சம்ராவ் மற்றும் அஞ்சம்மா கட்டாலே ஆகிய இருவருக்கும் உடல்நிலை சரியில்லை. ஆனால் அவர்கள் இருவரும் அதைப் பற்றி எதுவும் செய்ய முயற்சிப்பதை நிறுத்தி விட்டனர். "மருத்துவர்கள்? சிகிச்சை? இவையெல்லாம் மிகவும் விலை அதிகம்", என்கிறார் சம்ராவ். வார்தாவின் அஸ்தி கிராமத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் பல லட்சக்கணக்கான மக்களைப் போலவே இத்தகைய முடிவை எடுத்திருக்கின்றனர். இருபத்தியோரு சதவீத இந்தியர்கள் தங்களுக்கு வரும் எத்தகைய நோய்களுக்கும் எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் பெறாமல் இருக்கின்றனர். (இது கடந்த தசாப்தத்தில் 11 சதவீதமாக இருந்து உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது) அவர்களால் அதற்கு செலவு செய்ய முடியவில்லை. "மேலும் நாங்கள் மருத்துவர்களிடம் சென்றால், மருந்துகள் எப்படி வாங்குவது?" என்று கேட்கிறார் சம்ராவ்.
இவர்களது மகன் பிரபாகர் கட்டாலே கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார். விவசாயத் துறையில் உள்ள பலரைப் போலவே அவரும் அந்தத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். "அவர் கடன் நெருக்கடியால் தனது வாழ்வை முடித்துக் கொண்டார்", என்று சம்ராவ் கூறுகிறார். அவர்களது இரண்டாவது மகனும் இந்த சோகத்தை தொடர்ந்து மன அழுத்தத்தில் உள்ளார் அதனால் அவரும் தனது வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. அவரும் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.
இன்று வளர்ந்துவரும் மற்றும் ஒழுங்கு படுத்தப்படாத தனியார் மருத்துவத்துறை 'ஆரோக்கியமே செல்வம்' என்ற பழமொழிக்கு ஒரு புதிய அர்த்தத்தை அளிக்கிறது. எந்த ஒரு பொது சுகாதார சேவைகளின் வீழ்ச்சியும் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பயிற்சியாளர்களின் லாபத்தை அதிகரிக்கின்றனர் என்பதையே குறிக்கிறது. நாடு முழுவதும் கிராமப்புற குடும்பங்களை கடனில் ஆழ்த்துவதில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது முக்கிய அங்கமாக ஆரோக்கியம் இருந்து வருகிறது. (இந்தியாவின் தனிநபர் சுகாதார செலவீனம் உலகளவில் மிக குறைவான ஒன்றாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே சுகாதாரத்திற்காக அரசு செலவிடுகிறது.)
அதே மாவட்டத்தின் வைஃபாத் கிராமத்தில் உள்ள விவசாயி கோபால் வித்தோபா யாதவ் தனது நிலத்தை அடமானம் வைத்து மருத்துவச் செலவு செய்தார். "மருத்துவமனையில் வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே இருந்தேன் அதற்கு எனக்கு பத்தாயிரம் ரூபாய் செலவானது", என்று அவர் புகார் தெரிவிக்கிறார். இன்னும் பலர் இதை விட அதிகமாக செலவு செய்து இருக்கின்றனர். ஆனால் யாதவ் தனக்கு பணம் தேவைப்பட்டதால் தனது ஒன்பது ஏக்கர் நிலத்திற்கான தலைப்பு பத்திரத்தை பிரித்தார். அடுத்தடுத்து வந்த மோசமான ஆண்டுகள் அதை உறுதி செய்தன. "நான் தான் நிலத்தை வைத்திருக்கிறேன், ஆனால் தலைப்பு பத்திரம் கடன் கொடுப்பவரிடம் இருக்கிறது", என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.
அவரது அண்டை வீட்டுக்காரரான விஸ்வநாத் ஜாடே 8 உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தை 4 ஏக்கர் நிலத்தை வைத்து நடத்திவருகிறார். தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவானது மேலும் எம்ஆர்ஐ ஸ்கேனிற்கு 5 ஆயிரம் ரூபாய் ஆனது, மருத்துவமனையில் அறையில் தங்குவதற்கு 7,500 ரூபாய் ஆனது இதுபோக மருந்துகளுக்கு மட்டும் 20,000 ரூபாய் செலவானது. இதற்கு மேலும் தனியாக பயணச் செலவும் இருந்தது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் ஜாடேவுக்கான மருத்துவச் செலவு 65 ஆயிரம் ரூபாய்.
துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் இதுபோன்ற பல குடும்பங்கள் இப்படித்தான் ஆரோக்கியத்திற்கும் சேர்த்து செலவு செய்து வருகின்றனர். விவசாய நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நம்தியோ பாண்டே கடந்த வருடம் நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கும் அதிகமான மருத்துவச் செலவுகள் இருந்தது. "அவர் சந்திரபூர், யாவத்மால் மற்றும் வாணி ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்", என்று யாவத்மாலை சேர்ந்த கொத்துடா கிராமத்திலிருக்கும் அவரது தம்பி பாண்டுரங் தெரிவித்தார். "மொத்தத்தில் அவரது உடல்நல பிரச்சினைகளுக்காக அவர் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்து உள்ளார்".



