“சில்லு, பம்பரம், சீட்டு விளையாட்டு,” என விரைந்து சொல்கிறார் அகமது.
10 வயது நிறைந்த அவர் உடனே சொன்னதை சரி செய்து தெளிவாக்குகிறார்: “நான் இல்லை. அல்லாரக்காதான் சில்லு விளையாடுவான்.”
இருவருக்கும் இடையே இருக்கும் ஒரு வருட இடைவெளியை சுட்டிக்காட்டி தான் மூத்தவன் என்பதை வெளிக்காட்டும் ஆர்வத்தில், “பெண்கள் விளையாடும் விளையாட்டுகள் எனக்கு பிடிக்காது. நான் மட்டை பந்து (கிரிக்கெட்) பள்ளி மைதானங்களில் விளையாடுவேன். பள்ளி இப்போது மூடியிருக்கிறது. ஆனால் நாங்கள் சுவரேறி மைதானத்துக்குள் நுழைவோம்,” என்கிறார் அகமது.
ஒன்று விட்ட சகோதரர்களான இருவரும் ஆஷ்ரம்பரா பகுதியிலுள்ள பனிபித் ஆரம்பப் பள்ளியில் படிக்கின்றனர். அல்லாரக்கா 3ம் வகுப்பும் அகமது 4ம் வகுப்பும் படிக்கின்றனர்.
அது 2021ம் ஆண்டின் டிசம்பர் தொடக்கம். மேற்கு வங்கத்தின் பெல்தாங்கா - 1 ஒன்றியத்தில் வாழ்வாதாரத்துக்கு பீடி சுருட்டும் பெண் தொழிலாளர்களை சந்திக்க சென்றிருந்தோம்.
ஒரு தனி மாமரத்துக்கு அருகே நின்றோம். ஒரு பழைய இடுகாட்டுக்கு ஊடாக செல்லும் ஒரு குறுகலான சாலையின் முனையில் அம்மரம் இருந்தது. தூரத்தில் மஞ்சள் ஜொலிக்கும் நிலங்கள். மீளாத்துயிலில் இறந்தோரின் ஆன்மாக்கள் உறங்கிக் கொண்டிருந்த பேரமைதி இருந்தது. பறவைகள் கூட, பழம் காய்க்கும் வசந்தகாலத்தில் திரும்ப வரலாமென மரத்தை அகன்றிருந்தன.
திடுமென ஓடி வந்த அகமது மற்றும் அல்லாரக்காவின் சத்தம் அக்காட்சியின் அமைதியை குலைத்தது. தாண்டியும் குதித்தும் சில நேரங்களில் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டும் வந்தனர். நாங்கள் இருப்பதை அவர்கள் கவனித்தது போல் தெரியவில்லை.
மரத்தை அடைந்ததும் மரத்தில் சாய்ந்து அவர்களின் உயரங்களை அளந்து கொள்கின்றனர். மரத்தில் இருக்கும் குறியீடுகள் இது அன்றாடம் நடக்கும் செயல் என்பதை சுட்டிக்காட்டின.
“நேற்றைவிட உயரம் அதிகரித்திருக்கிறதா?” என அவர்களை கேட்டேன். சற்றே இளையவரான அல்லாரக்கா பற்களில்லாத வாயில் புன்னகை உதிர்த்து, “அதனால் என்ன? நாங்கள் வலிமையாக இருக்கிறோம்!” என்கிறார்.
ஒரு வருடம்தான் மூத்தவர். அகமது வாய் முழுக்க பல்லாக, “என்னுடை பால் பற்கள் எல்லாம் போய்விட்டது. இப்போது நான் பெரிய பையன். அடுத்த வருடம் நான் பெரிய பள்ளிக்கு செல்வேன்,” என்கிறார்.
அவர்களுக்கு அதிகரித்து கொண்டிருக்கும் வலிமையை காட்டுவதற்காக சிரமப்பட்டு கை கால்களை கொண்டு அணில் போல மரத்தில் ஏறுகின்றனர். ஒரு கணத்தில் இருவரும் மரத்தின் மத்தியிலுள்ள கிளைகளை அடைந்து விட்டனர். அவற்றில் ஏறி இருவரும் கால்கள் தொங்கும் வகையில் அமர்ந்து கொண்டனர்.
”இது எங்களுக்கு பிடித்த விளையாட்டு,” என்கிறார் அகமது சந்தோஷத்துடன். “வகுப்புகள் இருந்தபோது பள்ளி முடிந்த பிறகு இப்படி செய்வோம்,” என்கிறார் அல்லாரக்கா. இரு சிறுவர்களும் தொடக்கப் பள்ளியில் இருக்கின்றனர். இன்னும் பள்ளிக்கு திரும்பவில்லை. கோவிட் தொற்று காரணமாக நீண்ட காலத்துக்கு கல்வி நிறுவனங்கள் மார்ச் 25, 2021-லிருந்து மூடப்பட்டிருந்தன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும் உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்தான் டிசம்பர் 2021-ல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
“என் நண்பர்கள் இல்லாமல் தவிக்கிறேன்,” என்கிறார் அகமது. “இம்மரத்தில் ஏறி பச்சை மாங்காய்களை கோடை காலத்தில் திருடியிருக்கிறோம்.” பள்ளி திறந்திருக்கும்போது சிறுவர்களுக்கு கிடைக்கும் சோயா துண்டுகளும் முட்டைகளும் இப்போது அவர்களுக்கு கிடைப்பதில்லை. இப்போது அவர்களின் தாய்கள் பள்ளிக்கு மாதமொரு முறை சென்று மதிய உணவு தொகுப்பு பெற்று வருவதாக அல்லாரக்கா சொல்கிறார். தொகுப்பில் அரிசி, மைசூர் பருப்பு, உருளைக்கிழங்குகள் மற்றும் சோப் ஆகியவை இருக்கும்.
“நாங்கள் வீட்டில் படிக்கிறோம். எங்களின் தாய்கள் பாடம் கற்று கொடுக்கிறார்கள். ஒரு நாளில் இருமுறை நான் எழுதவும் படிக்கவும் செய்கிறேன்,” என்கிறார் அகமது.
“ஆனால் உன் தாய் நீ மிகவும் சுட்டி என்றும் அவர் சொல்வதை கேட்பதில்லை என்றும் சொன்னார்,” என நான் சொன்னேன்.
“நாங்கள் சிறுவர்கள்தானே.. அம்மாவுக்கு அது புரிவதில்லை,” என்கிறார் அல்லாரக்கா. அவர்களின் தாய்கள் விடியற்காலை தொடங்கு நள்ளிரவு வரை வீட்டு வேலைகள் செய்கின்றனர். குடும்பங்களுக்கு வருமானம் ஈட்டவென நேரம் கிடைக்கும்போதெல்லாம் பீடி சுருட்டுகின்றனர். அவர்களின் தந்தைகள் தூரத்து மாநிலங்களின் கட்டுமான தளங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். “அப்பா வீட்டுக்கு வரும்போது அவரது செல்பேசியை நாங்கள் எடுத்துக் கொண்டு அதில் விளையாடுவோம். அதனால்தான் அம்மா கோபப்படுவார்,” என்கிறார் அல்லாரக்கா.
செல்பேசிகளில் அவர்கள் விளையாடும் விளையாட்டுகள் சத்தம் மிகுந்தவை: “துப்பாக்கி சூடு உண்டு. துப்பாக்கி மோதலும் சண்டைகளும் அதிகம் இருக்கும்.” தாய்கள் கண்டிக்கும்போது அவர்கள் தப்பி மொட்டை மாடி அல்லது வெளியே செல்பேசிகளுடன் சென்று விடுவார்கள்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே இரு சிறுவர்களும் கிளைகளில் நகர்ந்து இலைகள் சேகரிக்கின்றனர். ஒரு இலையையும் வீணடிக்காமல் இருப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். அதற்கான காரணத்தை அகமது சொல்கிறார்: “எங்களின் ஆடுகளுக்காக இவற்றை பறிக்கிறோம். 10 ஆடுகள் இருக்கின்றன. இந்த இலைகள் அவற்றுக்கு பிடிக்கும். எங்களின் அம்மா அவற்றை கொண்டு சென்று மேய்ப்பார்.”
சடுதியில் அவர்கள் மரத்திலிருந்து இறங்கி, நடுப்பகுதியை அடைந்ததும் இலைகள் சிதறாமல் தரையில் குதிக்கின்றனர். “உங்களை போல் வளர்ந்தவர்கள் நிறைய கேள்வி கேட்கிறீர்கள். எங்களுக்கு தாமதமாகிறது,” என சொல்லி அகமது கிளம்புகிறார். இருவரும் குதித்தும் தாண்டியும் மீண்டும் அதே தூசு நிறைந்த சாலையில் நடந்து செல்கின்றனர்.
தமிழில் : ராஜசங்கீதன்