுபிடிப்பதில் முழு நேரத்தையும் அற்பணிப்பதற்காக இப்போது கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டார், இதன் மூலம் தேவையான அழுத்தத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். அவரது தந்தையின் கையொப்பமிட்ட வெற்று முத்திரைத்தாளை ஒரு கந்துவட்டிக்காரரிடம் இருந்து மீட்டெடுத்ததே இதுவரை அவர் சாதித்திருக்கும் மிகப்பெரிய சாதனையாகும்.
மங்கோலாவின் போராட்டம் அவர் தனது சொந்த சகோதரருக்கு எதிராகவே போட்டியிடவே வேண்டியிருப்பதால் மிகவும் கடினமாக இருக்கிறது. பிரிந்து சென்ற பூல், "இப்போது அவர் குடும்ப விஷயத்தை வெளியாட்களிடம் எடுத்துச் சென்று விட்டதால், நான் ஏன் அவருடன் தீர்வுகாண வேண்டும்?", என்று கேட்கிறார்.
மேலும் பல பெண்களைப் போலவே மங்கோலாவும் நிலத்தின் மீதான தனது உரிமையை முழுமையாக பார்க்க முடியாது. அந்த எண்ணத்தை விளக்க அவர் போராடுகிறார்: “அனைவரும் மகள்களுக்கு நிலம் கொடுப்பதில்லை. அவர்களுடைய மனோபாவம் எப்படி இருக்கிறது என்றால் அவளுக்கும் கொஞ்சம் கொடுப்போம் ஆனால் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களின் சம்மதத்துடன். இது சரியா என்று எனக்கு தெரியவில்லை”. ஆனால் “நிலம் எங்களது கலாச்சாரம், எங்கள் மரபு. நாங்கள் அதை வணங்குகிறோம் அதன் மூலமே வளர்கிறோம். மேலும் என்னை போன்ற பெண்களுக்கு இது ஒரு உத்தரவாதமும் கூட”, என்று அவர் மேலும் கூறினார்.
கமலாவின் மனதில் அப்படி ஒரு சந்தேகமே இல்லை. மீட்ட விளைநிலத்தில் நின்று பல வருடங்கள் கழித்து அந்த நிலம் பிறருக்கு செல்வதை மௌனமாக பார்த்ததன் திடத்துடன் பேசுகிறார்.
"இந்த நிலம் என்னுடையது. நான் அதை திரும்பப் பெறுவேன். எனக்கு நானே கடன்பட்டிருக்கிறேன். இதற்காக நான் எவ்வளவு போராடினாலும் பரவாயில்லை", என்கிறார்.
இந்தியாவில் ஏழைகளுக்கு நிலத்தை மீட்டெடுத்தல் மற்றும் சொத்துரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செயல்படும் N/Core அறக்கட்டளை வழங்கிய தாக்கம் ஏற்படுதியதற்கான விருதை இந்த எழுத்தாளர் பெற்றிருக்கிறார்.
தமிழில்: சோனியா போஸ்