நிலவுடமையாளர்களிடம் 1000 ரூபாய் கடன் வாங்கி இங்கு வந்திருக்கிறோம். அதற்கு பதிலாக 4-5 நாட்களுக்கு நாங்கள் நிலத்தில் வேலை செய்வோம்,” என்கிறார் 45 வயது விஜய்பாய் கங்கோர்டே. மும்பைக்கு செல்லும் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஜனவரி 23ம் தேதி மதியம் ஒரு டெம்ப்போ வாகனத்தில் கோல்ஃப் க்ளப் மைதானத்துக்கு வந்து சேர்ந்தார்.
விஜய்பாயின் 41 வயது உறவினரான தாராபாய் ஜாதவ்வும் நாசிக்கின் மொகதி கிராமத்திலிருந்து அவருடன் பயணித்து வந்திருக்கிறார். இருவரும் விவசாயத் தொழிலாளர்களாக அங்கு 200-250 ரூபாய் நாட்கூலிக்கு பணிபுரிகின்றனர்.
மகாராஷ்டிராவின் நாசிக், நாந்தெட், நந்துர்பார் மற்றும் பல்கர் மாவட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 15000 பேர் வந்திருந்த விவசாயிகளுடன் சேர்ந்து 180 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆசாத் மைதானத்தில் நடக்கும் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு செல்ல இருவரும் வந்திருந்தார்கள். ”எங்களின் வாழ்வாதாரத்துக்காக நாங்கள் பேரணி செல்கிறோம்,” என்கிறார் தாராபாய்.
தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தெற்கு மும்பையில் இருக்கும் கவர்னர் மாளிகையான ராஜ் பவன் நோக்கி நடக்கும் பேரணியை சம்யுக்தா ஷெத்காரி கம்கர் மோர்ச்சா அமைப்பு ஜனவரி 25-26 தேதிகளில் ஒருங்கிணைத்திருக்கிறது. அகில இந்திய விவசாய சங்கம் ஒன்று கூட்டிய மகாராஷ்டிராவின் 21 மாவட்ட விவசாயிகள் போராட்டங்களுக்காக மும்பையில் திரண்டு கொண்டிருக்கின்றனர்.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும்.
மூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர்.விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
பட்டியல் சாதியை சேர்ந்த விஜய்பாயும் தாராபாயும் மும்பைக்கு டெம்ப்போவில் வந்து போக தலா 1000 ரூபாய் கட்டணம் கட்டியிருக்கின்றனர். சேமிப்பு எதுவும் இல்லாததால் கடன் வாங்கியிருந்தார்கள். “ஊரடங்கு காலத்தில் எங்களுக்கு வேலை ஏதுமில்லை,” என்கிறார் தாராபாய். “மாநில அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கு 20 கிலோ இலவச கோதுமை கொடுப்பதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் பத்து கிலோ மட்டுமே விநியோகிக்கப்பட்டது.
விஜய்பாயும் தாராபாயும் பேரணியில் கலந்துகொள்வது முதல் முறையல்ல. “2018 மற்றும் 2019 ஆண்டு பேரணிகளிலும் நாங்கள் கலந்துகொண்டோம்,” என்கிறார்கள். நிலவுரிமை, பயிர்க்கான விலை, கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் முதலியவற்றை கோரி நாசிக்கிலிருந்து மும்பைக்கு மார்ச் 2018-லும் பிப்ரவரி 2019-லும் நடத்தப்பட்ட
விவசாயிகள் நெடும்பயண
த்தையும் குறிப்பிடுகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை நாசிக்கிலிருந்து எதிர்ப்பதும் முதன்முறை அல்ல. 2020, டிசம்பர் 21-ல் நாசிக்கில் 2000 விவசாயிகள் திரண்டனர். அவர்களில் 1000 பேர் தில்லி எல்லைகளில் நடக்கும் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்ள சென்றனர்.
“பழங்குடிகளாகிய எங்களின் குரலை கேட்க வைக்க உரிமை கேட்கும் பேரணி மட்டுமே வழி. இப்போதும் எங்களின் குரல்களை கேட்க வைப்போம்,” என்னும் விஜய்பாய் அகில இந்திய விவசாய சங்கத் தலைவர்களின் பேச்சுகளை கேட்க தாராபாய்யுடன் மைதானத்தின் மையத்துக்கு செல்கிறார்.
எல்லா வாகனங்களும் சேர்ந்தபிறகு, மாலை 6 மணிக்கு நாசிக்கை விட்டு கிளம்பின. நாசிக் மாவட்டத்தின் கந்தாதேவி கோவிலில் போராட்டக்காரர்கள் இரவு நேரத்தை கழித்தனர். அவர்களில் பலர் எளிய உணவு கட்டி எடுத்து வந்திருந்தனர். ரொட்டியையும் பூண்டு சட்னியையும் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தனர். உண்டு முடித்த பிறகு அடர்ந்த போர்வைகளை கோவிலருகே விரித்து உறங்கினர்.
ஆசாத் மைதானத்துக்கு 135 கிலோமீட்டர்கள் இருக்கின்றன.
அடுத்த நாள் திட்டம் கசாரா கணவாய் வழியாக நடந்து மும்பை-நாசிக் நெடுஞ்சாலையை அடைவதாக இருந்தது. காலை 8 மணிக்கு அவர்கள் கிளம்பிவிருந்தபோது சில விவசாயத் தொழிலாளர்கள் அவர்களின் குழந்தைகளை பற்றி பேசினர்.விவசாயத்தில் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியும் பேசினர். “என்னுடைய மகனும் மகளும் அவர்களின் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் கூட குறைவான 100-150 ரூபாய் நாட்கூலிக்கு நிலங்களில்தான் வேலை பார்க்கின்றனர்,” என்கிறார் நாசிக்கை சேர்ந்த 48 வயது முகுந்த கோங்கில். முகுந்தாவின் மகன் வர்த்தக பட்டப்படிப்பு படித்திருக்கிறார். மகள் கல்வியயலில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். ஆனால் இருவரும் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். “வேலைகள் பழங்குடி அல்லோதோருக்குதான் கிடைக்கும்,” என்கிறார் பழங்குடி சமூகத்தை சேர்ந்த முகுந்தா.
”கல்லூரியில் என் மகன் கஷ்டப்பட்டு படித்தான். தற்போது தினசரி நிலத்தில் வேலை பார்க்கிறான்,” என்கிறார் வார்லி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 47 வயது ஜனிபாய் தாங்கரே. “என் மகள் பதினைந்தாம் வகுப்பு (இளங்கலை படிப்பு) முடித்திருக்கிறாள். த்ரும்பகேஷ்வரில் வேலைக்கு முயற்சித்தாள். கிடைக்கவில்லை. என்னை விட்டுவிட்டு மும்பை செல்ல அவள் விரும்பவில்லை. நகரம் மிகவும் தூரத்தில் இருக்கிறது. வீட்டு உணவு அவளுக்கு கிடைக்காது,” என்கிறார் அவர் மிச்ச உணவை கட்டி டெம்ப்போவில் பையை ஏற்றியபடி.
விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கணவாயிலிருந்து 12 கிலோமீட்டர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷமிட்டபடி கொடிகளோடு நடந்து நெடுஞ்சாலையை அடைந்தனர். மூன்று வேளாண் சட்டங்களையும் புதிய தொழிலாளர் விதிகளையும் ரத்து செய்ய வேண்டுமென்பதும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான உறுதியும் நாடுமுழுக்க கொள்முதல் வசதியுமே அவர்களின் கோரிக்கைகள் என்கிறார் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் அஷோக் தவாலே. “இந்த பேரணி, தில்லியிலும் நாடு முழுமையிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் மத்திய அரசின் நவதாராளமய, கார்ப்பரெட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக நடத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களுக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும்,” என்னும் தவாலே அந்தக் குழுவுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
நெடுஞ்சாலையை அடைந்ததும் விவசாயிகள் வாகனங்களில் ஏறி தானேவுக்கு புறப்பட்டனர். செல்லும் வழியில் பல அமைப்புகள் நீரும் சிற்றுண்டியும் பிஸ்கட்டுகளும் கொடுத்தன. மதிய உணவுக்காக தானேவிலிருந்து குருத்வாரா ஒன்றில் நின்றனர்.
ஜனவரி 24ம் தேதி இரவு 7 மணி ஆனபோது ஆசாத் மைதானத்தை விவசாயிகள் குழு வந்தடைந்தது. சோர்வுற்றிருந்தாலும் உற்சாகத்துடன் இருந்தனர். பல்கர் மாவட்ட விவசாயிகள் சிலர் தர்பா இசைக்கருவிக்கு ஏற்ப பாடியபடியும் ஆடியபடியும் மைதானத்துக்குள் நுழைந்தனர்.
“எனக்கு பசிக்கிறது. உடல் முழுக்க வலிக்கிறது. கொஞ்சம் உணவு மற்றும் ஓய்வுக்கு பிறகு நான் சரியாகி விடுவேன்,” என்கிறார் விஜய்பாய் அவர் வந்த விவசாயக் குழுவுடன் அமர்ந்தபடி. “இது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல” என்கிறார் அவர். “இதற்கு முன்னும் நாங்கள் நடந்திருக்கிறோம். இனியும் நடப்போம்.”
தமிழில்: ராஜசங்கீதன்